சில தினங்களுக்கு முன்னர் ஒரு விசித்திரமான சம்பவத்தைப் பற்றி அறியக் கிடைத்தது. களுத்துறை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலையான மருதானை பேருவளையில் அமைந்துள்ள அல்பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்கு நூறு வருடங்கள் நிறைவடைந்ததை (1924 – 2024) முன்னிட்டு விசேட நினைவு முத்திரை மற்றும் முதல் தபாலுறை வெளியிடப்பட்டதே அந்தச் சம்பவமாகும்.
இந்த சிறப்புமிக்க முக்கிய நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. “100 வருடங்கள் நிறைவடைந்த இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கற்கைநெறிகளை ஆரம்பிக்க வேண்டும்” என இந்தச் சந்தர்ப்பத்தின்போது அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறினார். இலங்கையின் வரலாற்றில் முதல் முஸ்லிம் குடியேற்றமான முதலாவது முஸ்லிம்களின் பள்ளிவாசல் அமைந்துள்ள வரலாற்று நகரமான பேருவளையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடப்படுவது மிகவும் முக்கியமிக்க சந்தர்ப்பமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் பொறுப்பை வகித்த இரண்டு முஸ்லிம் சபாநாயகர்களை நாம் சந்தித்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மாக்காரின் தந்தை பக்கீர் மாக்கர் மற்றும் எம். எச். முகம்மது ஆகியோரே அவர்கள் இருவராவார். இந்த சபாநாயகர்கள் மிக உயர்ந்த பாராளுமன்ற பாரம்பரியத்தை உருவாக்கப் பாடுபட்டவர்களாவார். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி என அனைத்துப் பிரிவினரையும் வெறுப்பின்றி சமத்துவ அடிப்படையில் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்ற சிந்தனைப் போக்ைக அமைப்பதற்கு இம்தியாஸ் பக்கீர் மாக்கார் மாபெரும் பணிகளை ஆற்றியுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி என நெல்சன் மண்டேலா ஒருமுறை கூறினார். நூறு வருடங்களை நிறைவு செய்யும் இந்தப் பாடசாலை, அதன் வரலாறு நெடுகிலும் எதிர்கொண்ட முக்கிய நெருக்கடிகளில் ஒன்று ஆசிரியர்கள் மற்றும் ஏனைய வசதிகளின் பற்றாக்குறையாகும். பல கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட நிலைமைகளினால் உயர் தரத்தில் கலைப் பிரிவிலேயே தமது கல்வியைத் தொடர்ந்தனர். அதன்பிரகாரம், கலைப் பட்டதாரிகளுக்குப் பொருத்தமான தொழில் சந்தை இருக்கவில்லை. இருக்கும் வேலைவாய்ப்புக்களுக்குப் பொருத்தமான கற்றவர்கள் உருவாகவில்லை. தாம் பெற்ற கல்வியால் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொள்ள முடியாத அனேக இளைஞர்கள், தமது பெற்றோரையும், சமூக அமைப்பையும், நாட்டையும் வெறுக்கும் கூட்டமாக மாறினர். அந்த வெறுப்பின் வெளிப்பாடே பல வன்முறைச் செயல்களுக்கு அவர்களைத் தூண்டியது. கல்வி அறிவற்ற சமூகத்தில் வெறுப்பை பரப்புவது மிகவும் எளிதானதாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் மூன்று தசாப்தங்களுக்கும் அதிக காலம் அவ்வாறான யுத்த சூழலின் அனுபவங்கள் தற்போதைய சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளது. இந்நிலைமை உருவாவதற்கு நிலவிய கல்வி முறையே பிரதான காரணமாகும் என முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் நம்புகிறேன்.
இந்த நிலைமைகள் தொடர்பில் புரிந்துணர்வுடன் நான் கல்வி அமைச்சராக இருந்த போது பல சவால்களுக்கு மத்தியில் உயர்தரத்திற்கான தொழில்நுட்ப பாடத்திட்டத்தை இலங்கையில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தேன். அதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசதிகளுடன் கூடிய ஆயிரம் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தற்போது 13 தொழில்நுட்ப பீடங்கள் தற்போதுள்ளன. தொழில்நுட்பம் தற்போது மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான உயர்கல்வி துறையாக உள்ளது. அதனபடிப்படையில் தற்போது உயர்தரப் பிரிவில் கலை மற்றும் வணிகப் பாடப்பிரிவுகளை மட்டும் நடத்தி வரும் இவ்வாறான பாடசாலைகளில் அடுத்த ஆண்டு தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான பங்களிப்பை நாம் வழங்கவுள்ளோம். அதற்குத் தேவையான நிதியையும், ஆசிரியர்களையும் தேடுவதற்காகப் பெற்றோர்களினதும் பங்களிப்பு எமக்கு கிடைக்கும் என்று நாம் நம்புகிறேன்.
இந்த நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர், பல சாதகமான நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்.
“இந்தப் பாடசாலையானது வரலாற்று மதிப்புமிக்க ஒரு பாடசாலையாகும். அதேபோன்று நீங்கள் வந்திருக்கும் இந்தப் பிரதேசம் எமது நாட்டின் வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியமிக்க ஒரு பிரதேசமுமாகும். இந்த கிராமம் தொடர்பில் வெளியிடப்படும் இரண்டாவது முத்திரை இதுவாகும். இலங்கையின் முதல் அரேபிய குடியிருப்பு என்ற வகையில் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. இன்று இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக அல்-ஃபாஸியத்துல் நஸ்ரியா பெண்கள் பாடசாலை உள்ளது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து இப்பாடசாலையில் கூட்டமொன்றை நடத்தியதாக எனக்கு ஞாபகம். ஒரு மத்ரசாவாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை ஒரு அரச பாடசாலையாக ஆக்கப்பட்டதன் பின்னர் முதலாவது கட்டடத்தைத் திறந்து வைக்க விஜயம் செய்தது அவரது பாட்டனார் என்பதை நான் அவ்விடத்தில் நினைவு கூர்ந்தேன். அந்நேரம் அவர் களுத்துறை அரசாங்க அதிபராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இலங்கை முஸ்லிம்களின் ஆரம்பத்திற்கும் பேருவளைக்கு இடையில் பெரிய தொடர்புள்ளது. இந்தப் பாடசாலையை ஆரம்பிக்கும் போது காணப்பட்ட சவால்களைப் பற்றி எனது தந்தையின் தாய் என்னிடம் கூறியது எனக்கு நினைவில் உள்ளது. பாடசாலையை ஆரம்பிக்க முன்னின்றவர்களின் வீடுகளுக்கு கற்கள் வீசப்பட்டதாக அவர் கூறினார். பெண்கள் கல்வி கற்பது என்பது அந்தக் காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாகும். அதற்கு பல்வேறு அச்சங்கள் காரணமாக இருந்தன. அது முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம் இருந்த மனோநிலை அல்ல. அது பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலும், ஹிந்து தமிழ் மக்களிடத்திலும் அந்தப் பயம் இருந்தது” என இந்நிகழ்வில் கலந்து கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
இன்று புதிய கட்டிடங்களுடன் காணப்படும் இந்தப் பாடசாலை இதுவரை பயணித்துள்ள பாதையைப் பார்த்தால், பலரது விடாப்பிடியான துணிச்சலாலும், முயற்சியாலும் கிடைத்த பலன் என்று சொல்லலாம். இப்பிரதேசத்தில் காலனித்துவ காலத்தில் உருவான இளைஞர் இயக்கத்தின் முயற்சி இதற்காக கிடைத்துள்ளது. அவ்வேளையில் பேருவளை மக்கொன பிரதேசத்திற்கு அருகாமையில் ஆரம்பப் பாடசாலையொன்று இருந்ததுடன், அந்தப் பாடசாலையைப் பார்த்த மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் ஒன்று கூடி இந்தப் பிரதேசத்திலும் பாடசாலை ஒன்றை நடாத்திச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடினர். அதனடிப்படையில் அந்த இளம் தலைவர்கள் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு அயராது உழைத்தார்கள். இதற்காக முன்னின்று செயற்பட்ட இளம் வர்த்தகர்களுள் எஸ்.எல்.எச்.முகம்மது, ஏ. எஸ். எல். மரிக்கார், ஏ.எல். எம். பி. முகம்மது, ஓ. எல். எம். வதூத், எம். எஸ். ஏ. சமது, பி. எல். எம். ஜுனைட், எம். எஸ். எம். செய்னுல் ஆப்தீன், எம். எஸ். எம். ஷெரீப் போன்றோர் சிறப்பான பணியாற்றினார்.
பாடசாலையைக் கட்டியெழுப்புவதற்காகச் சென்ற அவர்களின் பாதை மலர்களால் தூவப்பட்டிருக்கவில்லை. அப்பாதை பல்வேறு தடைகள் மற்றும் முற்கள் நிறைந்த பாதையாக அவர்கள் முன்னால் இருந்தது. அதனடிப்படையில் 1924ம் ஆண்டு பாடசாலையை ஆரம்பிக்க நேர்ந்தது, ஓலையால் வேயப்பட்ட மண்டபம் ஒன்றிலாகும். 35 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் முதலாவது அதிபராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி தங்கம்மா நியமிக்கப்பட்டிருந்ததோடு, திருமதி செல்லமுத்து உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு ஓலையால் வேயப்பட்ட மண்டபத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பாடசாலைக்கு நிலையான கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு அவர்களால் 1929ம் ஆண்டு முடிந்தது. அந்தக் கட்டடத்தில் மாணவர் விடுதி, அதிபர் அலுவலகம் மற்றும் வகுப்பறை என்பன அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக விஜயம் செய்தது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாட்டனான சிரில் லெனாட் விக்கிரமசிங்கவாகும். அக்காலத்தில் சீ. சீ. விக்கிரமசிங்க என பிரபலமாகியிருந்த அவர், இலங்கையில் முதலாவது சிங்கள காணி ஆணையாளராகவும், முதலாவது சிங்கள அரசாங்க அதிபராகவும் இருந்தவராவார்.
எம்மோடு இணைந்து கருத்து தெரிவித்த பாடசாலையின் தற்போதைய அதிபராக முஹம்மட் மூசின் மஸ்னவியா இவ்வாறு கூறினார். “எமது பாடசாலை களுத்துறை மாவட்டத்தின் பேருவளை கோட்டத்தில் அமைந்துள்ள பிரபலமிக்க 1C தர தமிழ் மொழிமூலப் பாடசாலையாகும். நான் இந்தப் பாடசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றது 2016ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதியாகும். நான் அதிபருக்கான பரீட்சையில் சித்தியடைந்து எனக்கு மூன்றாம் தர அதிபருக்கான நியமனம் கிடைத்தது. ஆசிரியர் சேவையில் இளம் வயது அதிபராக நியமனம் பெற்றேன். அப்போது எனக்கு வயது 31. நாம் பொறுப்பேற்றபோது நான் வெற்றிகொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமிருந்தன. எனினும் நான் பின்வாங்கவில்லை. அந்தச் சவால்களை ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி கொண்டேன். முதலில் மாணவர்களின் கல்வியிலேயே எனது கவனம் சென்றது. நான் வந்த நான்கு மாதங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றது. அதன் பெறுபேற்றுக்கு அமைய நூற்றுக்கு 63 வீதத்தை பெற்றிருப்பதாக நான் வலய கல்வி அலுவலகத்திலிருந்து அறிந்து கொண்டேன். அதன் போது இவ்வாறு குறைந்துள்ள கல்விச் சதவீதத்தை எப்படியாவது மேலே கொண்டு வருவேன் என சவால் விட்டேன். நான் பாடசாலைக்கு வந்து மாணவர்களிடம் பேசினேன். “நாம் இந்த வருடம் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற பாடசாலையாக ஆக வேண்டும்” எனக் கூறினேன். மாணவர்களும் என்னோடு இணங்கினார்கள். காரணம் நான் முன்னர் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களையே கற்பித்தேன். அதனடிப்படையில் நான் குறைந்த மட்டத்தில் இருந்த மாணவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன்.
முதலில் நாம் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தோம். அதனிடையே ஏனைய பாடங்கள் தொடர்பில் மாணவர்களிடத்தில் காணப்படும் அறிவினை அறிந்து கொள்ள என்னால் முடிந்தது. அதனடிப்படையில் ஆசிரியர்களும் கலந்துரையாடி அவர்களுக்கும் இலக்கை வழங்கினேன். ஆசிரியர்களும், “மெடம் நாம் அதற்கு தயார்” என்றவாறு என்னோடு தோளோடு தோள் நின்று பணியாற்றினார்கள். பாடசாலைக்கு வராத மாணவர்களைத் தேடி வீடுகளை நோக்கிச் சென்றோம். அதனடிப்படையில் “கெபகரு குருபவதா” என்ற எண்ணக்கருவின் கீழ் குறைந்த புள்ளி மட்டத்தில் இருந்த மாணவர்களை இருவர் இருவராக ஒவ்வொரு ஆசிரியர்களிடத்திலும் ஒப்படைத்தேன். அதனடிப்படையில் பரீட்சை எழுதிய 40 மாணவர்களுள் 35 மாணவர்கள் உயர் மட்டத்தில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்கள். 2018ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கிடையில் உயர் பெறுபேற்றைப் பெற்ற பாடசாலையாக முதலிடத்தைப் பெறுவதற்கு எம்மால் முடிந்தது. அதேபோன்று கல்விக் கோட்ட மட்டத்தில் முதலிடத்தையும், கல்வி வலய மட்டத்தில் ஐந்தாவது இடத்தையும் பெற்றுக் கொள்ள எம்மால் முடிந்தது. கடந்த ஆறு வருடங்களினுள் நாம் பாரிய அடைவுகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். எமக்குள்ள பெரும் பிரச்சினை ஆசிரியர் பற்றாக்குறையாகும். 1115 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் இருப்பது 27 ஆசிரியர்கள் மாத்திரமேயாகும். 28 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை எமக்குள்ளது.
நாம் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வது தொண்டர் ஆசிரியர்களை இணைத்துக் கொண்டாகும். அத்துடன் எனக்கு தங்கி இருப்பதற்கு அதிபருக்கான உத்தியோகபூர்வ இல்லம் இல்லை. அதனை நிர்மாணிப்பதற்கான பணிகள் சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அப்பணிகளை இதுவரை நிறைவு செய்ய முடியாது போயுள்ளது. அதேபோன்று பாடசாலைக் கட்டிடங்களின் ஜன்னல்கள் கழன்று விழுகின்றன. அவை மோசமான நிலையில் உள்ளன.
பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதால் பல மாணவர்கள் பாடசாலைக்கு வர ஆரம்பித்துள்ளனர். சில வகுப்புகளில் ஐம்பது மாணவர்கள் வரை உள்ளனர். வகுப்புக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமானால் இன்னும் வகுப்பறைக் கட்டிடங்கள் தேவை. அதற்குத் தேவையான நிலத்தை ஒரு தொழிலதிபர் நன்கொடையாக வழங்கியுள்ளார். அதில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கூட நாம் திட்டமிட்டோம். இந்த அனைத்துப் பணிகளுக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களும் என்னுடன் ஒரே குடும்பத்தைப் போலச் செயல்படுகிறார்கள். இந்தச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கை எனக்குள் இருக்கின்றது.
தற்போதைய அதிபர் மற்றும் நிர்வாகக் குழுவின் அணுகுமுறைக்கு ஏற்ப பாடசாலையின் நோக்கு மற்றும் குறிக்ேகாள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், ஒரே மாதிரியான ஆளுமைகளைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதே அதன் நோக்கமாகும் என்பதோடு, அதன் குறிக்ேகாளாக இருப்பது அறிவு, திறன்கள், சிறந்த அணுகுமுறைகளினால் நிறைந்த சமய கண்ணோட்டத்துடன் கூடிய, அத்துடன் கணினி அறிவு உள்ளிட்ட பிரதானமான மூன்று மொழிகளிலும் ஆற்றலைக் கொண்ட பெண்கள் குழுவினை நாட்டிற்கு வழங்குவதேயாகும்.
ரசிக கொட்டுதுரகே தமிழில் - எம். எஸ். முஸப்பிர்