ஒப்பீடு என்பதற்கு ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிடுதல் அல்லது இன்னொருவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்தல் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இந்த ஒப்பீடானது இருபுறமும் கூரான ஒரு கத்திக்கு நிகரானது. அது அழிவிற்கும் பயன்படும் ஆக்கத்திற்கும் வழி வகுக்கும்.
நாம் கற்கும் பலவிடயங்கள் பிறரை பார்த்து தெரிந்து கொள்வதுதான். பிறரின் நடை உடை பாவனைகளைக் கூர்ந்து நோக்கி தானும் அதுபோல செய்வதை VICARIOUS LEARNINIG என்கிறது உளவியல். நம் தாய் தந்தையிடமிருந்து நாம் கற்றவை அனைத்தையும் இவ்விதம்தான் கற்றோம். அம்மாவின் சமையல், அப்பாவின் உடல் மொழி, அண்ணனின் நாகரிக உடை, தாத்தாவின் கம்பீரம், சினிமா நடிகரின் ‘பஞ்ச்’ வசனம், குடும்ப கௌரவம், சாதி உணர்வு என அனைத்தையும் இப்படித்தான் கற்றுக் கொள்கிறோம்.
கேட்டுப்படித்த பாடங்கள் மறக்கும். ஆனால் பார்த்து படித்த பாடங்கள் நிலைக்கும். இதுதான் விதம் விதமான பல ஒப்பீடுகளை எதிர்பார்ப்புகளாக்கி நம்மீது திணிக்கிறது. பிறருடன் கூடிவாழுகின்ற சமூகத்தில், பிறரை விட நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு விதை. இதுதான் நமது அனைத்து சமூக நடத்தைகளுக்கும் காரணி. இது நமது சுயபுத்தியை, அல்லது சுய சிந்தனையை மழுங்கடித்து பொதுப் புத்தியை நம் மீது திணிக்கிறது.
“என்ஜினியரிங் படிப்பாவது படிக்காமல் எப்படி? ஏ.எல். பாஸ் பண்றானோ இல்லையோ.. பேசாம பிரைவேட் கேம்பஸ் ஒண்டில படிக்கவை !”
“நம்ம வீட்டு வேலைக்காரனின் மகன் இம்முறை என்ஜினியரிங்க்ல எடுபட்டிருக்கான். அவனோட நம்ம வீட்டுப் பிள்ளைகள் வாசிற்றியில போய் ‘ஆட்ஸ்’ வகுப்பில் சேருவது நல்லாவா இருக்கும்?”
“முடியுதோ இல்லியோ, வங்கியில லோன் போட்டாவது ஒரு காரை வாங்கு! நமக்கு அதுதான் கௌரவம்”
“பொண்டாட்டிக்கு 10 பவுண்லையாவது தாலிக்கொடி போடாட்டி, என்ன பிஸ்னஸ் பண்ணி, என்ன பிரயோசனம்?’’
“உன் வயது தானே அவனுக்கும்? அவன் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிறான்… உன்னால முடியாதா? வெட்கக்கேடு!’’ இவைகளெல்லாம் நாம் தினமும் கேட்கும் ஒப்பீடு செய்யும் உரையாடல்கள்.
ஒரு பாடசாலையில் நடந்த “சமாதானமும் சகவாழ்வும்” என்ற தலைப்பிலான செயலமர்வில் ஒரு வளப்பகிர்வாளனாக நான் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஒரு கட்டத்தில் ‘பிள்ளைகளை ஒப்பீடு செய்வது அவர்களுக்கு நாம் செய்யும் ஒரு வன்முறை’ என்றேன். அப்போது அருகில் இருந்த ஒர் ஆசிரியை “ஒரு பிள்ளையை உருவாக்க இன்னொரு பிள்ளையை உதாரணம் காட்டுவது எவ்வளவு பெரிய தவறா?” என்று கேட்டார். நான் சொன்னேன் “உதாரணம் காட்டுவது தவறில்லை என்றால் உங்கள் பிள்ளை உங்களிடம் வந்து, அம்மா நீங்கள் ஏன் உங்கள் தங்கையை போல் பெரிய படிப்பு படித்து உயர்ந்த உத்தியோகம் பார்க்கவில்லை என்று கேட்டால் அதனை ஊக்கம் என்று எடுத்துக் கொள்வீர்களா அல்லது உங்கள் கணவரிடம் வந்து உங்கள் வயது தானே பக்கத்து வீட்டு மாமாவுக்கும் அவர் மாதிரி நீங்கள் ஏன் நாலு மாடி வீடு கட்டி நாலு கார்களும் வைத்திருக்கவில்லை என்று கேட்டால் ஏற்றுக் கொள்வாரா?” என்று கேட்டேன். அதற்கு பதில் அளிக்க முடியாமல் தடுமாறிய அந்த ஆசிரியை பின்னால் என் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
உயர்வோ தாழ்வோ, தத்தம் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்துவிட்ட பெரியவர்களாலேயே இதையெல்லாம் ஜீரணிக்க முடியவில்லை என்றால், தத்தமது வருங்காலம் பற்றிய பயம் கொண்ட இளவயதினர் இந்த ஒப்பீடுகளால் எவ்வளவு தூரம் உருக்குலைந்து போவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
சமூகத்துடன் இணைந்து வாழ்வது வேறு, நமக்கு ஒப்புதல் இல்லாத விடயங்களில் கூட சமூக ஒப்பீடுகள் காரணமாக போலி வாழ்க்கை வாழ்வது என்பது வேறு.
கூட்டத்தோடு செல்வது ஆதிகாலத்தில் ஒரு பாதுகாப்பை அளித்தது.
இதனால் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் கூட்டம் செய்வதை அப்படியே செய்வது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தந்தது. தனித்துவ நடத்தை அபாயத்தைத் தருவதாகவும் பார்க்கப்பட்டது. இந்த ஆதிமனித மனோபாவம்தான் சமூகம் செய்வதை அப்படியே நம்மையும் செய்ய வைக்கிறது. இதனால் எல்லோரும் சரியென்று சொல்வதை நம்புகிறோம். எல்லோரும் செய்வதை நாமும் செய்தால் பிரச்சினை இல்லயென நினைக்கிறோம்.
ஆனால் சாய்ந்தால் சாய்கிறபக்கம் சாய்கிற இந்த செம்மறியாட்டு மனோபாவத்தையும் தாண்டி யோசித்தவர்கள்தான் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள். அவர்களே தங்கள் நடத்தைகளால் மக்கள் கூட்டத்தை தங்கள் பின்னே இழுத்தவர்கள்.
உலகம் தட்டை இல்லை என்று சொன்னவர் முதல், சந்திரனில் கால் பதித்தவர் வரை சமூக ஒப்பீடுகளையும் எதிர்பார்ப்புகளையும் கடந்து வந்தவர்கள்தான். எந்தப் பிள்ளையானது வகுப்பில் 10 ஆம் பிள்ளையாக வந்தால் அவனது பின்னேர விளையாட்டுகளை நிறுத்துவது முதல், கல்யாணமான மறுமாதமே ஒரு ‘விசேடமும்’ இல்லையா? என்று அக்கறையாக விசாரிப்பது வரை அனைத்தும் சமூகம் எதிர்பார்க்கும் நிர்பந்தங்களில்தான் நடக்கின்றன. வீட்டில் ஏதும் நன்மையோ தீமையோ எது நடந்தாலும் நாலு பேருக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று யோசிப்பது இதனாற்றான்.
ஆனால் ஊக்கமும் உத்வேகமும் கொண்டவர்கள் சமூக ஒப்பீடுகளில் முடங்கி விட மாட்டார்கள் அதையும் மீறிச்செயற்பட்டு வெற்றிபெறுவார்கள்.
அதாவது “இதுதான் எமது சூழலின் பொது விதி, இதுதான் நமது பரம்பரை வழக்கம், எல்லோரும் இப்படித்தான் செய்தார்கள்.
இன்னமும் செய்கிறார்கள் மாறி அல்லது மீறிச்செய்தால் பிரச்சினை வரும்” என்பதையும் கடந்து சுயமாக யோசித்து செயல்படுவார்கள்.
அதிலும் தமிழ்ச்சினிமா அடிக்கடி தேங்கிப்போவதெல்லாம் இந்த ஒப்பிட்டுச் சூத்திரத்தினுள் (FORMULA) சிக்கிக் கொள்ளும்போதெல்லாம்தான்.
சில மசாலாப் படங்கள் சில நாட்கள் தொடர்ந்தாற் போல் ஓடினால் எல்லோரும் அவற்றையே தயாரிப்பார்கள். சில நகைச்சுவைப்படங்கள் ஓடினால் எல்லோரும் அவற்றியே தயாரித்து ரசிகர்களை சிரிப்பாய்ச்சிரிக்க வைப்பார்கள். டப்பிங் படங்கள் கொடிகட்டிப்பறந்த காலங்களில் எல்லாப்படங்களையுமே டப்பிங் பண்ணி கல்லாவைக் காலியாக்குவார்கள், ஒப்பீட்டுக்கு பிரத்தியட்சமான உதாரணம் இதுதான். ஆனால் இந்தச்சூழலில் சிக்காமல் சுயமாக தைரியமாக தயாரிக்கப்படும் நல்ல படங்கள்தான் அடுத்த சூத்திரத்தைத் தோற்றுவிக்க வைக்கும்,
தன்னம்பிக்கையில்லாதவர்கள் பிறரது செய்கைகளை கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றுவார்கள். சுயசிந்தனை கொண்டவர்கள் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் பிறரிடம் பாடங்கள் பயின்றாலும் தங்கள் வழியில் நடப்பார்கள்.
“எங்கள் பற்பசையைப் பாவிக்காவிட்டால் முத்துப்போன்ற உங்கள் பற்களின் கதி அதோகதிதான்!” என்றும், “எங்களது கைலாசபர்வத அபூர்வ மூலிகைகளாலான தைலத்தைத் தடவாவிட்டால், உங்கள் பளபளப்பான கூந்தல் உதிர்வதை, கைலையில் வாழும் அந்தக்கைலாசநாதனாலும் தடுக்கமுடியாது!” என்றும், “நடிகை அமலா பாலுக்கும் உங்களுக்கும் அழகுக்கு அழகு சேர்ப்பது எமது சந்தனசோப் ஒன்றே!” என்றும் நாளாந்தம் நம்மைப் பயமுறுத்தும் தொலைக்காட்சி, வானொலி, மற்றும் பத்திரிகை விளம்பரங்களின் பின்னால் உள்ள வியாபார தந்திரம் தெரியாமல் மக்கள் ஏமாந்துபோகிறார்கள்.
எனவே, உங்கள் வாழ்க்கையை நீங்களே முடிவு செய்யுங்கள். பிறரைப் பாருங்கள், ஆனால் இறுதிமுடிவு எடுப்பது உங்கள் கையில் இருக்கட்டும்! அதனை நீங்களே முடிவு செய்யுங்கள். இதனால் எதிர்காலத்தில் யார் மீதும் வருத்தப்படும் தேவை இருக்காது.
உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் சொல்ல வேண்டிய ‘பஞ்ச்’ வசனம் ஒன்றே ஒன்றுதான். அதாவது “உங்கள் வாழ்க்கை எப்போதும் உங்கள் கைகளில்!” என்பதே
எஸ். ஜோன்ராஜன்