- சிறப்பு அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு
- சுயவிருப்பத்தின் பேரில் அடிப்படை தகவல்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள தீர்மானம்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையரை கணக்கெடுக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படுமென, வெளிநாடு வாழ் இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட இராஜதந்திரி வீ.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “புலம்பெயர்வானது புதிய விடயம் அல்லவென்பதுடன், மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது. இன்றளவில் நியூசிலாந்து – வட அமெரிக்கா வரை உலகின் பல பகுதிகளில் இலங்கைத் தமிழர் வாழ்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால வரவு, செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு வாழ். இலங்கையருக்கான நிதியம், அலுவலகம், அலுவலகச் சட்டமூலம்ஆகிய மூன்று விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கமைய வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகம் கடந்த வருட இறுதியில் கொழும்பு பழைய சார்டட் கட்டடத்தில் அமைச்சரவை அனுமதியுடன் திறக்கப்பட்டது. இலங்கையர் இதுவரை 05 அலையாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
2.5 முதல் 03 மில்லியன்வரை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பதை அண்ணளவாக கணக்கிட்டுள்ளோம். அவர்களில் 1.6 மில்லியன் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். தொழிலாளர்களை பதிவு செய்துவிட்டு செல்வதால் அவர்களுடைய தகவல்கள் எம்மிடத்தில் உள்ளன.
ஏனைய காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தகவல்கள் சரியான வகையில் இல்லை. ஆனால் விரைவில் மற்றைய தூதரங்களை தொடர்புகொண்டு, இவர்கள் தொடர்பான தகவல்களை நாம் சேகரிக்க முயற்சிக்கிறோம். அதற்காக அவர்களின் சுயவிருப்பத்தின் பேரில் சில அடிப்படை தகவல்களை மாத்திரம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
இந்த தகவல்களின் இரசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும். இந்த அலுவலகம் வெளிநாட்டு வாழ் இலங்கையரையும் தாயகத்தையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக செயற்படும்” என்றார்.