‘பெண்கள் பணிந்து போவார்கள், பொறுத்துக் கொள்வார்கள் என்ற ஆண்களிடம் காணப்படும் எண்ணமே பாலியல் சீண்டல்கள் தொடர்வதற்கான காரணம். உண்மையைச் சொன்னால், தமக்கு எதிரான சுரண்டல்களை பெண்களே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பெண்கள் டயானா கமகேயை முன்மாதிரி பெண்ணாகக் கொள்ளலாம்’
இந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கொள்கை வெறியுடன் தற்போது நாட்டில் நடத்திவரும் ஒரு நடவடிக்கைதான் ‘யுக்திய’ அதாவது நீதி. இதற்கு பாராட்டுகள் ஒருபக்கமிருக்க, அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களும் கூடவே இந்நடவடிக்கையை நிறுத்தும்படி அழுத்தங்களும் காணப்படுகின்றன. இவை எதையும் பொருட்படுத்தாமல், தான் ஜூன் மாதம்வரை போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ‘யுக்திய’ நடவடிக்கையை முன்னெடுத்து செல்வேன் என்ற மாறா உறுதியுடன் செயற்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த யுக்தியவின் மற்றொரு பகுதிதான், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை ஒழித்துக்கட்டுவதாகும்.
இதன் அடிப்படையில்தான் கடந்த ஏழாம் திகதி புதிய நடவடிக்கை ஒன்றை அமைச்சர் ஆரம்பித்தார். நாட்டின் பொதுப் போக்குவரத்தான ரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்காணிக்கும் திட்டமே இதுவாகும். பஸ் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பெண்கள் மீது சன நெரிசலைப் பயன்படுத்தி ஆண்களால் மேற்கொள்ளப்படும் வக்கிர பாலியல் சேஷ்டைகள் ஒன்றும் பெண்களுக்கு புதியவை அல்ல.
இலங்கையில் தனியார் வசமிருந்த பயணிகள் பஸ் போக்குவரத்தை ஆட்சிக்கு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க 1957ஆம் ஆண்டு அரசுடமையாக்கினார். பயணிகள் பஸ்சேவை ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அதன்படி, 1958 ஜனவரி முதலாம் திகதி இ.பொ.ச. ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நேரத்தில், நேர சூசிகையின் பிரகாரம் பஸ்கள் இயங்கும். நாடெங்கும் ஒரே மாதிரியான பஸ்கட்டணம் என்பது மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது. மக்கள் பெருவாரியாக பஸ்களை பயன்படுத்தத் தொடங்கினர். அமர்ந்துதான் பயணிக்க வேண்டும் என்ற நிலை மாறி நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கும் வழக்கம் ஆரம்பமானது. பெண் பஸ் பயணிகளை பாலியல் ரீதியாக சீண்டுவதும் அன்றைக்கு ஆரம்பித்த ஒன்றுதான்.
பொதுப்போக்குவரத்தில் நிம்மதியாகப் பயணிக்க முடியவில்லை என்ற பெண்களின் ஆதங்கம் அரை நூற்றாண்டைக் கடந்த பின்னர், இப்போதுதான் அரசு அதற்கு காது கொடுத்திருக்கிறது. காலை ஏழு மணிமுதல் 10 மணிவரையும் மாலை 5 மணிமுதல் ஏழு மணிவரையில் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். பெரும்பாலான பாலியல் சீண்டல்கள் இச் சந்தர்ப்பத்திலேயே நிகழ்கின்றன. நின்று கொண்டு பயணிக்கும் பெண்களை, நெரிசலையும் பஸ்சின் ஆட்டத்தையும் பயன்படுத்தி பின்புறமாக உராய்வது, இடுப்பில் கைவைத்து வருடுவது. மார்பகங்களை வருடுவது, பெண்கள் கூச்சத்தாலும், பயத்தாலும் செய்வதறியாது தவிப்பதை அவர்களின் சம்மதமாக எடுத்துக் கொண்டு மென்மேலும் முன்னேறி எல்லைகளைக் கடப்பது என்பதே பாலியல் வன்முறையாக அறியப்படுகின்றது.
பாலியல் சீண்டல்கள் பஸ், ரயில்களில் நடக்கும்போது அதை வேறொருவர் கவனித்தால் அவர் அது பற்றி உரத்த குரலில் தன் அதிருப்தியை வெளிப்படுத்துவதும் வழக்கம். அமர்ந்திருக்கும் ஆண், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எழுந்து இடமளிப்பதன் மூலம் அபயக்கரம் நீட்டுவதும் நடக்கிறது. சீண்டலைக் கவனிக்கும் ஒரு பெண், இந்த ஆண்களால் பஸ்சில் கூட நிம்மதியாக பயணிக்க முடியவில்லையே என சத்தமிட்டு அப்பெண்ணை இக்கட்டில் இருந்து காப்பாற்றுவதும் உண்டு. தைரியசாலிகளான பெண்கள் தன்னை இடித்துக் கொண்டு நிற்கும் ஆணை முறைத்துப் பார்ப்பது, குரலெடுத்து திட்டுவது சில சமயம் செருப்பைக் கழற்றி அடிக்க முனைவது என களத்தில் இறங்கி விடுகிறார்கள். பாலியல் சீண்டல்களை ஆண்கள் மேற்கொண்டாலும் பெண்களை இக்கட்டில் இருந்து காப்பாற்றுவது பெரும்பாலும் ஆண்கள்தான்.
ஒரு பெண் தான் வயதுக்கு வந்த காலத்தில் இருந்து 55-,60 வயது வரை, உடற்கட்டைப் பொருத்ததாக, பாலியல் ரீதியான சீண்டல்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கத்தான் செய்கிறார். இது உலகம் முழுவதுக்கும் பொதுவானது. ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் கீழ் பெண்கள் பலவீனமானவர்கள் என அறியப்படுவதால் அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பல வழிகள், உபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெண் என்பவள் ஆணின் தேவைகளை நிறைவேற்றித் தருபவள் என்ற பார்வை எழுபது ஆண்டுகளை பின்நோக்கிப் பார்த்தாலேயே, வேறெங்கும் போக வேண்டாம், நம் குடும்ப மற்றும் சமூக அமைப்புகளிலேயே இது நீடிப்பதை அவதானிக்க முடியும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் மங்கள நிகழ்வுகளில், வழிபாடுகளில் கலந்து கொள்ளக் கூடாது, விதவைகள் மங்கள நிகழ்ச்சிகளில் முன்னணி வகிக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இன்றளவும் உள்ளன. பெண்களுக்கு மரியாதையும், முதலிடம் தருவதாகக் காட்டிக் கொள்ளும் ஆண்கள் உள்ளூர பெண்களை போகப் பொருளாகக் கருதுகிறார்கள் என்பது பொதுவான விஷயம். இதை மேலும் ஆராயப் போனால் இனப்பெருக்கத்தை மையப்படுத்தி இயங்கும் இயற்கை சக்தியின் தன்மைகளில் ஒன்றாக இந்த இனக் கவர்ச்சியை நாம் கருத வேண்டியிருக்கும்.
ஒரு காலத்தில் பெண்களை பூட்டி வைத்ததற்கு காரணமே, சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு எவருமே இச்சித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். இன்று கல்வியில் எந்த அளவுக்கும் பயணிக்கவும், தொழில்களைத் தேடிக் கொண்டு சொந்தக் காலில் நிற்கவும் பெண்களால் முடியும். பூட்டிய கதவைத் திறந்து வெளியே வந்தப் பெண்கள் தற்போது குடும்பத்தின் மத்தியிலும், அலுவலகங்களிலும், பொரு வெளியிலும், பஸ், ரயில் பயணங்களின் போதும், நெரிசலான இடங்களிலும் பாலியல் ரீதியான பிரச்சினைகளையும் சீண்டல்களையும் சந்தித்து வருகிறார்கள். இந்நாட்டின் அரசுகள் இதைக் கண்டு கொண்டதில்லை. இப்போதுதான அரசின் பார்வை இந்தப் பக்கமாகத் திரும்பி இருக்கிறது.
முன்னர் Nymphomaniac என்ற ஒரு ஆங்கிலப் பதம் சில பெண்களிடம் இருக்கக்கூடிய அதீத பாலியல் கிளர்ச்சியை சுட்டுவதாக பயன்பாட்டில் இருந்தது. நமது ஆண்களும் கலகலப்பாக பழகக்கூடிய பெண்களை, இவள் ஒரு ‘நிம்ப்’ என அடையாளப்படுத்துவார்கள். பல பெண்கள் தமது இயல்பான கலகலப்பு மனப்பான்மையை வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பதற்கான காரணம் ஆண்களின் இந்த தவறான பார்வையே. அதே சமயம் அந்த பாலியல் வேட்கை கொண்ட ஆண்களைக் குறிக்கும் ‘சட்ரோமேனியா’ (Satyromaniac) என்ற பதம் என்றைக்குமே பொதுபயன்பாட்டில் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப் பதங்கள் நீக்கப்பட்டு அதீத பாலியல் இச்சை உடையவர்கள் (Hyper Sexual behavior) என்ற பதம் இரு பாலாளர்களையும் குறிப்பதாக பயன்பாட்டில் உள்ளது.
பொது போக்குவரததில் பெண்களுக்கு எதிரான இச் சீண்டல்களை இந்தப் பின்னணியிலேயே நோக்க வேண்டும். இந் நெருக்கடியில் இருந்து தமக்கு விடுதலை வேண்டும் என்பது பெண்களின் நீண்டகால ஆதங்கம். இதற்கும் முடிவு கட்டியாக வேண்டும் என அமைச்சர் டிரான் அலஸ் கருதியதன் விளைவாகவே, ‘யுக்திய’ வின் ஒரு பகுதியாக பொலிசார் பஸ் மற்றும் ரயில்களைக் கண்காணிக்கத் தொடங்கினர்.
ஆரம்பிக்கப்பட்ட பெப்ரவரி ஏழாம் திகதி நாடெங்கும் 234 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு ஆரம்பமானது. இதுவரை கையும் களவுமான அகப்படட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மன்னிப்பு கேட்டு, அபராதத்தொகை செலுத்தி வெளியே வந்துவிடலாம் தான். ஆனால், இவர் பஸ்சில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதானவர் என்ற களங்கம் அவரை நீண்ட காலமாக துரத்தி வரும் என்பதுதான் பெரிய தண்டனை. நுவரெலியா பகுதியில் பஸ்சில் பயணித்த சாதாரண பெண் உடை அணிந்த பொலிஸ் மீதே ஒரு 42 வயதுக்காரர் நெருங்கி சில்மிஷம் செய்யப்போக, அவர் கைது செய்யப்பட்டு நுவரெலிய நீதிமன்றத்தால் 22ஆம் திகதிவரை காவலில் வைக்கப்பட்ட செய்தி வைரலானது.
இச் சீண்டல்களில் ஈடுபடுவோரில் பலர் திருமணமாகி குழந்தை குட்டி என சம்சாரி வாழ்க்கை நடத்துபவர்கள். இச் சீண்டல்கள் பரவலாக இடம் பெறுவதற்கு, பெண்கள் பொறுத்துக் கொள்வார்கள், எதிர்வினையாற்ற மாட்டார்கள் என்ற எண்ணமே காரணம். எனினும் பொலிசாரை பஸ்களில் பயணிக்கச் செய்வதன் மூலம் பொதுப் போக்குவரத்து சீண்டல்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது. அரசு பஸ்களில் பெரும்பாலான பயணிகள் டிக்கட் வாங்கிக் கொண்டு பயணிப்பதற்கான பிரதான காரணம், இடை நடுவில் பரிசோதகர்மார் பஸ்சில் ஏறி டிக்கட் கேட்டால் அது மானக்கேடாகி விடுமே என்ற முன்ஜாக்கிரதை உணர்வே.
தினமும் இலட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் பஸ்களைக் கண்காணித்து சீண்டல்காரர்களை வளைத்துப் பிடிப்பது சாதாரண வேலை அல்ல. நீண்ட காலத்துக்கு இது சாத்தியப்படாது. ஆனால் ஒரு பயப் பிராந்தியை, அகப்பட்டால் மானக்கேடாகிவிடுமே என்ற அச்ச உணர்வை, உருவாக்க இது உதவும்.
முன்னர் பஸ்களில் தாராளமாக புகை பிடிப்பார்கள். புகை பிடிக்காத ஆண்களும் பெண்களும் சகித்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கு பெண்கள் வெளிப்படையாக எதிர்த்து, புகைத்தால் கீழே இறங்கு! என சத்தமிட ஆரம்பித்தார்களோ அன்று முதலே பஸ்களில் புகைப்பது முடிவுக்கு வந்தது. பொது போக்குவரத்தில் தொடரும் பாலியல் சீண்டல்களை பொலிஸ் தலையீட்டால் அல்ல; பெண்கள் நேரடியாக தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதன் மூலம் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வரலாம்.
ஆணுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலமே பாலியல் சீண்டல்களில் இருந்து மகளிருக்கு விடுதலை கிட்டும்.
ஒரு பெண் எதிர்த்து நிற்கும்போது பக்கத்தில் இருக்கும் ஆண்கள் உதவிக்கு வரவே செய்வார்கள். எனவே சமரசம் செய்து கொள்ளாமல் எதிர்த்து நிற்பதே ஒரே வழி.
இன்றைய பஸ்கள் ஒரு பக்கம் மூன்று ஆசனங்களும் மறு பக்கம் இரண்டு ஆசனங்களுமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. நடுவில் ஒருவரே நிற்க முடியும். ஆனால் இருபுறமும் இருவரும் நடுவில் ஒருவருமாக மூவர் இடித்துக் கொண்டு நிற்கிறார்கள். இத்தகைய சூழலில் பெண்கள் மீது சாய்ந்தும், இடித்துக் கொண்டும் ஆண்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அப்பாவி ஆண்கள் பொலிசாரிடம் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கென தனிப் பேருந்து விடப்படுகிறது. எல்லா பஸ்களிலும் பெண்களும் தனி ஆசன வரிசை உண்டு. திரையரங்குகளில் பெண்களுக்கு தனிப் பகுதி உள்ளது. இலங்கையில் இவ்வாறான எந்த வசதியம் ஏற்படுத்தப்படாமல், போதிய பஸ்கள் விடப்படாமல் ஆண்களை குற்றம் சாட்டுவது சரியல்ல என்ற குரல் நியாயமானது. சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சியின்போது போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த ஸ்ரீமணி அத்துலத் முதலி மகளிர் பேருந்துகளை பரீட்சார்த்த ரீதியாக கொழும்பில் சேவையில் ஈடுபடுத்தினார். ஆனால் பெண்களிடம் அது வரவேற்பைப் பெறவில்லை. அவர்கள் ஆண்களுடன் இணைந்து பயணிக்க விரும்பியதால் இச்சேவை தொடரவில்லை. அதன் பின்னரும் மகளிர் பேருந்து திட்டம் பற்றிய செய்திகள் வெளியாகின. அவை நடைமுறைக்கு வரவில்லை 2019 இல் இத்திட்டத்தைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சாத்தியமாகவில்லை. பாலியல் சீண்டல்களைக் குறைக்கக் கூடிய சாத்தியமான எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் ஆண்கள் மீது பொலிசை ஏவி விடுவது சரியானது அல்ல. அப்பாவிகளையும் இது பாதிக்கும்.
இங்கே முக்கியம், பெண்கள் விழிப்பு பெறுவதும் எதிர்த்து நிற்பதுதான். வசதி உள்ளவர்கள் சொந்த வாகனம் வைத்துக் கொள்ளலாம்.
இந்த வகையில் பெண்கள், இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயை முன்மாதிரிப் பெண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் மனதில் பட்டதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தக் கூடியவர். ஆண்கள் நினைத்துப் பார்க்கவும் அஞ்சும் பகுதிகளில் துணிச்சலுடன் சஞ்சரிப்பவர். கஞ்சா பயிர் வளர்த்து ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெறலாம் என்று முதலில் சொன்னதோடு அதை சாதித்தும் காட்டினார். விபசாரத்தை இருட்டில் வைக்காமல் சுகாதார மற்றும் சட்ட பாதுகாப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றார். வெளிநாட்டு பயணிகளுக்காக கஸினோக்கள் திறக்கப்பட வேண்டும் என்பது அவர் கூற்று. பார்களை இரவு 11 மணிவரையும் உல்லாச ஹோட்டல்களில் இரவு ஒரு மணிவரையும் திறந்து வைக்க வேண்டும் என்பது அவர் கோரிக்கை. தற்போது அது நடைமுறையில் உள்ளது. ஆண்கள் அவரை எள்ளி நகையாடினாலும் அவர் பொருட்படுத்துவதில்லை. அவசியமானால் ஆண்களுடன் மல்லுக்கும் நிற்கக் கூடியவர். அவருக்கு அச்சமே கிடையாது. Fire brand நெருப்பு மாதிரி.
பெண்கள் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். பொலிசாரை பஸ்களில் கண்காணிப்பு மேற்கொள்ள விட்டிருப்பது தற்காலிகமானது. பெண்கள் தான் விழிப்புணர்வு பெற்று ஃபயர் பிரான்ட் ஆக வேண்டும்!
- அருள் சத்தியநாதன்