ஹஜ் செயற்பாடுகளில் எவ்வித கட்சி, அரசியல் நடவடிக்கைகள் இடம்பெற ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். தூய்மையான எண்ணத்துடன் நாம் ஹஜ் முகவர்களுடன் செயற்படுவோமென அரச ஹஜ் கமிட்டி உறுப்பினர் மில்பர் கபூர் தெரிவித்தார். அரச ஹஜ் கமிட்டி உறுப்பினராக கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ள மில்பர் கபூரை, ஹஜ் முகவர்கள் சீனன்கோட்டை இல்லத்தில் நேற்று சந்தித்தனர்.
இதன்போது முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இச்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மில்பர் கபூர், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவே இப்பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் நான் நீதியாக எவ்வித பேதமுமின்றி செயற்பட வேண்டியது எனது பொறுப்பாகும்.
அதனையே அவரும் விரும்புகிறார். ஹஜ் என்பது எமது மார்க்க கடமை. அதில் நான் அரசியல் செய்வதை ஒருபோதும் விரும்பவில்லை.
அதேபோல் ஹாஜிகளை அழைத்துச் செல்கின்ற முகவர்களும் இறைவனின் கடமை என்ற வகையில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையே எமது ஹஜ் கமிட்டி எதிர்பார்க்கிறது.
முகவர்கள் தொடர்பில் நிறைய முறைப்பாடுகள் இருப்பதாக கேள்விப்படுகிறேன்.
எமது ஹஜ் கமிட்டி தலைவர் இப்ராஹீம் அன்ஸார் தலைமையிலான குழுவினர் இம்முறை இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு சிறந்த சேவையை வழங்கவுள்ளதோடு ஹஜ் முகவர்களின் நலன் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவுள்ளோம்.
இது விடயமாக நாம் விரைவில் அவர்களை சந்தித்து குறை, நிறைகள் தொடர்பில் பேச இருக்கிறோம். எந்த முகவராக இருந்தாலும் இறைவனின் கடமை என நினைத்து செயற்பட முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
அஜ்வாத் பாஸி