ஐக்கிய நாடுகள் சமவாயத்தின்படி உலகில் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் சிறார்களாவர். உளப்பக்குவம் முதிர்ச்சியடையாத சிறார்களின் அடிப்படை உரிமைகளைப் பேணுவதும், அவர்களுக்கான தேவைகளை வழங்குவதும் வளர்ந்தோரின் கடமைகள் ஆகின்றன.
பெற்றோரைப் பொறுத்தவரையில் தங்களது இளவயதுப் பிள்ளைகளின் நலன்களைப் பேணுவது அவர்களின் முக்கிய கடமையாகும். கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அதேவேளை சிறார்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பதும், அவர்களது உரிமைகளை மீறுவதும் பாரதூரமான குற்றங்களாகும்.
ஐ.நாவின் சிறுவர் சமவாயத்தை ஏற்றுக் கொண்டுள்ள அத்தனை நாடுகளும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகின்றன; அதற்கான சட்டதிட்டங்களையும் வகுத்து அவற்றை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டதிட்டங்களை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்துகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
ஆனால் இத்தனை சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும், சிறுவர் மீதான குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதென்பது இயலாத காரியமாகவே உள்ளது. அன்றாடம் நாம் வெகுஜன ஊடகங்களைப் பார்க்கின்ற போது இந்த உண்மை புரிகின்றது. சிறுவர் மீதான குற்றங்கள் ஆங்காங்கே தொடர்ந்தவாறுதான் உள்ளன.
சிறுவர் மீதான குற்றங்களை இழைப்பவர்கள் இளவயதினர் மாத்திரன்றி, வயது வந்தோராகவும் இருக்கிறார்கள். ஆங்காங்கே இடம்பெறுகின்ற சம்பவங்களில் அநேகமானவை பாலியல்ரீதியான குற்றங்களாகவே உள்ளன. சிறார்கள் உயிரிழந்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன.
சிறார்களை உடல்ரீதியாக மாத்திரமன்றி, உளரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்பதை பெரியவர்கள் அறிந்து வைத்துள்ள போதிலும், அவ்வாறான குற்றங்களை இழைத்துவிட்டு அக்குற்றவாளிகள் நீண்டகால சிறைவாசத்துக்குச் செல்வதுதான் வியப்பாக உள்ளது.
பிராணிகள் கூட தங்களது சின்னஞ்சிறுசுகளை எத்தனை பத்திரமாகப் பாதுகாத்து வளர்க்கின்றன என்பதை கல்மனம் படைத்த மனிதர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் சின்னஞ்சிறியோருக்கு தீங்கிழைக்கும் வன்மம் மனிதஇனத்தில் காணப்படுவது வெட்கத்துக்குரியது.
காட்டுமிராண்டித்தனமான சுபாவமுள்ளவர்கள் முதலில் அப்பாவித்தனம்மிக்க பிஞ்சுகளின் மனோநிலையை புரிந்து கொள்ள வேண்டும். மனப்பிறழ்வு கொண்ட இவ்வாறான குற்றவாளிகளின் உள்ளத்தில் சமூகநீதியையும், ஒழுக்கவிழுமியத்தையும் ஊட்டுவது நம் அனைவரினதும் கடமையாகும். இக்குற்றவாளிகளைத் தண்டிப்பதில் சட்டம் ஒருபோதுமே கருணை காட்டாதென்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.