அரசியல் என்றாலே பொதுவாக சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்ததொன்றாகவே இருக்கும். நீண்ட காலமாக அதனை ஆராய்ச்சி செய்யும் ஒருவரால் மாத்திரமே அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் அதன் போக்குக் குறித்துப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் அரசியல் போக்குகள் மற்றும் அதன் முன்னேற்றங்களை எடுத்துக்கொண்டால் எந்தவொரு அரசியல் விஞ்ஞானிகளாலும் அரசியல் நிலைமைகளை அனுமானிக்க முடியாதபடியே உள்ளது.
2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்திருப்பதால் கடந்த ஒரு மாத காலமாக அரசியல் களத்தில் பரபரப்புக் காட்சிகள் இடம்பெற்று வருவதைக் காண முடிகின்றது. புதுமைக் காட்சிகள் மாத்திரமன்றி குழப்பங்களும் அதிகரித்திருக்கின்றன. எதிர்வரும் மாதங்களில் இந்த நிலைமைகள் மேலும் பரபரப்படையக் கூடுமென்றே ஊகிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகள் ஒருபக்கமும், அதற்கு ஊடகங்கள் வழங்கும் விளக்கங்கள் மறுபக்கமுமாக குழப்பங்கள் மென்மேலும் அதிகரிக்கின்றன. இதனால் அரசியல் குறித்த உண்மை நிலைமையை எவரும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது என்றே கூறவேண்டும். இந்த நிலைமையால் நேர்மையான அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒரே தராசில் வைத்தே மக்கள் பார்க்கின்றனர்.
இவ்வாறான குழப்பமான அரசியல் நிலைமைகளின் மத்தியில் தேர்தலுக்கான அடுத்தகட்ட நகர்வுகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஆரம்பகட்டமாக கூட்டணிகளை அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதனை மையமாகக் கொண்டு அரசியல்வாதிகள் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்பொழுது இருக்கும் அரசியல் சூழ்நிலைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என அனுமானிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் அதாவது ஜே.வி.பி தலைமையிலான கூட்டணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உறுதியாக அறிவிக்காதபோதும், அவரை வேட்பாளராகக் களமிறங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினரும் உறுதியாகவிருக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியாகப் பொதுஜன பெரமுன இருக்கின்றபோதும், பொதுஜன பெரமுன தனது வேட்பாளர் யார் என்பதில் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
இருந்தபோதும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஒரு சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தமது நேரடியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். வேறு சிலர் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷவுடன் இருக்கின்றனர்.
மேலும் சிலர் எந்தப் பக்கம் செல்வது என முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிகின்றது.
மறுபக்கத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஆளும் கட்சியில் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் அடங்கிய புதிய கூட்டணியொன்றும் உருவாகியுள்ளது. நிமல் லான்சா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான இந்தக் கூட்டணியில் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்து ஓரளவு சாதகமான நிலைக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு இந்தக் கூட்டணி செயற்படுகிறது.
அதேநேரம், பொதுஜன பெரமுன இன்னமும் தனது உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கவில்லை. தமது தரப்பில் நான்கு வேட்பாளர்கள் தயாராக இருப்பதாவும், அவர்களில் பொருத்தமான ஒருவரைக் களமிறக்குவோம் என்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.
எதுவாக இருந்தாலும், தற்போதிருக்கும் அரசியல் நிலைவரத்துக்கு அமைய பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிட்டு அவர்களின் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும். எனவே, அவர்கள் யாராவது ஒரு பலமான அணியுடன் கூட்டணி அமைப்பதே அவர்களுக்கு இருக்கும் ஒரே தெரிவாக அமையும்.
மறுபக்கத்தில், எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எந்தவொரு அரசியல் தரப்புடனும் கூட்டணி அமைப்பது பற்றிப் பேசாது தனித்துப் போட்டியிடும் அரசியல் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அவர்கள் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு அமைய எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அவர்களால் கூட்டணி அமைப்பது இலகுவாக அமையாது.
இதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றியிருப்பதாகவும், ஆட்சியாளர்கள் மோசடி புரிந்திருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களால் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.
அதுமாத்திரமன்றி, மக்கள் மத்தியில் தமக்கான ஆதரவு அதிகம் இருப்பதாக அவர்கள் அதீத நம்பிக்கை கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இது இவ்விதமிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைமை சற்று வித்தியாசமாகவே இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்ற தீர்மானம் அந்தக் கட்சியினால் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது என்றே கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய பொதுத்தேர்தலில் அந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் வெற்றிபெற்று விடலாம் எனக் கணிப்பிடும் அரசியல்வாதிகளும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவான பிரமுகர்களும் ஐக்கிய மக்கள் சக்தியைத் தேடிச் சென்று இணைந்து வருகின்றனர்.
அவர்களும் வருபவர்களை அரவணைத்துப் பதவிகளையும் வழங்கி வருகின்றனர். சுதந்திரக் கட்சியின் நீண்டகால சிரேஷ்ட உறுப்பினரான ஷான் விஜயலால் த சில்வா ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டு அமைப்பாளர் பதவியைப் பெற்றுள்ளார். இதுபோன்று மேலும் பலரும் இணைந்துள்ளனர்.
அது மாத்திரமன்றி, கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருந்த துறைசார் நிபுணர்களின் குழுவான ‘வியத் மக’ குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாளக கொடஹேவா போன்றவர்களும் சஜித்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க புதிதாக இணைந்து கொண்டார். கோட்டாபய ராஜபக் ஷ வின் அரசாங்கத்தில் துறைமுக அதிகாரசபையின் தலைவராகவும், அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் இருந்த இவர், தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கு ஆதரவாக இணைந்து கொண்டுள்ளார்.
இவரின் இந்த இணைவு ஐக்கிய மக்கள் சக்திக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போர்க்கொடி தூக்கியிருப்பதே இந்த சலசலப்புக்குக் காரணமாகியுள்ளது.
கட்சியின் தவிசாளராக இருக்கும் தனக்குக் கூடத் தெரியாமல் ஒரு சிலரின் விருப்பத்துக்கு அமையத் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும், கட்சியுடன் இணைத்துக் கொள்ளப்படும் நபர்கள் குறித்து சரியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்த சரத் பொன்சேகா, இது விடயத்தில் கட்சி சரியான முடிவை எடுப்பதே பொருத்தமானது என்றார்.
தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்குக் காரணமாக இருந்தவர் தயா ரத்னாயக்க என்றும், இவர் நியாயமானதொரு நபர் இல்லையென்றும் சரத் பொன்சேகா விமர்சித்திருந்தார். தனித்துவமான முறையில் எடுக்கப்படும் சில தீர்மானங்கள் காரணமாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தியடைந்திருப்பதையும் சரத் பொன்சேகா நினைவுபடுத்தினார்.
சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்துக்கள் கட்சிக்குள் குழப்பம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு பதவியொன்று வழங்கப்பட்டிருந்தாலும் அவர் அரசியல் களத்தில் இறக்கப்பட மாட்டார் என்ற அர்த்தத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.
கட்சிக்குள் கதைக்க வேண்டிய விடயத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியமைக்குத் தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் அக்கட்சிக்குள் இருக்கும் குழப்பநிலையொன்றும் புலப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சலூனில் காணப்படும் கதவைப் போன்றது அல்ல. இந்தக் கட்சிக்குள் வரும் நபர்கள் யார் என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியில் எடுக்கப்படும் சில தீர்மானங்கள் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் காரணமாக கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதும் புலனாகிறது.
இவ்வாறான அரசியல் குழப்பங்களும், கட்சித் தாவல்களும் வரும் வாரங்களில் அதிகரிக்க தேர்தல் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும். இந்தக் குழப்பங்கள் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்தது அல்ல.
மாறாக ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நடைபெறக் கூடிய பொதுத்தேர்தலையும் இலக்கு வைத்தே அனைத்து அரசியல் நகர்வுகள் இடம்பெறுகின்றன. விசேடமாக கட்சித் தாவல்கள் மற்றும் கரணங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தமது எதிர்கால இருப்பை அடிப்படையாகக் கொண்டே தாம் எந்தத் தரப்புடன் நிற்பது என்பதைக் கணிப்பிட்டு வருகின்றனர். இந்தக் கணிப்பீடுகள் காலத்துக்குள் காலம் மாறும்போது அரசியல் பரபரப்புகளும் அதிகரிப்பதைப் பார்க்க முடியும்.