முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு இடத்தை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தர்மபுரம் பொலிஸார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கொன்றுக்கமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நாளை 19ஆம் திகதி இப்பகுதியில் அகழ்வு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
றெட்பான சந்திக்கருகில் காணப்படும் இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பகுதியில் பல தடவைகள் சட்டவிரோதமாக தோண்டும் முயற்சிகள் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது வெற்றியளிக்கததால் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்றம் இதற்கான உத்தரவை 16.02.2024 அன்று வழங்கியுள்ளது.
நாளை 19.02.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நீதிபதி முன்னிலையில் பொலிஸார், பிரதேச தலைவர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச சபையினர், தொல்பொருள் திணைக்களத்தினர் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் பிரசன்னத்துடன் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)