இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் இந்திய அரசாங்கத்திடமும் தாம் கோரியுள்ளதாக, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர் 43 பேரை அமைச்சர் ஜீவன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததுடன், இவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். இதன்போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (16) நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் கருத்துத் தெரிவித்த போது,
“யாழ்ப்பாணம் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர் 43 பேரை நான் நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினேன். அதன்போது 43 கடற்றொழிலாளர்களில் இருவர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையமை தெரியவந்தது.
ஏனைய 41பேருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மூலமோ அல்லது எம்மால் முடிந்த உதவிகளை நிட்சயமாக செய்வோம். இன்னும் 02 அல்லது 03 வாரங்களுக்குள் இந்தக் கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படுவார்களென்றும் நான் நம்புகிறேன். இலங்கை பொலிஸார் தம்மை நன்றாக நடத்துவதாக தமிழக கடற்றொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இதேவேளை, வடமாகாணத்திலுள்ள கடற்றொழிலாளர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். சிறிய படகுகளை வைத்துக்கொண்டே இவர்கள் தமது வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர். ஆகையால் இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கக்கூடாது. தமிழக கடற்றொழிலாளர்களும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் இலங்கையின் கடல் வளமும் பாதிப்படைகின்றது. இது கடல்சார் சட்டத்தை மீறும் செயலாகும்” எனத் தெரிவித்தார்.