நிந்தவூர்-ஒலுவில் பிரதேச எல்லைக்குட்பட்ட கடற்கரையில் கடல் அலைக்குள் படம் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை (16) கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் கடலில் மூழ்கி காணாமற்போயினர். இருவரின் சடலங்களும் நேற்று மீட்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
பிரபல பாடசாலையொன்றின் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் நேற்று முன்தினம் (16) நண்பகல் ஜும்மா தொழுகையை முடித்துவிட்டு, சைக்கிள்களில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்று, கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
அன்றையதினம் மாலை 4.20 மணியளவில் மாணவர்கள் இருவர் திடீரென்று கடல் அலையால் உள்ளிழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் இயந்திரப்படகுகளின் உதவியுடன் சிறுவர்களை தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் செயற்பட்டனர். இரவு வரை தேடுதல் நடத்தியும் சிறுவர்களை கண்டு பிடிக்க முடியாததால் தேடும் பணி கைவிடப்பட்டது.
எனினும் நேற்றுக் காலை மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தின் முஹம்மட் முன்சிப் எனும் மாணவனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அத்துடன் மற்றைய சிறுவனை தேடும் பணி நேற்றுக் காலை ஆரம்பமானது. இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) எனும் மாணவனின் சடலமும் மீட்கப்பட்டது.
ஒலுவில் விசேட, நிந்தவூர் தினகரன், மாளிகைக்காடு குறூப் நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்கள்