இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் காணப்பட்ட இழுபறி நிலைமையானது, தலைவர் தெரிவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு முடிவுக்கு வந்துள்ள போதும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஏனைய பதவிகளுக்கான தெரிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக வாக்கெடுப்பின் மூலம் தலைவர் தெரிவு செய்யப்பட்டிருந்ததும் எம். ஏ. சுமந்திரன் எம்.பி, எஸ்.சிறிதரன் எம்.பி மற்றும் எஸ். யோகேஸ்வரன் ஆகிய மூவரில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சிறிதரன் எம்.பி தலைவரானதும் நாம் அனைவரும் அறிந்த விடயம்.
தலைமைத்துவத்துக்கான போட்டியில் சுமந்திரன் மற்றும் சிறிதரனுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. தலைமைத்துவத்துக்கான போட்டியின் காரணமாக தமிழரசுக் கட்சிக்குள் இருதரப்பு ஆதரவுக் குழுக்கள் உருவாகியிருந்தன. அது மாத்திரமன்றி, இந்தக் குழுக்கள் ஒருவர் மீது ஒருவர் சேறுபூசும் வகையிலான சமூக ஊடகப் பிரசாரங்களையும் முன்னெடுத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்டதும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுமான கட்சி என்பதால் இதன் தலைமைத்துவத்தை யார் பெற்றுக் கொள்கின்றார் என்பதைத் தமிழ் தரப்பு மாத்திரமன்றி, தென்னிலங்கை அரசியல் களமும் உன்னிப்பாக அவதானித்து வந்தது.
இந்த விடயம் சர்வதேச மட்டத்தில் அதாவது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. இந்தப் போட்டி நிலைமையானது புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியிலும் பிரிவினைகளை உருவாக்கியிருந்தது.
பிரிவினைகளை உருவாக்கியிருந்தது என்பதை விட அவர்களுக்கிடையில் ஏற்கனவே காணப்பட்ட மாற்றுக்கருத்துக்கள் இந்தத் தலைமைத்துவப் போட்டியின் காரணமாக புலப்பட்டன என்பதே பொருத்தமாகவிருக்கும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஆரம்பம் தொட்டே இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தரப்பு அரசியல் விடயத்தில் தாக்கம் செலுத்தும் பிரிவினராக இருந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளுக்கான நிதிப்பலமாக அவர்களே இருக்கின்றனர் என்று பரவலாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இதனால் புலம்பெயர் தமிழர் சமூகத்தின் மேலாதிக்கம் வடக்கு, கிழக்கு அரசியலில் தவிர்க்க முடியாததாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம்தான் போட்டி நிறைந்ததாக இருந்ததென்றால், பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட ஏனைய பதவிகளும் இழுபறிநிலைக்கே தள்ளப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவானது போட்டியில் முடிந்து விட்டதால் ஏனைய பதவிகளையாவது போட்டியின்றி இணக்கப்பாட்டுடன் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தலைமைத்துவம் எடுத்திருந்தது.
இருந்தபோதும் இந்த முயற்சி கைகூடவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் வடக்கிற்கு வழங்கப்பட்டால் பொதுச்செயலாளர் பதவி கிழக்குக்கு வழங்கப்படுவது என்பது அவர்களால் பின்பற்றப்பட்டுவரும் ஓர் சம்பிரதாயமாக இருந்தது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், குறித்த பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பலர் இருந்தமை மாநாட்டில் புலப்பட்டது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லையென்பதும், பலர் கட்சியின் ஒற்றுமையைவிட பதவிநிலைகளைப் பெற்றுக்கொண்டு தம்மை பலப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதையும் இந்த நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்தன.
பொதுச் செயலாளர் பதவியைப் பெற்றுக் கொள்வதில் சுமந்திரன் எம்.பி, சாணக்கியன் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஞா. சிறிநேசன் உள்ளிட்ட பலரும் ஆர்வம் கொண்டிருந்ததாக மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் தெரிவித்திருந்தனர். இது விடயத்தில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமையால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களின் ஆதரவு எவருக்கு அதிகமாக உள்ளதோ அந்நபருக்கு அப்பதவியை வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் திருகோணமலை ையச் சேர்ந்த குகதாசனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இதுவிடயத்தில் முரண்பாடுகள் இருப்பதால் பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பதவிகளுக்கு இடம்பெற்ற தெரிவுகளை இடைநிறுத்துவதுடன், மாநாட்டை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைப்பதாவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்தார்.
தலைவர் பதவியில் ஏற்பட்ட குழப்பம் ஒரளவுக்குத் தீர்க்கப்பட்டாலும், ஏனைய பதவிகளுக்கான குழப்பம் நீடித்திருப்பது கட்சியின் எதிர்கால ஒற்றுமை குறித்த கேள்வி பலமாக எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் சந்தித்த சமூகமான தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான கட்சியொன்று ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தருணத்தில் கட்சியின் பதவிகளுக்காக உறுப்பினர்கள் முரண்பட்டுக்கொள்வது அரசியல் ரீதியில் தமிழர்களைப் பலவீனமாக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும் என்பதுதான் தமிழ் மக்களின் கவலை.
அது மாத்திரமன்றி, இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது உரிமைப் போராட்டங்கள் பலவற்றுடன் தொடர்புபட்ட கட்சியாக இருந்தாலும் ஆயுதக் போராட்டங்களுடன் நேரடியாகத் தொடர்புபடாத கட்சியென்ற பெயரைக் கொண்டிருப்பதால் தென்னிலங்கை அரசியல் தரப்பிலும் அக்கட்சி தொடர்பான பார்வை வித்தியாசமாக இருக்கின்றது.
குறிப்பாக கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாக இருந்து பின்னர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி தற்பொழுது அரசியல் கட்சிகளாக செயற்பட்டு வருபவற்றுடன் ஒப்பிடுகையில், தமிழரசுக் கட்சி ஆரம்பம் முதலே அஹிம்சை வழியைப் பின்பற்றும் ஒரு கட்சியாக இருக்கின்றது. இவ்வாறான பின்னணியில் அதன் பதவிகளுக்காக உறுப்பினர்கள் முரண்பட்டுக் கொள்வது தமிழ்க் கட்சிகள் மீதான பரிகாசப் பார்வையையே தென்னிலங்கையில் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணியாகச் செயற்படச் செய்ய வேண்டியதொரு பாரிய பொறுப்பு தமிழரசுக் கட்சிக்கு இருக்கும் நிலையில் இதுபோன்ற உள்ளக முரண்பாடுகள் அந்தப் பொறுப்பை பலவீனமாக்கலாம்.
புலிகள் இயக்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் செயற்பட்டுவரும் நிலையில், இதனை மேலும் வலுப்படுத்தி ஏனைய அரசியல் கட்சிகளையும் அதில் ஒன்றிணைத்து பலம்பெருந்திய கூட்டணியாகச் செயற்படுவதற்குப் பதிலாக தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டிருப்பது பற்றியும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என்கிறார்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்ற ரீதியில் தனித்தனியாகப் பிரிந்துநின்று செயற்படுவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் சார்பில் பேரம்பேசும் சக்தியை ஏற்படுத்தி விடாது என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம்.
அதேநேரம், தமிழ்க் கட்சிகள் தமக்கிடையில் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்திலேயே நடைபெறக் கூடிய தேசிய ரீதியான தேர்தல்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பேரம்பேசும் சக்தியாக அவர்கள் உருவாக முடியும். எனவே, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பவிகளுக்காகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொள்ளாது ஒட்டுமொத்த சமூகம் சார்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக இருக்கின்றது.
பி.ஹர்ஷன்