பண மூட்டைக்குள்
படுத்துறங்கும் நிஜங்கள்
குணம் அதனால்
வெளிவரவு மில்லை
அதிகாரப் பிடியில்
அழுந்துகின்ற நிஜங்கள்
அம்பலம் வரவும்
அடியெடுக்க வில்லை
அறக்கொடி யதனை
ஏந்திப் பிடிக்காது
மறத்தின் மகுடத்தை
அலங்காரம் செய்ய
கல்லறை யதனில்
காப்பற்றுக் கிடக்கும்
விடியலை நோக்காத
விழிப்பற்ற நிஜங்கள்
வஞ்சனை செய்வார்க்கு
வழியது விட்டு
வளத்தினைச் சேர்ப்பார்க்கு
நலமது கூட்டி
சுருதி ஏற்றிச் சுகமளிக்கும்
சுதந்திர மற்ற
சூடிழந்த நிஜங்கள்
ஒளிதனை ஓர்ந்து
விரும்பும் நலிந்தவர்க்கு
ஒருகணம் ஏனும்
உதவிகள் செய்யாது
உப்புக்குச் சப்பாணியாய்
இருக்கும் வர்க்கத்திற்கு
உதவிகள் செய்திடும்
ஊமையான நிஜங்கள்
ஒரு முறையேனும்
குரல்தனை உயர்த்தட்டும்
நீர்த்துப் போன
நிஜங்கள் – என்றேனும்
புதுப்பிறவி எய்து
புவிதனை மீட்கட்டும்
நாம் வணங்கும் நிஜங்கள்.