மியன்மாரில் ஆட்கடத்தலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள இலங்கையரை மீட்டு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்னெடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இலங்கையரை மீட்பதற்காக மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து அமைச்சர் பணியாற்றி வருகின்றார்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழில்வாய்ப்புகள் வழங்குவதாக வெளியிடப்பட்டிருந்த போலி பிரசாரத்தை நம்பிய இந்த இலங்கையர், மியன்மாரின் மியாவாடி பகுதியில் பல்வேறு நிகழ்நிலை மோசடிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக மியன்மாரின் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு அமைச்சர் அலி சப்ரி எடுத்துக்கூறியதுடன், பாதிக்கப்பட்ட இலங்கையரை மீட்பதற்கான உதவியையும் கோரினார். பாதிக்கப்பட்ட இலங்கையரை துரிதமாக மீட்பதற்கான முயற்சியின் பயனாக கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள மியன்மார் தூதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் யு.எல்.மொஹமட் ஜௌஹர் சந்தித்து கலந்துரையாடினார். இதற்கிடையில் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து பாதிக்கப்பட்ட இலங்கையரை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதகதியில் முன்னெடுக்கப்படுமென்று மியன்மார் அரசாங்கமும் உறுதியளித்துள்ளது.
இந்த இலங்கையரின் நல்வாழ்வு மற்றும் அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக தென்கிழக்காசியாவின் அண்டை நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு நெருக்கமாக செயற்படுகின்றது. இதேவேளை ஆட்கடத்தலுக்குள்ளானவர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருவதாகக் கூறி சில அமைப்புகள், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரிடம் பணம் அறவிட முயற்சிப்பதாக தெரியவருகின்றது. ஆகையால், இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.