இந்தியாவின் மகளிர் பீரிமியர் லீக் தொடர் பெண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை பிரபலமானது. என்றாலும் 2024 மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் தான் விலைபோகாததைப் பார்த்து, அதிர்ச்சியடையவில்லை என்றும் ஆச்சரியப்பட்டதாகவும் இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து கூறுகிறார். ஆனால், “நிராகரிக்கப்படுவது கூட ஒரு வகையில் ஊக்கத்தைத் தருகிறது” என்கிறார்.
2023இல் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டை புரட்டிப் போட்ட அத்தபத்து மொத்தம் 470 ஓட்டங்களை பெற்றார். இது முழு அங்கத்துவ நாடுகளில் வீராங்கனைகள் வரிசையில் நான்காவது அதிக ஓட்டமாகும். இது 31.33 ஓட்ட சராசரியாகவும் 130.91 ஓட்ட வேகமாகவும் இருந்தது. பந்துவீச்சில் ஓவர் ஒன்றுக்கு 5.97 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்தார்.
கடந்த ஆண்டு அவர் தலைமையில் இலங்கை அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றதோடு வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. என்றாலும் அவர் மகளிர் பிரீமியர் லீக்கில் மாத்திரமன்றி அவுஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ் லீக்கிலும் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டார்.
“அவர்கள் எண்ணை தேர்வு செய்யாததால் நான் அதிர்ச்சி அடையவில்லை, ஆச்சரியப்பட்டேன்” என்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். “என்றாலும் இது எனது கட்டுப்பாட்டில் இல்லை. என்னால் கட்டுப்படுத்த முடியுமானது பற்றித்தான் நான் யோசிப்பேன். இது சில பயிற்சியாளர்கள் அல்லது சில (அணி) முகாமையாளர்கள் எடுத்த முடிவு. இதனை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், எனது துடுப்பாட்டம், பந்துவீச்சை என்னால் கட்டுப்படுத்த முடியும். என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன். இந்த முடிவை நல்ல மனதுடன் எடுத்து என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றார்.
பிக் பாஷ் லீக்கின் வெளிநாட்டு விராங்கனைகளுக்கான தேர்வில் அத்தபத்து ஒதுக்கப்பட்டார்.
பின்னர் மாற்று வீராங்கனையாக அழைக்கப்பட்ட அவர் தொடரில் மொத்தமாக 552 ஓட்டங்களை பெற்றார். இது அந்தத் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற பெத் மூனியை விடவும் ஐந்து ஓட்டங்கள் தான் குறைவு. ஓட்ட சராசரி 42.46 ஆக இருந்ததோடு ஓட்ட வேகம் 127.18 ஆக பதிவானது. தவிர ஒன்பது விக்கெட்்டுகளை வீழ்த்திய அவர் ஓவர் ஒன்றுக்கு சராசரியாக 6.83 ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார்.
இத்தனை திறமையை வெளிப்படுத்தியபோதும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அவரது கேள்வியை அதிகரிக்கவில்லை. அந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. கடைசியில் இங்கிலாந்து அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்காக லோரன் பெல் விலகியதை அடுத்தே அவரை யுபி வொர்ரியஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
“நிராகரிக்கப்படுவது என்பது கூட எனக்கு ஒரு வகையில் ஊக்கத்தைத் தருகிறது” என்கிறார் அத்தபத்து. “அது எனக்கு நல்லது, ஏனென்றால் அது சில நேரங்களில் எனக்கு பாடமாக இருக்கும். என்னால் முடியும் என்பதை காண்பிக்க முடியுமாக இருக்கும். இதனைச் செய்ய முடியாது என்று யாராவது கூறினால், அதனைச் செய்யும் முதல் ஆளாக இருக்க வேண்டும். அது தான் எனது தத்துவம். என்னால் என்ன முடியும் என்பதை நிரூபிக்க நான் விரும்பினேன்” என்றார்.
வொர்ரியஸ் அணியில் அத்தபத்து கடும் போட்டியை எதிர்கொள்வார் என்பது மாத்திரம் நிச்சயம். அணித் தலைவி அலிசா ஹீலி, டன்னி வியாட், டஹ்லியா மக்ராத், கிரேஸ் ஹரிஸ் மற்றும் சொபியா எக்சல்டன் ஆகிய வீராங்கனைகளுடன் பதினொருவர் அணியில் இடம்பெறுவதற்கு அவர் போட்டியிட வேண்டி இருக்கும். இவ்வாறான பிரச்சினை கடந்த பருவத்திலும் இருந்தது. அதனாலேயே தென்னாபிரிக்க வேகப்பந்து வீராங்கனை ஷப்னில் இஸ்மையில் பெரும்பாலும் பார்வையாளராகவே அமர வைக்கப்பட்டார்.
அத்தபத்து இலங்கை அணியின் ஆரம்ப வீராங்கனை, எனினும் வொர்ரியஸ் அணியில் அந்த இடத்தில் ஹீலி மற்றும் வியாட் இருக்கிறார்கள். எனவே அவர் தேவைக்கேற்ப மத்திய வரிசையில் ஆடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். கடைசியாக 2019 பெப்ரவரி மாதத்திலேயே அத்தபத்து டி20 சர்வதேச போட்டி ஒன்றில் இலங்கை அணியின் ஆரம்ப வீராங்கனையாகவன்று துடுப்பெடுத்தாடி இருந்தார்.
“அலிசா ஹீலி ஆரம்ப வீராங்கனை என்பது எனக்குத் தெரியும். எனக்கு விருப்பமான டன்னி வியாட்டும் ஆரம்ப வீராங்கனை தான். டஹ்லியா மக்ராத், கிரேஸ் ஹரிஸும் கூட பிரிஸ்பான் ஹீட் அணிக்கு (பிக் பாஷ்) ஆரம்ப வீராங்கனைகளாக செயற்படுகின்றனர். எம்மை மாற்றங்களுக்காக சரி செய்துகொள்ள வேண்டும் என்பதோடு அது அணிக்கு முக்கியமானதாகவும் உள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் அணிக்கு தேவை என்றால், 1–6 வரிசையில் துடுப்பெடுத்தாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். நான் அணியின் வீரராகவே இருப்பேன்” என்றார் அத்தபத்து.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 17 ஆம் திகதி வரை நடைபெறப்போகிறது. அத்தபத்து தனது துடுப்பினால் பதில் அளிக்க வேண்டிய தருணமாக அது இருக்கும்.