இந்து சமுத்திர முத்தென மிளிர்வதெம் தாய் நாடு.
சிந்தையில் சீரிய மானிடர் வாழும் செந்நாடு
வளங்கொழி செழுமையின் தாயகம் இந்தத் தேனாடு
நலமென நீர்வளம் பொங்கிடும் பொழில் திருநாடு..
மங்கள மலர்கள் எங்கும் மலரும் பூக்காடு
திங்களின் ஒளியில் மின்னிடும் அலைகடல் சூழ் நாடு.
இரத்தினம் வாசனைத் திரவியம் விளையும் பொன்னாடு
வரமென உயர்தரத் தேயிலை கொண்ட மலைநாடு…
தந்தம் கொண்ட கரியினம் வாழும் எழில் காடு
மந்தமாருதம் குறைவிலாச் சிறக்கும் சீர்நாடு
நல்லறம் சொல்லும் நால்வகை
மதங்களின் நன்நாடு
எல்லா மாந்தரும் அன்பால் பிணைந்த பொற்கூடு
பல்லின மக்களின் ஐக்கியம் நிலைத்திட வேண்டும்
நற்கோட்பாடு
நல்லிணக்கம் மலரக் காண வேண்டும் இந்நாடு..
சங்குகள் முழங்கிடச் சுதந்திரம் பெற்றதெம் நாடு
இங்குள மானிடர் யாவரும் சமமெனப் பாரினில் இனி நீ பாடு.
இதயம் திறந்தே இணைவோம் வாரீர் யாவரும் அன்போடு
இலங்கைத் தேசத்தை உலகம் பேசட்டும் பெருமதிப்போடு.