முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டமை போன்ற நிகழ்வுகள் கடந்த வாரத்தில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும், அரசியல் ரீதியான பரபரப்பான செய்திகளாகவும் அமைந்திருந்தன.
தரக்குறைவான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் குறிப்பாக மனித இம்யூனோகுளோபுலின் என்ற மருந்து தொடர்பில் அமைச்சர் ரம்புக்வெல்ல ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் சில காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. இது விடயத்தில் எவ்வித தவறும் இடம்பெறவில்லையென அமைச்சர் கடுமையாக மறுத்திருந்தார்.
சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டு இப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இது விடயத்தில் அரசாங்கம் பாராமுகம் காட்டுவதாகவும், மோசடிகளுக்கு அரசாங்கம் துணை நிற்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டு ஒரு மாதகாலத்தின் பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பில் கெஹலிய ரம்புக்வெல்லவிடமிருந்து சுகாதார அமைச்சுப் பதவி நீக்கப்பட்டு சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டாலும் தரக்குறைவான மருந்துப் பொருட்களின் இறக்குமதி குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த கெஹலிய ரம்புக்வெல்ல கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தற்பொழுது தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ள போதும் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து அரசாங்கம் நீக்கவில்லையென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சி தயாரானது. இருந்தபோதும் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். அதேநேரம், அவரின் பிணைக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாராவது தவறிழைத்திருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் பின்னிற்காது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகக் கூறப்படுகிறது.
அமைச்சரின் கைது விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விடயமாக இருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு அதிகரித்திருப்பது புலப்படத் தொடங்கியுள்ளது. எதிர்காலத் தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியைத் தேடிப் பலரும் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறான புதிய இணைவுகளில் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை அக்கட்சியின் தலைமைத்துவத்துக்குள் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இருக்கும் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருந்த தயா ரத்னாயக்க தனக்கு எதிராக ராஜபக்ஷ அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்தவர் என்ற குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்திருந்தார்.
அவ்வாறான நபர்களைக் கட்சிக்குள் இணைப்பது பற்றி தவிசாளரான தனக்குக் கூடத் தெரியாது என்றும், இது பற்றி கட்சித் தலைமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சரத் பொன்சேகா ஊடகங்களை அழைத்துக் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கருத்துகளை முன்வைத்து வந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மெளனம் காத்து வந்தார். எனினும், மௌனத்தைக் கலைத்து அவர் தெரிவித்திருக்கும் கருத்து கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.
கட்சியின் தலைவர் என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நபர் யார் என்பதை தீர்மானிப்பது தனது தனிச்சிறப்பு என்றும் சஜித் பிரேமதாச கூறியிருந்தார். இந்த முடிவுகளை விமர்சிப்பவர்களால் தம்மைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். சஜித் பிரேமதாசாவும் பொன்சேகாவும் இப்போது தீர்க்கமான மோதலை நோக்கிச் செல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இருந்தபோதும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு விலகப் போவதில்லை என்று கூறிய பொன்சேகாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. சஜித் பிரேமதாச தனது தலைமைத்துவத்தையும் கட்சியின் மீதான கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட முற்படும் அதேவேளையில், ஒரு முக்கியமான வருடமாக அமையவுள்ள இவ்வாறான உள்முரண்பாடுகள் கட்சிக்கு உதவியாக இருக்குமா என்பது சந்தேகமேயாகும். பொன்சேகாவை கட்சியில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டாலோ அல்லது வெளியேற்றப்பட்டாலோ, இதேபோன்ற சூழ்நிலையில் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சித் தலைவராக இவர் கருதப்படுவார். இதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் தவிசாளராக இருந்த போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அப்பதவியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறான அரசியல் பரபரப்புக்களுக்கு மத்தியில் ஊடகங்கள் உட்பட அனைத்துத் தரப்பினதும் கவனத்தை ஈர்த்த மற்றுமொரு நிகழ்வாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தூதுக் குழுவினர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட விவகாரம் காணப்படுகிறது. கலந்துரையாடலுக்கு வருமாறு இந்திய அரசாங்கம் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயமாக அமைந்தது.
ஜே.வி.பியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர். அனில் ஜயந்த ஆகியோர் புதுடில்லி, அஹமதாபாத், குஜ்ராத் உள்ளிட்ட நகரங்களுக்கு விஜயம் செய்தது மாத்திரமன்றி உயர்மட்ட சந்திப்புக்களையும் நடத்தியிருந்தனர்.
முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இவர்கள் சந்தித்திருந்தனர். இலங்கையின் அரசியலில் தேசிய மக்கள் சக்தியை ஒரு சக்தியாக இந்தியா அங்கீகரித்துள்ளதா என்றதொரு கேள்வியும் இந்த விஜயத்தின் ஊடாக முன்வைக்கப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் கடந்த காலத்தில் இந்தியா தொடர்பான பல விடயங்களுக்கு எதிராக ஜே.வி.பி போர்க்கொடி தூக்கியிருந்தது. இவ்வாறான பின்னணியில் அவர்களை உத்தியோகபூர்வமாக அழைத்துக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை அரசியலில் பரபரப்பானதொரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தவருடம் தேர்தல் ஆண்டாக அமைவதால் இதுபோன்று பல்வேறு பரபரப்பான அரசியல் நிகழ்வுகளை எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்க முடியும்.
பி.ஹர்ஷன்