மத்திய கிழக்கு நாடான யெமனை அண்மித்த சர்வதேச கடற்பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாகப் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அரபுக் கடல், யெமனின் ஏடன் வளைகுடா, பாப் அல் மண்டெப் நீரிணை மற்றும் செங்கடல் உள்ளிட்ட கடற்பரப்பும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையும் அடங்கலாக மத்திய கிழக்கில் இப்பதற்றநிலை உருவாகியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்துமாறும், காஸா மக்களுக்கு தங்குதடையின்றி மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க இடமளிக்குமாறும் கோரி யெமனின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்துவரும் தாக்குதல்களே இப்பதற்றநிலைக்குக் காரணமாகும்.
அதாவது ஏடன் வளைகுடா, பாப் அல் மண்டெப் நீரிணை மற்றும் செங்கடல் ஊடான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையின் ஊடாக இஸ்ரேலுக்கு செல்லும் வணிகக் கப்பல்கள் மீதும் இஸ்ரேலியருக்குச் சொந்தமான கப்பல்கள் மீதும் ஹுதிக்கள் கடந்தாண்டு நவம்பர் நடுப்பகுதி முதல் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவின் எண்ணெய்க் கப்பலொன்று ஏடன் வளைகுடாவில் கடந்த வாரம் ஹுதிக்களின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. அதனால் கப்பலில் ஏற்பட்ட தீ அமெரிக்க, இந்திய கப்பல்களின் ஒத்துழைப்புடன் பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் அணைக்கப்பட்டது. அந்தத் தீ அணைக்கப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள் மற்றொரு அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடத்த ஹுதிகளின் படகுகள் முயற்சி செய்ததாக பிரித்தானிய கடல்சார் அமைப்பு அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க யுத்த கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஹுதிக்கள் தெரிவித்திருந்தனர்.
ஹுதிக்கள் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து கடும் பதில் தாக்குதல்களை அவர்களது நிலைகள் மீது மேற்கொண்டு வருகின்றன. இதன் நிமித்தம் அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்த விமானங்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்ற அதேநேரம் ஹுதிக்கள் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ரிமோட்டில் இயக்கப்படும் ஆயுதங்கள் என்பவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
அதனால் யெமன் மற்றும் செங்கடல் வழியான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் பல சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் செங்கடல் வழியான வணிகக் கப்பல் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொண்டுள்ளதோடு தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றி 6,000 கிலோ மீற்றர் மேலதிகமாகப் பயணிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளன.
அதனால் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை நிராகரித்த ஹுதிக்களுடன் ஒமான் ஊடாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
‘காஸா மீதான போர் நிறுத்தப்படும் வரை தாக்குதல் தொடரும்’ என ஹுதிக்கள் குறிப்பிட்டதால் அம்முயற்சி தோல்வியடைந்தது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்தாண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் 7 நாட்கள் நீடித்த யுத்த நிறுத்தத்தின் போது ஹுதிக்களும் தாக்குதல்களை நிறுத்தியிருந்தனர். ஆனால் இஸ்ரேல் டிசம்பர் முதலாம் திகதியுடன் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்ததும் ஹுதிக்களும் தாக்குதல்களைத் தொடங்கினர்.
இந்நிலையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென அமெரிக்கா பல நாடுகளை உள்ளடக்கிய கூட்டணியொன்றை அமைத்து அந்நாடுகளது யுத்தக்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பவை யெமன் மற்றும் செங்கடல் கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ஈரானின் 3 யுத்தக்கப்பல்களும் செங்கடல், ஏடன் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளன.
அப்படியிருந்தும் ஹுதிக்கள் தாக்குதல்களைத் தொடர்வதால் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து யெமனிலுள்ள ஹுதிக்களின் நிலைகள் மீது முதன் முறையாகக் கடும் தாக்குதல்களை முன்னெடுத்தன. அவர்களது ஆயுதக் களஞ்சியசாலை, ஏவுகணை ஏவு தளங்கள், ரடார் நிலையங்கள் என 12 இடங்கள் மீது 73 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்தது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாபதிபதி ஜோ பைடன், ‘சர்வதேச கடல் போக்குவரத்து பாதையில் ஹுதிக்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களால் சுமார் 50 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அவர்களது தாக்குதல் பலத்தைப் பலவீனப்படுத்தி சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது’ என்றார்.
காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரும் ஹுதிக்கள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து தாக்குதல் நடத்தியமை உலகை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. யுத்தத்தை நிறுத்தக் கோரும் தரப்பு மீது அமெரிக்காவும் நேச நாடுகளும் தாக்குதல் நடத்துவதானது காஸா மீதான யுத்தத்திற்கு இந்நாடுகள் ஆதரவளிக்கின்றனவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
உலகின் பல நாடுகளதும் கண்டனத்துக்கு உள்ளான இத்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யெமனிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இச்சமயம் ஹுதிக்கள், ‘இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். நாங்கள் காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறே கோருகிறோம். பிரித்தானியாவையோ அமெரிக்காவையோ நாங்கள் தாக்கவில்லை. அவர்களது நிலங்களுக்குள் சென்றும் நாங்கள் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை’ என்றுள்ளனர்.
இதேவேளை, 2021 பெப்ரவரியில் ஹுதிக்களை பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கிய அமெரிக்கா, மீண்டும் உலகளாவிய பயங்கரவாத இயக்கமாக கடந்த 17 ஆம் திகதி அறிவித்ததோடு, ஹுதிக்கள் அரசின் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் அல் அதீபி, ஹுதிக்களின் கடல்சார் படையணியின் தளபதி பட்ல் அப்த் அல் நபி, கரையோர காவல் படையின் தளபதி முஹம்மத் அலி அல் காதிரி, ஹுதிகளின் கொள்வனவு பணிப்பாளர் முஹம்மத் அஹமட் அல் தலிபி ஆகிய நால்வருக்கும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடந்த 25 ஆம் திகதி முதல் தடைகளை விதித்துள்ளன.
இந்தச் சூழலில் யெமனிலுள்ள ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களில் பணிபுரியும் அமெரிக்க, பிரித்தானிய பிரஜைகளை ஒரு மாததிற்குள் வெளியேறுமாறு ஹுதிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை செங்கடல் ஊடாக கடலுக்கடியில் இடப்பட்டுள்ள கேபிள்கள் மீது ஹுதிக்கள் தாக்குதல் நடத்தக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள வளைகுடா சர்வதேச மன்றம், இது உலகளாவிய தகவல் தொடர்பு மற்றும் பொருளாதாரத்தை கணிசமாகப் பாதிக்கும் எனவும் கடந்த வியாழனன்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
அவ்வாறான தாக்குதல்கள் கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் மீது நடத்தப்படுமாயின் உலகளாவிய தகவல் தொடர்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன.
அதேநேரம் ஹுதிக்களின் தாக்குதல்கள் பிராந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலையும் தோற்றுவித்துள்ளன. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 12 வீதமான மசகு எண்ணெய் இப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய எரிவாயு ஏற்றுமதி நாடான கட்டார் ஜனவரி 14 முதல் செங்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு திரவ எரிவாயுவை அனுப்பி வைப்பதை நிறுத்தியுள்ளது.
அத்தோடு இப்பாதை ஊடாகப் பயணிக்கும் சரக்குக் கப்பல்களுக்கான காப்புறுதிக் கட்டணங்களை கப்பல் காப்புறுதி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. குறிப்பாக கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் செலவுகளை அதிகரித்துள்ளன. நவம்பரில் 1,500 டொலராகக் காணப்பட்ட கொள்கலன் ஒன்றின் விலை டிசம்பரில் 4,000 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இப்பாதை ஊடாகக் கப்பல்களில் கோதுமை கொண்டு செல்லப்படுவது 40 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எண்ணெய்க் கப்பல்களும் இப்பாதையை தவிர்க்கும் முடிவை எடுத்துள்ளன.
செங்கடலில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவதானது, உலகப் பொருளாதாரத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜான் லெவெல்லின், ‘உலக வர்த்தகத்தில் கடுமையான இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தோற்றம் பெற்றுள்ளன’ என்றுள்ளார்.
இப்பதற்ற நிலையின் விளைவாக உலகின் பல நாடுகளும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. அதனால் அமெரிக்கா, ஈரானுடன் பேசி ஹுதிக்களின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டது. அதற்கேற்ப ஈரானுடன் கலந்துரையாடிய சீனா, காஸா மீதான யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது ஹுதிக்கள் தாக்குதல்களை நிறுத்த வழிவகுக்கும்’ என்றுள்ளது.
மர்லின் மரிக்கார்