Home » தமிழக தரப்பு நியாயப்படுத்தலை எந்த விதத்திலும் ஏற்க முடியாது
மீனவர் கைதால் கச்சதீவு புறக்கணிப்பு

தமிழக தரப்பு நியாயப்படுத்தலை எந்த விதத்திலும் ஏற்க முடியாது

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா

by Damith Pushpika
February 25, 2024 6:20 am 0 comment

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை காரணமாகவே கச்சதீவு திருவிழாவை புறக்கணித்தோமென்ற இந்திய மக்களின் நியாயப்படுத்தலை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைவாகவே நாம் செயற்படுகிறோமென குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டு கச்சதீவு திருவிழாவுக்கு முன்னர் சுமுகமான தீர்வு எட்டப்படுமென்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இம்முறை இந்தியர் எவரும் பங்குபற்றவில்லையென்றும் நேற்று முன்தினம் (23) ஆரம்பமாகிய திருவிழாவில் சுமார் 5,200 இலங்கையர் பங்கேற்றதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் இந்தியர்கள் குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. இனம்,

மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது.

இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அடுத்த திருவிழாவுக்கு முன்னர் முரண்பாடற்ற தீர்வொன்று காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் வழமை போல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சதீவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், ஸாதிக் ஷிஹான்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division