சிறுவர்கள் எதிர்கால இலங்கையின் தூண்கள். அவர்களின் பாதுகாப்பு என்பது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளதோடு பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் இலங்கையில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அரங்கேறிய வண்ணமே உள்ளது.
-இந்த வகையில் மன்னார் மாவட்டம் தலைமன்னார் கிராம பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 வயதுடைய சிறுமி ஒருவருக்கு கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார் கிராம பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் 10 வயதுடைய சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை (16) காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பிரதேச மக்கள் மத்தியில் சோகத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மன்னார்- தலைமன்னார் கிராம பகுதியில் வசித்து வரும் அ.ஆன்கியான்சிதா (வயது-10) என்ற சிறுமி வியாழக்கிழமை (15) இரவு காணாமல் போன நிலையில் மறு நாள் வெள்ளிக்கிழமை (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந் தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-குறித்த சிறுமியின் தாயார் தலைமன்னாரையும் தந்தையார் புத்தளம் பகுதியையும் சேர்ந்தவர்கள். குறித்த தம்பதியினருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். நான்கு பிள்ளைகளையும் தலைமன்னார் கிராமத்தில் உள்ள தனது தாயிடம் அதாவது பிள்ளைகளின் அம்மம்மாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு, தாயும், தந்தையும் புத்தளம் மாவட்டம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த சிறுமி குடும்பத்தின் 3வது பெண் பிள்ளை. 2 அக்கா மற்றும் 1 தம்பியுடன் தனது அம்மம்மாவின் வீட்டிலேயே குறித்த நால்வரும் வசித்து வந்துள்ளனர். சம்பவ தினம் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சிறுமி தனது தம்பிக்கு சாப்பிட உணவு வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, பொலிஸார் சிறுமியை தேட நடவடிக்ைக எடுத்தனர்.
அவர்களது வீட்டுக்கருகில் உள்ள தென்னந்தோட்டத்தில் சென்று வினவிய போது அங்கிருந்த நபர் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த நிலையில் பொலிஸார் மீண்டும் தேடியுள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பரிசோதித்த போது சிறுமியின் பின்னால் அச்சிறுமியைப் பற்றி பொலிஸார் முதலில் விசாரித்த நபர் செல்வது தெரியவந்தது.
இந்த நிலையில் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தி இரவு முழுவதும் தேடிய போதும் வெள்ளிக்கிழமை (16) அதிகாலை சிறுமியின் உடல் தனியார் தென்னந் தோட்டத்தின் பின் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் குச்சவெளி திருகோணமலை யைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அந்நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என மாற்றி வசித்து வருவதும் தெரிய வருகிறது.
சந்தேக நபர் போதைக்கு அடிமையாகி மனைவியைப் பிரிந்து சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் அம்மம்மா அண்மைய நாட்களாக அந்நபருக்கு உணவு வழங்கி வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடல பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதன் போது சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சந்தேகநபரை உடனடியாக தூக்கில் போடுமாறும் கோஷங்களை எழுப்பினர். சந்தேகநபருக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி விசாரணைக்காக வருகை தந்த பதில் நீதவானிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்து தலைமன்னார் பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தலைமன்னார் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சிறுமியின் மரணம் தொடர்பாக அறிந்து கொள்ள முடியும். சிறுமியின் கொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் சிறுவர்கள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக இருக்கிறது. சிறுமியின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பொலிஸார் சிறுமியின் கொலைக் குற்றவாளியை விரைவாக கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அதி உச்ச தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 10,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகளும், சிறுமிகள் பலாத்காரம் தொடர்பான 51 முறைப்பாடுகளும், சிறுவர்களை ஆபாசமான பதிவுகளில் பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களை பயன்படுத்துதல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறை, புறக்கணிப்பு, கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை தொடர்பிலும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார். சிறுவர்கள் எதிர்கால இலங்கையின் தூண்கள். அவர்களின் பாதுகாப்பு என்பது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.
மன்னார் குறூப் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்