இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்றுள்ள சாந்தன் இலங்கைக்கு வருவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் சி.சிறிதரன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதியை நேரில் சந்தித்த போதே, அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து இவரது வயதான தாயை சந்திக்கும் வாய்ப்பை தருவதாக, கட்சித் தலைவர்கள் இருவரிடமும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னாயக்கவுக்கு, இரு தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாந்தனின் தாயாரின் கோரிக்கை கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் சிறிதரனிடம் ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் ஜனாதிபதியின் பெஜட் வீதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று நண்பகல் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது