Home » இலங்கையின் சுற்றுலாத்துறை, வர்த்தகம் வளர்ச்சியடையும் வாய்ப்பு!

இலங்கையின் சுற்றுலாத்துறை, வர்த்தகம் வளர்ச்சியடையும் வாய்ப்பு!

by Damith Pushpika
February 18, 2024 6:20 am 0 comment

இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள போதும், நாட்டின் மீதான சர்வதேசத்தின் அவதானத்தில் குறைவு ஏற்படவில்லை. நாட்டை சவால்களிலிருந்து மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள பிரயத்தனங்களுக்கு சர்வதேசத்தின் ஒத்தழைப்பும் அவ்வப்போது கிடைத்து வருகிறது.

இந்த வரிசையில் ‘பிக் பிரதர்’ என வர்ணிக்கப்படும் எமது அயல்நாடு இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பு மற்றும் பாராட்டிவரும் நட்பு தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானதாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நெடுங்கால நட்புறவுக்கும் ஒத்துழைப்புக்கும் பல்வேறு முன்னுதாரணங்கள் இருக்கின்றபோதும், அண்மைய காலத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்பு பரஸ்பர நன்மை அளிக்கும் விதத்தில் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவியபோது, இந்தியா வழங்கிய கடனுதவியே நாட்டுக்குப் பேருதவியாக இருந்தது. நாடு படிப்படியாக ஓரளவு சீரான நிலைக்குத் திரும்புவதற்கு இந்தியாவின் உதவி பெரிதும் கைகொடுத்தது.

இந்தியாவின் குறுகியகால உதவிக்கு அப்பால் நீண்டகால நோக்கத்திலான உதவிகளும் படிப்படியாக வழங்கப்படுகின்றன. நாட்டைக் கட்டியெழுப்புவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் உதவி செய்து வருகிறது. நாட்டைப் பொருளாதா ரீதியில் மீட்பதற்கு இலங்கைக்குக் காணப்பட்ட சிறந்த தெரிவான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறும் விடயத்திலும் இந்தியா இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது.

அதற்கும் அப்பால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன்தவணையைப் பெற்றுக் கொள்வதற்கான முட்டுக்கட்டையாக விளங்கிய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா மனப்பூர்வமாக இணங்கித் தனது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

நேரடியான உதவிகளுக்கு அப்பால் நாட்டின் முன்னேற்றத்துக்கான முதலீடுகளை மேற்கொள்வதிலும் இந்தியா ஆர்வம் காட்டியுள்ளது. இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையில் பிரதானமாக விளங்கும் சுற்றுலாத்துறைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘உங்களுக்கு எனது முதல் அறிவுரை, அடுத்த முறை நீங்கள் விடுமுறை எடுக்க விரும்பினால், இலங்கைக்குச் செல்லுங்கள். தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள். உங்கள் அனைவருக்கும் இதைச் சொல்கிறேன்’ எனக் கூறியிருந்தார்.

அண்மைக் காலமாக இலங்கைக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளையும், சுற்றுலாத்துறையையும் வலுப்படுத்தும் நோக்கில் மற்றுமொரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கியூ ஆர் குறியீட்டின் மூலம் (QR Code) ஊடாக ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI ஊடாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதே அதுவாகும். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றதுடன், இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்நிலையின் ஊடாகக் கலந்து கொண்டிருந்தார்.

NNPCI International Payments Limited மற்றும் இலங்கை NLankaPay நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை விரைவாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், இந்த வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை மார்ச் 2024 இற்குள் 65,000 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனது அண்மைய உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது வெளியிடப்பட்ட ‘தொலைநோக்கு அறிக்கையின்’ பிரகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த கொடுப்பனவு முறைமை (UPI) அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், LankaQR ஊடாக UPI பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு உகந்த முறையான LankaQR ஆனது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது. அதன்படி, UPI- கைபேசி செயலியைப் தடையின்றி பயன்படுத்தி இலங்கை முழுவதும் உள்ள வணிகர் சமூகத்திற்கு கொடுப்பனவுகளை செலுத்த முடியும்.

மேலும் இந்த ஏற்பாடு நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்தும். மேலும், இலங்கையில் உள்ள சுமார் 20 உள்ளூர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு தங்கள் ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளுக்கு இந்தச் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயப்படுத்தலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் இந்தியா தனது அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளையும் டிஜிட்டல் ரீதியான கொடுக்கல் வாங்கலுக்குள் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் விடயத்தில் நரேந்திர மோடி அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தபோதும் எடுத்த காரியத்தில் விடாப்பிடியாகவிருந்த மோடி நிர்வாகம் சாதித்துக்காட்டியுள்ளது.

‘ஆதார் அட்டை’ என்ற தனித்துவமான அட்டையின் அடிப்படையில் ஒவ்வொருவரினதும் கொடுக்கல்வாங்கல்களையும் டிஜிட்டல் மயப்படுத்தியுள்ள இந்தியா, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் துறையில் முன்னணியில் காணப்படுகிறது. இதுபோன்ற துறைகளில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவும் அந்நாடு தயாராகவுள்ளது.

எரிபொருள் நெருக்கடி இலங்கையில் நிலவியபோது நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கியூ ஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிைசகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

இதுபோன்று ஏனைய துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதானது இலங்கைக்கு சிறந்த பலாபலன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை. தற்பொழுது இலங்கையும் இந்தியாவும் இணைந்து ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI ஐ இங்கு அறிமுகப்படுத்தியிருப்பது இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மைகளை வழங்கும்.

தமது நாட்டில் பயன்படுத்தப்படும் செயலியைக் கொண்டே கொடுக்கல் வாங்கல்களை இலங்கையில் மேற்கொள்ள முடியும் என்பதால் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதில் ஆர்வம்காட்டுவர். இதனால் இலங்கையின் அந்நியச் செலாவணி அதிகரிப்பதுடன், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சுற்றுலாத் துறையின் பங்களிப்பை மென்மேலும் வளர்க்க முடியும்.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division