- ஆண்டின் முதல் ஒன்றரை மாதங்களில் 38,000 பேர் வேலைவாய்ப்புக்காக பயணம்
- இஸ்ரேல், தென்கொரியா, ருமேனியா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பணியகத்துக்கு Job Orders
இலங்கையருக்கு இந்த ஆண்டுக்குள் சுமார் 350,000 புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்குமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் முதல் ஒன்றரை மாதங்களில் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை 38,000 பேர் என்றும் அப்பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023ஆம் ஆண்டில் 287,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அதற்கு முன்னைய ஆண்டு 2022 இல் இந்த எண்ணிக்கை 3,21,600 பேர் எனவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது. 2024 இல் இஸ்ரேல், தென்கொரியா, ருமேனியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அதிக சம்பளம் பெறக்கூடிய வேலைவாய்ப்புகளுக்கான அழைப்புகள் (Job Orders) பணியகத்துக்கு கிடைத்துள்ளதாகவும், மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் வேலை வாய்ப்புகளுக்கான உத்தரவுகள் (Job Orders) வந்துள்ளதாகவும் பணியகம் கூறுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், தற்போது பயிற்சி பெற்ற பணியாளர்களை அதிக சம்பளத்துடனான வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இணைந்து தற்போது ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி வசதிகள் போன்ற பல சேவைகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்று நேற்று17ஆம் திகதி வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இன்று 18ஆம் திகதியும் நிகழ்வு நடைபெறுகிறது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.