காஸாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர் ரபா ஆகும். இந்நகரின் மொத்த பரப்பளவே 64 சதுர கிலோ மீற்றர்தான். இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இப்பிரதேசத்தில் தற்போது 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உள்ளனர். ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பில் 16 ஆயிரம் பேர் என்றபடி மக்கள் தங்கியுள்ளதாக பலஸ்தீன செம்பிறைச் சங்கம் மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீது கடல், தரை மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனியர்களே இவர்களாவர். அடிப்படை வசதிகளற்ற கூடாரங்களிலும் முகாம்களிலும் இம்மக்கள் தங்கியுள்ளனர்.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும், ஹமாஸ் பிடித்துச் சென்றுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்காகவும் எனக்கூறி இப்போரை ஆரம்பித்து நான்கு மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல்.
365 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட காஸாவானது 41 கிலோ மீற்றர் நீளமும் 6 முதல் 12 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட ஒரு பகுதியாகும். 23 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இப்பிரதேசத்தின் சனத்தொகையில் 17 இலட்சம் பேர் பலஸ்தீனில் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளவர்களாவர்.
இந்த யுத்தத்தினால் இற்றைவரையும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் காவு கொள்ளப்பட்டுள்ளனர். 68 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அத்தோடு காஸாவின் அரச கட்டடங்கள், மக்கள் குடியிருப்புக்கள், அகதி முகாம்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என அனைத்தும் தாக்குதல்களுக்கு இலக்காகி உருக்குலைந்துள்ளன. முழு காஸாவுமே சுடுகாடாக காட்சியளிக்கிறது.
2023 ஒக்டோபர் 13 ஆம் திகதி வடக்கு காஸா மீது தரைவழி யுத்தத்தை ஆரம்பித்த இஸ்ரேல், மத்திய காஸா, ஜபலியா, கான் யூனுஸ் என கட்டம் கட்டமாக தொடராக யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த ஒவ்வொரு பிரதேசத்தின் மீதும் யுத்தத்தை தொடங்கும் போதும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்திய இஸ்ரேல் ஆகாயத்தில் இருந்து துண்டுப் பிரசுரங்களைப் போடத் தவறவில்லை. அத்தோடு மக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பான பாதைகளையும் கூட இஸ்ரேலே அறிவித்தது. இச்சமயங்களில் ரபா பாதுகாப்பான பிரதேசம் என இஸ்ரேலால் அவ்வப்போது அறிவிக்கப்பட்டது.
அதற்கேற்ப வடக்கு காஸாவில் யுத்தம் தொடங்கியது முதல் அங்கிருந்த மக்கள் அடங்கலாக ஒவ்வொரு பிரதேசத்தையும் சேர்ந்த பலஸ்தீனியர்கள் ரபாவுக்கு கட்டம் கட்டமாக இடம்பெயர்ந்தனர். இங்கு போதிய அடிப்படை சுகாதார வசதிகளோ, தண்ணீர் வசதியோ, உணவு வசதியோ, மருந்து பொருட்களோ இல்லாத நிலைமை காணப்படுகிறது. குறுகிய நிலப்பகுதிக்குள் பெருந்தொகை மக்கள் தங்கியிருப்பதன் விளைவாக அங்கு ஹெப்படைடிஸ்- ஏ, வயிற்றோட்டம், தோல் நோய்கள் போன்றன தீவிரமடையக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐ.நா.நிவாரண மற்றும் பணிகள் முகவரகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காகவென ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் நான்கு மாதங்கள் கடந்தும் முடிவுற்றதாக இல்லை. அதேநேரம் ஹமாஸ் பிடித்துள்ள பணயக் கைதிகளில் அவர்கள் விடுவித்தவர்கள் தவிர்ந்த ரபாவில் மீட்கப்பட்ட இருவரைத் தவிர எவரையும் இன்னும் விடுவித்ததாகவும் இல்லை.
இந்நிலையில்தான் சனநெரிசல் மிக்க ரபா மீது யுத்தத்தை முன்னெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் கடந்த திங்களன்று (12.2.2024) ரபாவில் மேற்கொண்ட தாக்குதலில் மாத்திரம் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு இஸ்ரேல் ரபா மீது யுத்தத்தை விரிவுபடுத்தப் பேவதாகவும் அறிவித்துள்ளது.
காஸா மீதான தரைவழி யுத்தத்தை ஆரம்பித்தது முதல் மக்கள் இடம்பெயருவதற்கான பாதுகாப்பாக இடமாக இஸ்ரேல் குறிப்பிடப்பட்டு வந்த ரபா மீது போரை விஸ்தரிக்க மேற்கொள்ளும் முயற்சி உலகின் கவனத்தை பெரிதும் ஈரத்துள்ளது.
இடம்பெயர்ந்துள்ள காஸா அகதிகள் செறிவாக உள்ள ரபா மீது யுத்தத்தை முன்னெடுக்கக் கூடாதென ஐ.நா உட்பட உலகின் பல நாடுகளும் வலியுறுத்தி வருவதோடு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. அந்த யுத்தம் ரபாவில் மனிதப் பேரழிவுக்கு வித்திடும் என்றும் அந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இஸ்ரேலிய மக்களும் கூட ரபா மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இவை எதனையும் கவனத்தில் கொள்ளாத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ரபாவுக்கு யுத்தம் விரிவுபடுத்தப்படும். அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற எமது பாதுகாப்பு படையினர் வழி செய்வர். அதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன’ என்றுள்ளார்.
ஆனால் வடக்கு மற்றும் மத்திய காஸா பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற பாதுகாப்பாக வழியென இஸ்ரேல் அறிவித்த வீதி வழியாகப் பயணித்தவர்கள் மீது கூட இஸ்ரேலியப் படையினர் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதேவேளை ரபாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற ஐ.நா. நிவாரண அமைப்புக்கள் எம்முடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று இஸ்ரேலே கேட்டுள்ளது.
ஆனால் ஹமாஸ், ‘ரபா மீது போர் விஸ்தரிக்கப்பட்டால் பணயக் கைதிகள் விடுதலை நெருக்கடிக்கு உள்ளாகும்’ என்றுள்ளது.
பலஸ்தீன அதிகார சபையும் ‘இஸ்ரேல் ரபாவுக்கு யுத்தத்தை விரிவுபடுத்தக் கூடாது. இது விடயத்தில் சர்வதேசம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கோரியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், ‘தெற்கு காஸாவிலுள்ள ரபாவில் இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கை திட்டத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன். இது மனிதாபிமான பேரழிவின் மற்றொரு கட்டமாக அமையும். நிலையான அமைதிக்கான பாதை இதுவல்ல’ எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில், ரபா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு சீனா வலியுறுத்தியுள்ள அதேநேரம் சனநெரிசலான பகுதி மீது யுத்தத்தை முன்னெடுப்பது குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு பிரித்தானியாவும் இஸ்ரேலைக் கேட்டுள்ளது. அத்தோடு ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பாக், ‘காஸா மக்கள் காற்றில் மறைந்துவிட முடியாது. ரபா மீதான இஸ்ரேலின் யுத்தம் மனிதாபிமான பேரழிவாக அமையும்’ என்று எச்சரித்துள்ளார். இப்படை நடவடிக்கை திட்டத்திற்கு பிரான்ஸும் நோர்வேயும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ரபாவுக்கு யுத்தத்தை விரிவுபடுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளதோடு உடனடி யுத்தநிறுத்தத்தையும் வலியுறுத்தியுள்ளன.
காஸாவிலுள்ள பலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான ஒரு முயற்சியாகவே ரபா மீதான இஸ்ரேலிய படை நடவடிக்கையை நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ள துருக்கி, அந்த மக்கள் வெளியேற்றப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழலில் அல்ஜீரியா, ரபா மீது படை நடவடிக்கையை விஸ்தரிக்க இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சி குறித்து ஆராயவென உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேநேரம் தென்னாபிரிக்கா, ரபாவுக்கு யுத்தத்தை விஸ்தரிக்க இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த திங்களன்று மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதோடு, மக்கள் செறிவாகக் காணப்படும் பிரதேசத்திற்கு யுத்தத்தை விரிவுபடுத்தும் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவில் இருந்து பலஸ்தீனியர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகளின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் எகிப்து, அமெரிக்கா, கட்டார், இஸ்ரேல் என்பன கடந்த செவ்வாயன்று கெய்ரோவில் கூடி மேற்கொண்ட மற்றொரு முயற்சியும் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது.
இவ்வாறான நிலையில் எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சம் ரபாவிலுள்ள அகதிகளைச் சூழந்திருக்கிறது. அதேநேரம் ரபா மீது யுத்தத்தை விரிவுபடுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்தத்தைத் தொடர்ந்து அங்கு இடம்பெயர்ந்திருந்த பலஸ்தீனியர்கள் ரபாவுக்கு அருகிலுள்ள பிரதேசங்களையும் டயர் அல் பலாஹ், நுசைரத் அகதி முகாம்களையும் நோக்கி மீண்டும் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர் என்று ஐ.நா. மனிதாபிமான முகவரகம் தெரிவித்திருக்கிறது.
என்றாலும் ரபாவுக்கு அருகிலுள்ள எகிப்துக்கு தரைவழியாக காஸா மக்கள் இடம்பெயர முடியாது. அந்தளவுக்கு உறுதியான உருக்கு முட்கம்பி வேலியை எகிப்து ரபா எல்லையில் 14 கிலோ மீற்றர் நீளத்திற்கு அமைத்து வைத்திருக்கிறது. அத்தோடு இஸ்ரேலின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரபா எல்லைப் பகுதியின் பாதுகாப்பையும் எகிப்து பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பலஸ்தீன வாசியொருவர், “இதன் பின்னர் நாம் இடம்பெயர்வதாயின் மத்திய தரைக்கடலுக்குள் தான் குதிக்க வேண்டும்” என்றுள்ளார்.
மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பணயக்கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
மர்லின் மரிக்கார்