பிறகு சந்திப்போம்
இன்னுமொரு நாள் பேசுவோம்
திரும்பவும் வருவேன்
உன்னை காயப்படுத்தியிருந்தால்
உன்னை கோபப்படுத்தியிருந்தால்
உனக்கதிக நம்பிக்கைகள்
தந்திருந்தால்
உன்னை சங்கடப்படுத்தியிருந்தால்
என்னை மன்னித்துக்கொள்
உன்னை எனக்குப் பிடிக்கும்
உன்னை நான் மிகவும்
நேசிக்கிறேன்
உன்னை நான் என்
நினைவில் வைத்திருப்பேன்
என் பிரார்த்தனைகளில்
நீயும் இருப்பாய் உன் மீதான
என் அக்கறைகள்
எப்போதும் குறையாது
நீ எனக்காக வருத்தப்படாதே
இறுதியாக
நீ என்னிடம் ஏதாவது
சொல்ல விரும்புகிறாயா ?
விடைபெறுதலில்
இப்படியாக இத்தனை
சம்பிரதாயங்கள் இருக்கையில்
நீயோ
நமக்கிடையில்
ஒளிர்ந்து கொண்டிருந்த
ஒரு பச்சை விளக்கினை
எது வித
முன்னறிவிப்புகளுமின்றி
அணைத்திருக்கிறாய்
ஒரு பெருஞ் சுமையை
வலிதாங்காமல்
படாரென கீழே போட்டு
உடைப்பதைப்போல்!!