எனக்கு நீ எவ்வளவு
தேவையென்பதை
எனக்கு
நீதான் உணர்த்த வேண்டும்
உன் காதலில்
என் வாழ்வில்
எனக்கு மிக முக்கியமானதொரு
நபர் நீதானென்பதை
நீயேதான் எனக்கு
உறைக்கச் செய்யவேண்டும்
நம் காதலில்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
அவசியமற்றவர்களாக
இருந்துவிடுமொரு அன்பில்
என்னதான் சுவாரஸ்யமாய்
இருக்கப்போகிறது
நீயில்லாமலே
என்னால்
ஒரு துயரத்தை கடக்க
முடியுமானால்
ஒரு நிகழ்வை கொண்டாட
முடியுமானால்
நீயில்லாமலே ஒரு
நடைப்பயணத்தை
முடித்திட முடியுமானால்
நீயில்லாமலே என் தனிமைகளை
கழித்திட முடியுமானால்
எனக்கான பரிசுகளை நானே
வாங்கிக் குவித்திட
முடியுமானால்
நம் காதலில் சொல்லிச்சொல்லி
பெருமைப்பட்டுக்கொள்ள
அப்படிப் பிரமிப்பாய்
என்னதானிருந்து
விடப்போகிறது
ஒரு நாளில்
உன்னைத் தேடாத
உன்னைத் தேட வைக்காத
ஒருகாதலில்
யார் யாருக்காக
சாகத்துணிவது
மயிலிறகு மனசு