பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு வரலாற்று நிகழ்வு இன்று 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.45 மணிக்கு கலாபீட மாநாட்டு மண்டபத்தில் பேருவளை வலய ராபிதாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். பௌஸர் (நளீமி) தலைமையில் நடைபெறும்.
நாற்பெரும் விழாவையிட்டு சீனன்கோட்டை பிரதேசம் வாழ்த்து பெனர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளன.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீட நிர்வாக சபையும் ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் நளீமிய்யா கலாபீட ஆளுநர் சபை உறுப்பினருமான மர்ஜான் பளீல் கலந்து சிறப்பிப்பார்.
விசேட அதிதியாக நளீமிய்யா பரிபாலன சபைத் தலைவர் யாகூத் நளீம், கௌரவ அதிதியாக கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ.அகார் மொஹமட் (நளீமி) ஆகியோரும் கலந்துகொள்வர்
இன்றைய நிகழ்வில் நளீமிய்யாவின் ஐம்பதாண்டு நிறைவையொட்டிய நினைவு முத்திரை வெளியீடு, நளீமிய்யா உருவாகத்திற்கு மர்ஹும் நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம், நளீமிய்யாவின் உருவாக்க வரலாற்று நூல் வெளியீடு மற்றும் நளீமிய்யா கலாபீடத்திற்கான ‘SOLAR POWER PROJECT’ திட்டமும் அதிதிகளினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.
உலமாக்கள், புத்திஜீவிகள், கலாபீட விரிவுரையாளர்கள், சீனன்கோட்டை பள்ளிச்சங்க நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், ராபிதாவின் பழைய மாணவர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். விழா சிறப்பாக நடைபெற சீனன்கோட்டை ஊர் மக்கள், பிரதேச இளைஞர்கள் உட்பட சமூக சேவை அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் பல வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.
அஜ்வாத் பாஸி