நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நாட்டை முன்னேற்றப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்லும் பயணத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க அரசியல் கடந்து ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை அறைகூவல் விடுத்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை கடந்த புதன்கிழமை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடன உரையை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்தார்.
2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட நெருக்கச் சூழ்நிலையிலிருந்து முழுமையாக மீள்வதற்கான பிரயத்தனங்களை எடுத்திருக்கும் ஜனாதிபதி, இந்தப் பயணத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதால் மீண்டும் மீண்டும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றார்.
நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழல் என்பது ஓரிரு நாட்களில் சரிசெய்யக் கூடிய விடயம் இல்லை என்ற கள யதார்த்தத்தை நன்கு உணர்ந்துள்ள ஜனாதிபதி, அரசியல் பேதங்களை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். ஜனாதிபதிப் பதவியை ஏற்பதற்கு முன்னர் இருந்து பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து இதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லையென்றே கூற வேண்டும்.
அரசியல் ரீதியாகத் தமக்குக் கிடைக்கக் கூடிய அந்தஸ்துகள் பற்றி மாத்திரம் கனவு காணும் சிலர், நாட்டைவிட அப்பதவிகளையே அதிகம் நேசிக்கின்றனர். இந்தப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்டுக்கும் மக்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுகின்றனர். நடைமுறையை உணராமல் கனவுப் பாதையில் செல்வது எவருக்கும் பயனளிக்காது என்ற விடயத்தையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
தனது உரையில் மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ‘நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக ஒற்றுமையாகக் கலந்துரையாடுவோம். நாங்கள் செயல்படுத்தும் முறையை விட சிறந்த மாற்று முறைகள் இருந்தால், அவற்றைக் கூறுங்கள். அவற்றை ஆழமாக ஆராய்வோம். அது குறித்தும் கலந்துரையாடுவோம். அவற்றில் நாட்டுக்குச் சிறந்ததென கருதப்படும் யோசனையைச் செயற்படுத்துவோம். அவ்வாறான பேச்சுக்களில் கலந்துகொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம். அவ்வாறான பேச்சுக்களுக்கு தயார் எனில், அந்தக் கலந்துரையாடல்களுக்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதானிகளையும் அழைப்பிக்க முடியும்’ என்றார்.
பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாகத் தன்னை விமர்சித்தவர்களே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருப்பதாகவும், நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலானவர்கள் பழைய பகைமையை மறந்துவிட்டு ஒன்றுபட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் தன்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள் என்பதுடன், தன்னால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பலர் அதில் அங்கம் வகிப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொதுப் பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின், ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை ஏன் செய்ய முடியாதுள்ளது என்றும் கேள்வியெழுப்பினார்.
‘மக்கள் விடுதலை முன்னணியினருடன் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகவும், ஊழல் ஒழிப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த சூழ்நிலையில், நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் ஏன் அவர்களால் இணைய முடியாதுள்ளது? இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன.
எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளால் பொதுப்பயணத்தில் ஏன் இணைந்து கொள்ள முடியாது? தேர்தலில் வெவ்வேறாக போட்டியிட்டாலும், நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்து கொள்வோம்’ என ஜனாதிபதி தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது ஸ்தம்பிதம் அடைந்தபோது, நாட்டை மீட்பதற்கான பொறுப்பைத் தைரியமாக ஏற்றுக் கொண்டவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. பல தசாப்த அரசியல் அனுபவம் கொண்ட அவர், துரிதமாகச் செயற்பட்டு நாட்டை இந்த நிலைமைக்கு முன்னேற்றியுள்ளார்.
நாட்டைப் பொறுப்பேற்றதிலிருந்து தனது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தி வந்துள்ளார். அது மாத்திரமன்றி, பாராளுமன்ற ஜனநாயகம் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டியது என்பதிலும் உறுதியுடன் இருப்பவர். இதன் காரணமாகவே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகளையும் அரசியல் வேறுபாடுகள் இன்றி இணைந்து கொள்வதற்கான அழைப்பை அவர் தொடர்ச்சியாக விடுத்து வருகின்றார்.
இருந்தபோதும், சவாலுக்கு உட்பட்ட நாட்டை மீட்டெடுப்பதில் எதிர்க்கட்சிகள் தமது வகிபாகத்தை சரியாக முன்னெடுக்கின்றனவா என்ற கேள்வி பலமாகவே உள்ளது. நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இருந்த அமைச்சரவை இராஜினாமாச் செய்தபோது அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கள் எதிர்க்கட்சிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கள் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சவாலை ஏற்று நாட்டை முன்கொண்டு செல்வதற்கான சக்தி அவர்களிடம் இல்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
எனினும், நிலைமை சவாலானது என்பதை நன்கு உணர்ந்தும் இதனைப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. தனது அரசியல் ஞானம் மற்றும் அனுபவம் என்பவற்றைப் பயன்படுத்தி நிலைமையை ஓரளவுக்குச் சீர்செய்து நாட்டை மீட்சிப் பாதையில் பயணிக்கச் செய்தார்.
தனது இந்தப் பயணத்தின் அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை அமைந்திருந்தது. இருந்தபோதும், ஜனாதிபதியின் இந்த உரையைக் கூடச் செவிமடுப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சி தயாராக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்து கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி முன்வைத்தபோது பிரதான எதிர்க்கட்சி பாராளுமன்ற சபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஏனையவர்களும் வெளிநடப்புச் செய்திருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் அதிருப்திகொண்ட அரசியல் தலைவர்களும் சபையிலிருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்திருந்தனர்.
பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்தால் ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் கொள்கைப் பிரகடனம் என்ன என்பதை செவிமடுத்து அது பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்திருக்க வேண்டும். இதனை விடுத்து முற்றுமுழுதாக வெளிநடப்புச் செய்வது சிறந்த அரசியல் நாகரீகமாகப் பார்க்கப்படவில்லை.
அது மாத்திரமன்றி, பிரதான எதிர்க்கட்சியானது அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றபோதும், தமது தரப்பில் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்படக் கூடிய மாற்று யோசனைகளை இதுவரை முன்வைத்ததில்லை என்பதையே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதால் நிழல் அரசாங்கமாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிக்குக் காணப்படுகின்றபோதும், ‘நாம் அதிகாரத்துக்கு வந்தால் இதனைச் செய்ய மாட்டோம், அதனைச் செய்ய மாட்டோம்’ எனக் கூறிக்கொண்டு இருப்பதைத் தவிர மாற்று யோசனைகள் எதுவும் அவர்களால் முன்வைக்கப்படுவதில்லை.
தேர்தல் ஒன்று வரும்போது எதிரும்புதிருமாக நின்று போட்டியிட்டாலும், இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்பது அவசியமானது. இதற்கான பொறுப்பை எதிர்க்கட்சி தட்டிக்கழிக்க முடியாது. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தலில் தமது வாக்கு வங்கிகளை மாத்திரம் கணக்கிட்டு அனைத்துக் காய்நகர்த்தல்களையும் மேற்கொள்வதில் எவ்வித பயனும் இல்லை. நாடொன்று நிலையாக இருக்கும் பட்சத்திலேயே அரசியல் செய்ய முடியும். எனவே, நாடு ஸ்திரமான நிலையில் இருப்பதற்கு முதலில் அனைவரும் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டது போன்று, எதிர்க்கட்சியில் உள்ளவர்களும், ஆளும் கட்சியில் உள்ளவர்களும் அவருடைய நீண்டகால அரசியல் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவருடன் இணைந்து செயற்பட்டவர்களே. எனவே, நாட்டின் நன்மை மற்றும் மக்களின் முன்னேற்றம் என்ற பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் அவருடன் இணைந்து செயற்படுவதில் அவர்களுக்கு எவ்வித சிக்கலும் இருக்கப் போவதில்லை. தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்டு சுமுகமான நிலைமை ஏற்பட்டதன் பின்னர் அனைவரும் தேர்தலுக்கு முகங்கொடுத்து அதில் ஒருவருடன் ஒருவர் போட்டியிட முடியும்.
நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டபோது எதிர்க்கட்சிகளினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்ட சிறந்த உதாரணங்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சிறிமாவோ பாண்டாரநாயக்க பிரதமராக இருந்தபோது ஜே.வி.பி கலவரத்தை ஒடுக்குவதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர். ஜயவர்தன தனது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தார்.
அதேபோல, ரணசிங்க பிரமேதாச ஜனாதிபதியாக இருந்தபோது, எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது.
இதுபோன்று எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாகச் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படும் நிலையில், ஒட்டுமொத்த நாடும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எதிர்க்கட்சியினர் அரசியல் வேறுபாடுகளை மறந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமாகப் பார்க்கப்படுகிறது.