Home » நன்கொடைகள் நிறுத்தம்: ஐ.நா. UNRWA நிறுவனம் மூடப்பட்டு விடுமா?

நன்கொடைகள் நிறுத்தம்: ஐ.நா. UNRWA நிறுவனம் மூடப்பட்டு விடுமா?

by Damith Pushpika
February 11, 2024 6:12 am 0 comment

நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் ஐக்கிய நாடுகள் நிவாரணம் மற்றும் பணிகளுக்கான முகவரகத்தின் (UNRWA) இருப்புக்கே சவாலாகியுள்ளது. பலஸ்தீன், இஸ்ரேல் அகதிகளுக்கு மனிதாபிமான நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவென ஐக்கிய நாடுகள் சபையால் 1949 இல் ஸ்தாபிக்கப்பட்ட முகவரகமே இது.

1948 இல் இடம்பெற்ற முதலாவது அரபு- இஸ்ரேல் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பலஸ்தீன், இஸ்ரேல் அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட இவ்வமைப்பு பலஸ்தீனின் காஸா, மேற்குகரை, கிழக்கு ஜெரூஸலம் ஆகிய பகுதிகளிலும் லெபனான், ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளிலும் உள்ள 65 அகதிமுகாம்களில் தற்போது தங்கியிருக்கும் 59 இலட்சம் பலஸ்தீன அகதிகளுக்கு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக பலஸ்தீன மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது இவ்வமைப்பின் பிரதான பணிகளாகும்.

அந்த வகையில் 23 இலட்சம் பலஸ்தீனர்களைக் கொண்ட காஸாவில், 08 அகதி முகாம்களில் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக இருந்தனர். காஸா மீது கடந்த 125 நாட்களுக்கும் மேலாக வான், கடல், தரை ஆகிய மூன்று மார்க்கங்கள் ஊடாகவும் இஸ்ரேல் கடும் யுத்தத்தை முன்னெடுத்துள்ளது.

இதனால் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டுள்ள பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளனர். காஸாவின் 85 சத வீதமான பலஸ்தீனியர்கள் இருப்பிடங்களை இழந்து மீண்டும் அகதிகளாகியுள்ளனர். அவர்களில் பெரும்பகுதியினர் ஐ.நா.வின் UNRWA முகவரகத்தின் கூடாரங்களில் தங்கியுள்ளனர். தொடரான யுத்தம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக காஸா மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

காஸாவில் செயற்படும் மிகப்பெரிய மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனமாக விளங்கும் இம்முகவரகத்தின் மனிதாபிமான உதவிகளில்தான் பெரும்பாலான பலஸ்தீனியர்கள் தங்கியுள்ளனர். அதனால் கடும் அர்ப்பணிப்பு மற்றும் சவால்களுக்கு மத்தியில் இம்முகவரகம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சேர்க்கிறது.

ஆன போதிலும் இப்போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரையும் இந்நிறுவனத்தின் கட்டடங்கள் மீது 290 தடவைகள் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். அதனால் இடம்பெயர்ந்திருந்த 290 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 1374 பேர் காயமடைந்துள்ளனர். அதேநேரம் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இப்போரில் பலியாகியுள்ளனர். வடக்கு காஸாவுக்கு மனிதாபிமான உதவியை எடுத்து சென்ற ட்ரக் வண்டி கூட அண்மையில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்படியிருந்தும் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதில் இருந்து இந்நிறுவனம் பின்வாங்கி விடவில்லை.

இந்நிலையில் இஸ்ரேல், கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் இம்முகவரகத்தைச் சேர்ந்த சில ஊழியர்களும் பங்குபற்றியுள்ளனர் என்று குற்றம்சாட்டி கடும் விமர்சனம் தெரிவித்திருந்தது. அக்குற்றச்சாட்டுக்கு அமைய இம்முகவரகம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 12 பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை உறுதிப்படுத்தியுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசாரினி, ‘எமது அமைப்பின் அனுசரணையுடனோ அங்கீகாரத்துடனோ அவர்கள் எவரும் இக்காரியத்தில் ஈடுபடவில்லை’ என்றுள்ளார்.

அத்தோடு ஐ.நா. மனிதாபிமான உதவிகளுக்கான பிரதானி மார்டின் கிரிபித், இம்முகவரகம் தங்களது ஊழியர்களின் பெயர் விபரங்களை ஒவ்வொரு வருடமும் இஸ்ரேலுக்கும் பலஸ்தீன அதிகார சபைக்கும் அறிவித்து வந்துள்ளது. இருப்பினும் இச்சம்பவத்திற்கு முன்னர் எதுவித புகாரையும் இம்முகவரகத்தின் பணியாளர்கள் குறித்து எவரும் தெரிவித்திருக்கவில்லை என்றுள்ளார்.

அப்படியிருந்தும் இஸ்ரேலின் குற்றச்சாட்டின் அடிப்படையில் இம்முகவரகத்திற்கான நிதி நன்கொடைகளை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட சுமார் 19 நாடுகள் கடந்த மாத இறுதிப்பகுதியில் நிறுத்தியுள்ளன. இதனால் இந்நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் முடங்கிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிறுவனத்திற்கான நிதி நன்கொடைகளை நிறுத்துவதற்கு எடுத்துள்ள முடிவை நன்கொடை நிதியுதவி நாடுகள் மீள்பரிசிலனை செய்யாவிட்டால் இம்மாத இறுதி முதல் இந்நிறுவனம் செயற்பட முடியாத நிலைக்கு உள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளது.

இப்பின்புலத்தில்தான் UNRWA வுக்கான நிதி நன்கொடைகளை நிறுத்த மேற்கு நாடுகள் எடுத்துள்ள முடிவு உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது.

30 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பகுதியினர் பலஸ்தீன அகதிகளாவர். சிறு தொகையினர்தான் சர்வதேச ஊழியர்களாவர். இந்நிறுவனத்தின் 13 ஆயிரம் பேர் காஸாவில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் விரல்விட்டெண்ணக்கூடிய 12 பேர் இச்செயலில் ஈடுபட்டமை உறுதிப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டும் கூட இந்நிறுவனத்திற்கான நிதி நன்கொடைகள் நிறுத்தப்பட்டமை பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

12 பேருக்காக 59 இலட்சம் அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை முடக்கும் வகையில் இவ்வாறான முடிவை எடுப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்தக்கூடியதல்ல. அது காஸா மக்களுக்கு ஒரு கூட்டுத்தண்டனையாகவே அமையும். அதனால் இம்முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறும், இம்முகவரகத்திற்கான நிதியுதவியை நிறுத்த வேண்டாம் என்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதே கோரிக்கையை உலகின் பல தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இம்முகவரகத்துக்கு ஒவ்வொருவரும் நன்கொடை நிதியுதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், உதவி வழங்கும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இம்முகவரகம் குறித்த விசாரணைகள் சர்வதேச தரத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நன்கொடையாளர்கள் நிதியுதவியை மீண்டும் தொடங்குவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இல்லாவிடில் UNRWA இம்மாத இறுதியோடு பிராந்தியம் முழுவதும் அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த வழிவகை செய்து விடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

இதேவேளை UNRWA செயல்பாடுகளில் நடுநிலையாக செயல்படுகிறதா என்பதை தீர்மானிக்கவென முன்னாள் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனாவின் தலைமையில் சுயாதீனமான குழுவொன்றையும் செயலாளர் நாயகம் நியமித்துள்ளார். சுவீடனிலுள்ள ரவுல் வாலன்பெர்க் நிறுவனம், நோர்வேயிலுள்ள மைக்கேல்சன் நிறுவனம் மற்றும் மனித உரிமைகளுக்கான டேனிஷ் நிறுவனம் ஆகிய மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள இக்குழுவின் முதலாவது அமர்வு பெப்ரவரி 14 ஆம் திகதி இடம்பெறவிருப்பதோடு மார்ச் மாத இறுதிக்குள் இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ‘காஸாவில் மருத்துவ வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மக்களுக்கு இந்நிறுவனத்தின் மனிதாபிமான உதவிகளே ஒரு ஆறுதல். அதனால் இந்த இக்கட்டான தருணத்தில் இம்முகவரகத்திற்கான நிதியை நிறுத்த வேண்டாம் என்று நன்கொடையாளர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிதியுதவியை நிறுத்துவது காஸா மக்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பலஸ்தீனிய அதிகாரசபையின் சிவில் விவகாரங்களுக்கான அமைச்சர் ஹுசைன் அல்-ஷேக், யு.என்.ஆர்.டப்ளியு.ஏ நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதால் மனிதப் பேரவலம் ஏற்படக்கூடிய அபாயமுள்ளது. அதனால் மேற்கத்திய நன்கொடையாளர்கள் தங்கள் முடிவை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். ஹமாஸும் இதேவிதமான கோரிக்கையை விடுத்திருக்கிறது.

இவ்வாறான நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், பலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. முகவரகத்தைத் திரும்பப் பெறுவது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும். தற்போது, இடைநிறுத்தப்பட்ட நிதி 440 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்டதாக உள்ளது. இது 2024 இல் முகவரகம் எதிர்பார்க்கும் வருமானத்தில் சுமார் அரைவாசியாகும். இந்நிலைமை முகவரத்தின் இருப்பையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் யு.என்.ஆர்.டப்ளியு.ஏ. நிறுவனத்தின் தலைவரைப் பதவி விலகுமாறு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்திய போதிலும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, UNRWA உடனடியாக மூடப்படுவதை எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு ‘மனிதாபிமான பேரழிவை’ ஏற்படுத்தக்கூடுமென அவர் அஞ்சுவதாக, ‘டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ மூத்த அரசாங்க அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் UNRWA இன் லெபனான் தலைவர் டோரதி கிளாஸ், இடைநிறுத்தப்பட்ட நிதியுதவி மீண்டும் தொடங்கும் வரை சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். தற்போது 19 நன்கொடையாளர்களின் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மார்ச் இறுதி வரை லெபனானில் உள்ள பலஸ்தீனிய அகதிகளுக்கு சேவைகளை வழங்கமுடியும். அதற்குள் மீண்டும் நிதியுதவி வழங்காவிடில் லெபனானின் 12 அகதிகள் முகாம்களில் உள்ள 4,89,292 பாலஸ்தீனிய அகதிகள் பாதிக்கப்படுவர் என்றுள்ளார்.

இந்நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குவதை அமெரிக்கா உள்ளிட்ட 19 மேற்கு நாடுகள் நிறுத்துவதாக அறிவித்துள்ள போதிலும் நோர்வே, ஸ்பெய்ன், சவுதி அரேபியா, கட்டார், துருக்கி போன்ற நாடுகள் தொடர்ந்து நிதியுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளன. அந்த வகையில் நோர்வே 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

‘3.8. மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வமைப்புக்கு மேலதிகமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ள ஸ்பெய்ன் கடந்த டிசம்பரிலும் மாத்திரம் 11 மில்லியன் டொலர்களையும் வழங்கியது. 2023 ஆம் ஆண்டுக்காக இவ்வமைப்புக்கு ஸ்பெய்ன் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனத்திற்கான நிதியுதவியை கட்டார் இரு மடங்காக அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளது.

ஆகவே பலஸ்தீன மக்கள் பட்டினிச்சாவுக்கு முகம்கொடுப்பதை தவிர்ப்பதற்காக அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுவது இன்றியமையாததாகும்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division