தா ன் எவ்வாறு கொலை செய்தேன் என நடித்துக் காட்டிய லயனல் வியஜ குமாரதுங்கவின் கொலையின் காரணகர்த்தாக்கள் தொடர்பிலும், கொலையைச் செய்தவர் தொடர்பிலும் கொலை இடம்பெற்ற ஆறு மாதங்களில் பொலிஸாருக்குப் போதுமான தகவல்கள் கிடைத்திருந்தன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஜேவிபி செயற்பாட்டாளர்களில் சிலரை உளவாளிகளாக வைத்துக்கொண்டு செயற்படும் முறை பொலிஸாரிடம் இருந்தது. அத்துடன், ஜே.வி.பி.யின் கீழ்மட்டத்தில் இருந்த சிலரும் பொலிஸாருக்குத் தகவல்களைக் கொடுத்தனர். அவ்வாறு கிடைத்த அனைத்து தகவல்கள் மற்றும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்தும் விஜயவின் கொலையாளி லயனல் ரணசிங்க என்பது தெரியவந்தது. என்றாலும் அவன் எங்கிருக்கிறான் என்பது குறித்து பொலிசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. லயனல் ரணசிங்க ஹொரணை கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் லயனல் ரணசிங்கவை நேரில் கண்ட சாட்சிகளைக் கொண்டு கணனியில் வரையப்பட்ட புகைப்படம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த இரண்டு புகைப்படங்களும் விஜயவின் கொலை தொடர்பில் விசாரணையை நடத்தும் பொலிஸ் அதிகாரிகளிடம் எப்போதும் இருந்தது.
விஜயவின் கொலையை விசாரிக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்ததோடு, அதில் ஒரு குழு உப பொலிஸ் பரிசோதகர் விமலரத்னவின் கீழ் இயங்கியது. மார்ச் 14ஆம் திகதி காலை வேறொருவர் தொடர்பில் தேடுவதற்காக விமலரத்னவின் குழுவைச் சேர்ந்த டயஸ் மற்றும் பசில் ஆகியோர் வெளியேறிச் சென்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வரும் ஒருவர் தொடர்பான தகவலைப் பெற்றுக் கொள்வதே டயஸிடம் ஒப்படைக்கப்பட்ட பணியாகும். அதற்காக பசிலுடன் டயஸ் புறப்பட்டுச் சென்றிருந்தார். காலை ஒன்பது மணியளவில் கிரேகரி வீதியூடாக நடந்து சென்ற அவர்கள் பௌத்தாலோக மாவத்தையை அடைந்து துன்முல்லை நோக்கி திரும்பினர். முன்னால் வந்த இருவர் அகில இலங்கை பௌத்த சங்க கட்டடத்தை கடந்து சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் ஒருவர் எதிரே வந்து கொண்டிருந்தார்.
இனந் தெரியாத துப்பாக்கிதாரிகள் பலர் மனிதக் கொலைகளைச் செய்வதற்காக டி.56 துப்பாக்கியை துணிப் பைகளில் வைத்தே எடுத்துச் செல்வர். இதன் காரணமாக அவ்வாறான பைகளை எடுத்துச் செல்வோர் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. டயஸுக்கு சந்தேகம் எழுந்தது. அவர் மனதில் பதிந்திருந்த உருவம் ஒன்று நினைவுக்கு வந்தது. குறித்த நபர் துணிப் பையை எடுத்துச் சென்றதால் டயஸின் சந்தேகம் வலுத்தது. “அதோ வருவது லயனல்” டயஸ் தனது நண்பர் பசிலிடம் கூறினார். அந்நேரம், சந்தேகமடைந்த நபர் அவர்கள் இருவருக்கும் அருகே நின்றிருந்தார்.
“லயனல்! எங்கே போகிறீர்கள்…?” சார்ஜென்ட் டயஸ், தந்திரமாகக் கேட்டார். ஒரு நபரின் உண்மையான பெயரைச் சொல்லி அழைக்கும் போது அவர் எவ்வாறான வெளிப்பாடுகளை வௌிப்படுத்துவார் என்று பொலிஸ் அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தனர். “லயனல்…” என அழைத்ததும் அவர், தனது பெயரைக் கூறி அழைப்பதை அறிந்து கொண்டு சமிக்ஞை காட்டுவதை பொலிஸார் அவதானித்தனர்.
“நான் லயனல் அல்ல, பெர்னாண்டோ…” என பதிலளித்து, தன்னிடமிருந்த அடையாள அட்டையை எடுத்து பொலிஸாரை நோக்கி நீட்டினார். ஹொரனகே பியசிரி பெர்னாண்டோ என அந்த அடையாள அட்டையில் அவரது பெயர் குறிக்கப்பட்டிருந்தது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட லயனலின் புகைப்படம் மற்றும் விஜய குமாரதுங்கவைக் கொலை செய்த கொலையாளியின் கணனியில் காணப்பட்ட உருவப்படம் என இரண்டும் அந்நேரம் இரு அதிகாரிகளின் சட்டைப் பையிலும் இருந்தன. உடன் செயற்பட்ட டயஸ் சந்தேக நபரின் முதுகுக்குப் பின்னால் கையை நீட்டி அவரது இடுப்புப் பட்டியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அருகில் இருந்த முச்சக்கரவண்டியில் அவன் ஏற்றப்பட்டான்.
சந்தேக நபரை வாகனத்திலிருந்து இறக்கிய டயஸ், அவனைப் பிடித்துக் கொண்டு “லயனலைப் பிடித்து விட்டோம்” எனக் கூறியவாறு அலுவலகத்தினுள் நுழைந்தார். அந்நேரத்தில் அங்கிருந்த அனைத்து உத்தியோகத்தர்களும் லயனல் என்பவன் யார் என்பதைப் பார்ப்பதற்காக அங்கு ஒன்று கூடினர். லயனலை அழைத்துக் கொண்டு டயஸ் நேரே சென்றது பணிப்பாளரின் அறைக்குள்ளாகும். “சேர், லயனலைப் பிடித்து விட்டோம்…” பணிப்பாளர் முன் அறையிலிருந்த பொலிஸ் அத்தியட்சகர் காமினி பெரேராவுடன் பேசினார். அவரும் அவ்விடத்திற்கு வந்தார். அதன் பின்னர் சந்தேக நபரைப் பரிசோதித்த போதிலும் தான் ஹொரணையைச் சேர்ந்த பியசிரி பெர்னாண்டோ என்றே அவன் கூறினான்.
“நான் நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வை.எம்.பீ.ஏ கட்டடத்திற்கு அருகில் வந்தேன். நான் லயனல் அல்ல. நீங்கள் தவறாக என்னைப் பிடித்திருக்கின்றீர்கள். நான் பியசிரி…” சந்தேக நபரை விட அதிகாரிகள் புத்திசாலிகள். பொலிஸாருக்கே உரிய முறையில் விசாரணைகள் ஆரம்பமானது. சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தான் லயனல் என்பதை அவன் ஒப்புக்கொண்டான். லயனல் ரணசிங்க எனும் மஹிந்த அல்லது ஜயதிலக்க என்ற காமினியால் அதற்குமேலும் தனது அடையாளத்தை மறைக்க முடியாமல் போனது. பொலிஸாரிடம் இருந்த அவனது புகைப்படத்தை காட்டியபோது இனிமேல் தன்னிடம் மறைக்க எதுவும் இல்லை என்பதை உணர்ந்த அந்த இனந்தெரியாத நபர் தன்னை லயனல் என வெளிப்படுத்தினான்.
விஜயகுமாரதுங்க உள்ளிட்ட நாட்டின் முக்கியமானவர்கள் பலரைக் கொலை செய்தமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்ட லயனல் ரணசிங்க கைது செய்யப்பட்டமை கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் ஊடாக பொலிஸ்மா அதிபர் ஆர்னஸ்ட் பெரேராவுக்கு அறியக் கிடைத்தது. அது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவுக்கு அறிவிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்தார். ஜே.வி.பியை அடக்குவது தொடர்பில் கடும் முயற்சி எடுத்த அமைச்சர் விஜேரத்ன அன்றைய தினம் மாலை பொலிஸ் மாஅதிபர் ஏனர்ஸ்ட் பெரேராவுடன் விஜயகுமாரதுங்கவைக் கொலை செய்தவனைப் பார்ப்பதற்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்தார். லயனல் ரணசிங்கவுடன் நீண்ட நேரம் அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் பேசினர். லயனலைச் சந்தித்ததன் பின்னர் அமைச்சர் விஜேரத்ன, பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. லயனல் ரணசிங்கவை சி.ஐ.டியினர் அழைத்துச் சென்று 48 மணித்தியாலங்களின் பின்னர், அதாவது மார்ச் 18ஆம் திகதி மாலை 4.45 மணியளவில் இரகசிய பொலிஸ் பணிப்பாளர் சந்திரா ஜயவர்தனவினால் அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முழுப்பெயர் – பாலம்முல்லகே லயனல் ரணசிங்க எனும் காமினி எனும் மஹிந்த எனும் ஜயதிலக. வயது – 27 வருடங்கள். இனம் / சமயம் – சிங்களம் / பௌத்தம் தொழில் – நிலக்கடலை வியாபாரம் வதிவிடம் – இல. 5/2, தேசிய வீடமைப்புத் திட்டம், முணகம, ஹொரணை வர்த்தகப் பிரிவில் உயர் கல்வியை தொடர்வதில் ஆர்வம் கொண்டிருந்த லயனல் தனது குடும்பத்துடன் ஹொரணைக்கு வந்த பின்னர் ஹொரண வித்யாரத்னவில் உயர்கல்வி பயின்றான். இந்தக் காலப்பகுதியில் லயனல் ஜே.வி.பி.யில் இணைந்தாலும் அதற்குத் தேவையான பின்னணி அவரது வீட்டில் அமைந்திருந்ததாகத் தெரிகிறது. லயனலின் தாயார் 90களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார். லயனல் தனது குடும்பப் பின்னணியில் இருந்து ஜே.வி.பி.யுடன் தொடர்பு வைத்திருந்தான்.
ஹொரண வித்யாரத்னவில் லயனலை விட சிரேஷ்ட மாணவரான ஜயசிறி என்ற யகிரல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லயனலை ஜேவிபியுடன் இணைத்தார். ஜயசிறியும் ஜே.வி.பி உறுப்பினராக இருந்ததோடு, லயனல் ஜே.வி.பியுடன் இணைந்தது ஹொரணை ஷீலரத்ன வீதியிலுள்ள வீடொன்றில் அமைந்துள்ள ஜே.வி.பி அலுவலகத்தின் ஊடாகவாகும். இதன் அமைப்பாளராக இருந்தது யட்டியந்தோட்ட சந்திரசிறியாகும். சந்திரசிறி கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்றார். 1979/80 காலத்தில், அதன் மாணவர் சங்கத் தலைவராகச் செயற்பட்டதும் சந்திரசிறியாகும். லயனல் ஷீலரத்ன வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஜே.வி.பி அரசியல் வகுப்புகளில் கலந்து கொண்டார். லயனலுடன் இந்த வகுப்புகளில் கலந்துகொண்ட மற்றுமொருவர் ஹொரனை எல்லகந்த தோட்டத்தில் வசிக்கும் அபேசிங்க ஆவார்.
1986ம் ஆண்டின் இறுதியில், படகொட கமகே ஜயவர்தனவை லயனல் சந்தித்தார். ஷீலரத்னா வீதியில் வசித்து வந்த அவர், ஷீலரத்னா வீதியிலுள்ள ஜே.வி.பி அலுவலகத்தின் அமைப்பாளராகவும் இருந்தார். முன்பிருந்த அறிமுகத்தின் அடிப்படையில் லயனலுடன் சேர்ந்து கொண்ட ஜயவர்தன, தனது பயணச் செலவு மற்றும் உணவுக்காக பல தடவைகள் லயனலிடம் பணம் பெற்றுக் கொண்டிருந்தார். அத்துடன் கட்சிக்காக நிதி திரட்டும் சந்தர்ப்பங்களின் போது நன்கொடைப் பத்திரங்களுக்காக லயனலிடம் இருந்து பணத்தையும் பெற்றுக் கொண்டார். ”
லயனல் நிலக்கடலை விற்பனையில் ஈடுபட்டிருக்கும் போது கட்சியின் பலரையும் ஜயவர்தன அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். கருணாதரத்ன, சுனில் மற்றும் ஹேரத் போன்றோரை அவ்வாறு அறிமுகப்படுத்தி வைத்தது லயனலுக்கு நினைவில் உள்ளது. ஹேரத் மத்திய போக்குவரத்துச் சபைக்குரிய களுத்துறை தெற்கு டிப்போவின் பஸ்ஸின் சாரதியாக பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார். அவர் பஸ்ஸில் ஹொரணைக்கு வரும் போது நடைபாதையில் நிலக்கடலை சாப்பிட்டுக் கொண்டு லயனலுடன் பேசுவார். திருமணமான ஹேரத் களுத்துறை யட்டதொல வீதியில் வசித்து வந்துள்ளார். ஹேரத் என அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவரது உண்மையான பெயர் டாசன் வீரசிங்கவாகும். ஹேரத் மற்றும் திஸ்ஸ என்ற இரண்டு பெயர்களும் அவருக்கு கட்சியினால் வழங்கப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் சந்திரா ஜயவர்தனவிடம், முதல் நாள் விசாரணையின் போது லயனல் ரணசிங்க சுமார் நான்கு மணித்தியாலங்களாக வழங்கிய வாக்குமூலத்தை சந்தேகத்திற்கு இடமின்றி அவ்வாறே குறிப்பிட முடியும். முதலாவது இலக்கை லயனல் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார்.
89ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி மாலை 4.10 மணியளவில் குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இரண்டாவது நாளாக லயனல் ரணசிங்கவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பம்பரகந்த பிரதேசத்தில் நடாத்தப்பட்ட கட்சியின் முகாமில் லயனல் ஜயவர்தனவினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அது 1986ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெற்றிருந்தது. துப்பாக்கியால் சுடும் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டன. அந்தப் பயிற்சி அளிக்கப்பட்ட விதத்திற்கு அமைய பயிற்சியாளர் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பதை லயனல் புரிந்து கொண்டார்.
மார்ச் மாதம், கட்சியின் ஆயுதப் பிரிவுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஸ்ரீபாதவில் நடத்தப்பட்ட மற்றொரு முகாமில் லயனல் கலந்து கொண்டார். ஒவ்வொரு நபருக்கும் ஒரு இலக்கம் வழங்கப்பட்டிருந்தது. அந்த இலக்கத்தினால் மட்டுமே எவரையாவது அழைக்க முடியும். துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்கு இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. ஏனைய பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது துப்பாக்கி வடிவத்திலான மரத் துண்டுகளைக் கொண்டாகும். ஏழு நாள் பயிற்சியின் முடிவில் கட்சியின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் உரையும் நிகழ்த்தப்பட்டது. வரும் காலத்தில் கட்சியை ஒடுக்குவதற்கு அரசாங்கம் ஆயுதங்களை கொண்டு வரும் எனவும், எனவே அடக்குமுறையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் குழுவிடம் தெரிவித்தார். பயிற்சி முடிந்து வரும்போது லயனல் மற்றும் அவரது குழுவினர் சமணலகந்த மலையில் ஏறி சிறீபாதவில் வழிபாட்டில் ஈடுபட மறக்கவில்லை. லயனல் உள்ளிட்ட ஏனைய தரப்பினரை ஈடுபடுத்தி கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தை ஈட்டுவது, உயர் மட்டத்தில் இருந்த ஜேவிபி தலைவர்களின் தேவையாக இருந்தது.
ஹொரணையில் அமைந்திருந்த திலகாசிறி ஸ்டோர்ஸின் பாணந்துறை கிளையில் கொள்ளையடிப்பதே இக்குழுவின் திட்டமாக இருந்தது. அதற்காக அவர்களிடம் இரண்டு கல்கட்டாஸ் துப்பாக்கிகள், தோட்டாக்கள் இல்லாத கைத்துப்பாக்கி ஒன்று, மூன்று வெள்ளை இரும்புக் கத்திகள் மட்டுமே இருந்தன. பணத்தைக் கொள்ளையிட்டுச் செல்ல வந்த வாகனத்துடன் கடைக்குச் சொந்தமான மற்றொரு லொறி அவ்விடத்திற்கு வந்ததால் அந்த நடவடிக்கை வெற்றியடையவில்லை. முயற்சி தோல்வியடைந்ததால், ஒரு பிளின்ட்லாக், கைத்துப்பாக்கி என்பன ஜெயவர்த்தனவினால் லயனலிடம் ஒப்படைக்கப்பட்டன. திட்டம் தோல்வியடைந்ததால் அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்கள் அனைத்தையும் துணிப்பை ஒன்றுக்குள் போட்டு ஜயவர்தனவினால் லயனலிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனது புத்தகங்களை வைத்திருந்த, டிரங்க் பெட்டியினுள் அந்த அனைத்தையும் மறைத்து வைத்திருந்த லயனல், மறுநாள் நிலக்கடலை வியாபாரத்திற்குச் செல்லாமல், வீட்டில் உள்ள சமையலறையில் சில திருத்த வேலைகளில் ஈடுபட்டார். சிங்களப் புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருந்ததால், லயனலுக்கு சமையலறையை சீரமைக்க வேண்டியிருந்தது. அன்றைய தினம் மதியம் இரண்டு மணியளவில் லயனலின் வீட்டிற்கு வந்த ஜயவர்தன, அன்று இரவு ஹொரணை நகரில் சந்திக்குமாறும், வரும் போது இரண்டு பைகளையும் எடுத்து வருமாறும் கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினான். அன்றைய தினம் இரவும், முன்னைய நாளும் டாசன் வீரசிங்க எனும் ஹேரத் வெள்ளை நிற ஹையெஸ் வேனில் வந்திருந்தான். அந்த வேனில் லயனல் ஏறிய போது வேனின் உட்புறத்தில் சுனில், கருணாரத்ன மற்றும் ஜயவர்தன ஆகியோர் இருந்தனர். திலகசிறி ஸ்டோர்ஸில் கொள்ளையடிப்பதே இக்குழுவினரின் நோக்கமாக இருந்தாலும், அப்போதிருந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, செரண்டிப் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையத்திலிருந்து பணத்தை எடுத்துச் செல்லும் போது, அப்பணத்தைக் கொள்ளையிட அவர்கள் முடிவு செய்தனர்.
ஆயுதங்களுடன் ஹொரணை நகரில் வேனில் அவர்கள் இருந்த போது எதிர்பாராத வகையில் பொலிஸ் குழுவொன்று வேனையும் அதிலிருந்தவர்களையும் சோதனையிட ஆரம்பித்தது. வேனில் இருந்த ஆயுதங்களை பொலிசார் கண்டுபிடித்ததும், வேனிலிருந்த அந்த நான்கு பேரையும் வேனுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நால்வரையும் தனித்தனியாக பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர். லயனலிடம் விசாரணை நடத்திய போது “நாங்கள் அனைவரும் ஜேவிபிக்காரர்கள்… இன்று திலகசிறி ஸ்டோர்ஸ் அல்லது செரண்டிப் மதுபான நிலையத்தில் கொள்ளையடிப்பதற்காக வந்தோம்… நேற்று பாணந்துறையில் திலகசிறி ஸ்டோர்ஸில் கொள்ளையடிக்க சென்ற போதும் அது சரிவரவில்லை…” எனக் கூறியுள்ளான்.
இவைகளின் காரணமாகவே குறித்த குழுவினர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்துடன், ஹொரணை பொலிசார் அனைத்து நபர்களின் புகைப்படங்களையும் கைரேகைகளையும் எடுத்துக் கொண்டனர்.
லயனல் வெளிப்படுத்திய இந்த சம்பவம் நாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வாக இருந்தோடு, 1987 ஏப்ரல் 16ம் திகதி திவயின பத்திரிகையின் முதல் பக்கத்தின் முக்கிய தலைப்புச் செய்தியாகவும் அமைந்திருந்தது. “தடைசெய்யப்பட்ட கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் புரட்சிகர புத்தகங்களுடன் கைது செய்யப்பட்டனர்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்த அந்தச் செய்தி தொடர்பில் மற்றொரு செய்தி 1987 ஏப்ரல் 18ம் திகதி திவயின பத்திரிகையில் வெளியானது. “ஹொரணை பொது தபால் நிலையத்திற்கு அருகில் கடந்த 12ம் திகதி ஹொரனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஐந்து பேரின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர் ஒருவரின் வீட்டிலிருந்து சில காலத்திற்கு முன்னர் திருடப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்குரிய புத்தகத்துடன் கைது செய்யப்பட்ட இவர்கள் பயணித்த 40 ஸ்ரீ 3182 என்ற இலக்கத்தை உடைய வெள்ளை நிற ஹையெஸ் வேன் தற்போதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓசித அத்தநாயக்க தமிழில் முஸப்பீர்