இலங்கை தமிழரசுக் கட்சியையும் இணைத்துக்கொண்டு பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக்கொடுப்பையும் செய்ய தாம் தயாராக உள்ளதாக, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அவரது மன்னார் அலுவலகத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த போது,
“தமிழ்க் கட்சிகள் 5 ஒன்றிணைந்து ஓரணியில் பொதுச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
ஏற்கெனவே தமிழரசுக் கட்சியின் தனிச் சின்னத்தில் நாம் பயணித்தோம். பல வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பயணித்தோம்.
உள்ளூராட்சிமன்றம் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டுமென்று அவர்கள் வெளியில் சென்ற காரணமாகவும் நாம் ஒன்றாக நிற்க வேண்டுமென்ற காரணமாகவும் நாம் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.
எம்மை பொறுத்தவரையில் நாம் அனைவரும் பொதுச் சின்னமொன்றில் பயணிக்க வேண்டுமென்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரனின் கூற்றை நான் வரவேற்கிறேன். பொதுச் சின்னமொன்றில் நாம் அனைவரும் அணிதிரள்வோம்.
பொதுச் சின்னத்துக்கு வீட்டுச் சின்னம் கூட மாற்றப்பட்டால் எமக்கு ஆட்சேபனை இல்லை. தனிப்பட்ட கட்சிக்குள் கூட்டாக இருப்பது நன்றாக அமையாது” எனத் தெரிவித்தார்.
மன்னார் குறூப் நிருபர்