உலகில் உற்பத்தி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களின் அதிநவீன தொழில்நுட்பம், மின்சார வாகன பெட்டரிகள் மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம், மின்சாரம், மாற்று சக்திகள், நகர்ப்புற இயக்கம் உள்ளிட்ட எதிர்கால வாகனத் துறையில் ஏற்படும் புரட்சிகரமான மாற்றங்களைப் பற்றிய சிறந்த புரிதலையும் அறிவையும் பெறுவதற்கான சிறந்த தளமாக இந்தியாவின் முதல் உலகளாவிய இயக்கம் கண்காட்சி அண்மையில் புதுடில்லியில் இடம்பெற்றது. இந்த பிரமாண்டமான கண்காட்சி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஆரம்பமானது.
மோட்டார் சைக்கிள்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களுக்கும் உலகின் நான்காவது பெரிய சந்தையாக தர வரிசையில் உள்ள இந்தியாவில் இவ்வாறான பாரிய கண்காட்சியை நடத்துவதால் கார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இது அடுத்த தலைமுறையினர் வாகனத் துறையைப் புரிந்துகொள்ள உதவியளித்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்திய உற்பத்தியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி, தனது முதல் ஆட்சிக் காலத்தில் பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்களில் கவனம் செலுத்தியதாகவும், தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
இந்தியா இப்போது வேகமாக முன்னேறி வருகிறது. இந்த சகாப்தம் மின்சார வாகனத் துறையின் பொற்காலம் என்று பிரதமர் தனது உரையைத் தொடங்கினார். தற்போதைய மூன்றாவது ஆட்சிக் காலத்தினுள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்றுள்ளன என்றார்.
நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரிப்பானது இந்தியாவின் மின்சார வாகனத் துறைக்கு ஊக்கமளிக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் வளர்ந்து வரும் வருமானம் ஆகியவை மின்சார வாகனத் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன எனக் கூறிய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 12 கோடியிலிருந்து 2014க்குப் பிறகு 21 கோடியாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் மின்சார கார்களின் விற்பனை ஆண்டுக்கு இரண்டாயிரமாக இருந்தது என்றும், இன்று அது ஆண்டுக்கு 12 இலட்சமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு இணையாக இந்தியா கடந்த 10 ஆண்டுகளினுள் பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை 60% அதிகரித்துள்ளது என்றும், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 70% அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். தரவு அறிக்கைகளின்படி, கடந்த ஜனவரியில் இந்தியாவில் கார் விற்பனை முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்சார வாகனத் துறை நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் பயனடைந்து கொள்ள வேண்டும் என்றார்.
இன்று இந்தியா எதிர்காலத் தேவைகளை மையமாக வைத்து புதிய கொள்கைகளை உருவாக்கி வருகிறது. 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் மூலதனச் செலவு 2 கோடியை விடவும் குறைந்தது. இன்று அது 11 கோடியைத் தாண்டியுள்ளது. இது இந்தியாவில் மின்சார வாகனத் துறையில் துறைக்கு பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 75 புதிய விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 4 லட்சம் கிலோமீட்டர் வீதிகள் அமைக்கப்பட்டன. தொண்ணூறாயிரம் கிலோ மீற்றர் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருபத்தைந்தாயிரம் மெட்ரோ மற்றும் புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்தது என்றும் பிரதமர் கூறினார்.
இந்திய அரசாங்கத்தின் வேகமான திட்டமும் அதன் அளவும் நாட்டில் இயக்கம் பற்றிய வரையறையையே மாற்றியுள்ளது. ஃபாஸ்ட் டெக் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 40,000 கோடி இந்திய ரூபாய் வருமானத்தைப் பெற்றுத் தருவதாகவும் பிரதமர் கூறினார். இந்தியா தற்போது உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறுவதற்கான நுழைவாசலில் இருப்பதாகவும், அதில் வாகனங்கள் மற்றும் வாகனத் துறை முக்கிய பங்காற்றுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இன்று இந்தியா பயணிகள் போக்குவரத்துக்காக உலகில் மூன்றாவது பெரிய சந்தையாகும். உலகளவில் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்யும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் உள்ளது. தொழிற்சாலைகளுக்காக அரசாங்கம் 25,000 கோடி ரூபாய்க்கும் அதிக உற்பத்தி தொடர்பான ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய எலெக்ட்ரிக் மொபிலிட்டி நடவடிக்கை மின்சார வாகன உற்பத்தியை நோக்கி முன்னேறி வருகிறது. மின்சார வாகனங்களுக்கான தேவையை உருவாக்க அரசாங்கம் பத்தாயிரம் மில்லியன் ரூபாவை முன்மொழிந்துள்ளது. மின்சார வாகனங்களின் உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டம் புதுடில்லி மற்றும் பல நகரங்களில் மின்சார பேருந்துகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என பிரதமர் மேலும் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இத்துறை பெரும் வளர்ச்சியைக் காண்பிக்கும் என்றும், பழைய வாகனங்களை நெடுஞ்சாலையில் இருந்து அகற்றி, அதற்குப் பதிலாக புதிய வாகனங்களை உள்வாங்கும் போது அவ்வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசின் கொள்கையையும் அவர் நினைவுபடுத்தினார்.