தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள 3,600 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் மும்முனை நிவாரணப்பொதி முறையொன்றை திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று கட்ட நிவாரணப் பொதியை மீளச் செலுத்துவதற்கான கால எல்லையை 5-6 வருடங்கள், 6-20 வருடங்கள் மற்றும் 20 வருடங்களென அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வெளிநாட்டு கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் இந்த கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்தை பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சலுகைக் காலத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உடன்பாட்டைப் பெறுவதற்கான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இதுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டால் 5-6 ஆண்டுகளுக்குள் 37 வீத வெளிநாட்டுக் கடனையும், அடுத்த 6-20 ஆண்டுகளுக்குள் 51 வீத கடனையும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீதமுள்ள 12 வீத கடனையும் திருப்பிச் செலுத்த இலங்கை அரசுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வகையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலப் பொதியைத் தயாரிக்க, உலகப் புகழ்பெற்ற இரண்டு நிபுணத்துவ ஆலோசனை நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக செயற்படுகின்றன. Clifford Hance என்ற நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடி சட்ட விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்கு Lazard நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், எவரொருவர் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்தக் கோரிக்கைகளுக்கமைய கடனை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேயாக வேண்டுமென்றும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையுடன் ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த செயலமர்வு, கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கே. அசோக்குமார்