நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க ஐ.தே.க. தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஐ.தே.க. தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட முகாமையாளர் லசந்த குணவர்தன, ஐ.தே.க.வின் நிறைவேற்று பணிப்பாளர் சமல் செனரத் மற்றும் செயற்குழு உறுப்பினராக கிருஷான் தியடோர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து, கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஐ.தே.க. தேர்தல் நடவடிக்கைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகுமெனவும், அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐ.தே.க.வின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இந்தக் குழுவினூடாக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்ற மேலும் சில குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும், அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பொருத்தமான இடமொன்றை தெரிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.