அந்நியர்களின் ஆட்சியால்
அல்லலுற்றது நம்நாடும்
அமைதியைப் பறித்தே
அலைக்கழித்ததே துயராகும்
அடிமை விலங்கை
அணிவித்தே அன்று
அகம்பாவம் கொண்டு
அகமகிழ்ந்ததே சான்று
ஆணவம் கூடியே
ஆடியது தலைக்கனம்
ஆறாத் துயரில்
ஆழ்ந்தது மௌனம்
ஆட்சியின் கொடூரம்
ஆத்திரத்தை வரைந்தது
ஆவேசம் நிறைந்திட
ஆரம்பமானது விடுதலைப்போர்
இலங்கையைக் காத்திட
இணைந்தது கரங்களும்
இயலாமை மறைந்தே
இரும்பானது மனதும்
இன்னலைக் களைந்திட
இனமதம் மறந்தே
இலக்கிலோடியது மனிதம்
இதுவே சுதந்திரம்
உன்னதம் கொண்ட
உத்தமர்களால் அன்று
உரைத்திட்ட வீரிய
உரிமைக்குரலால் இன்று
உள்ளம் மகிழ்ந்திடும்
உண்மை சுதந்திரம்
உவகை தந்தே
உயர்கிறது நல்லுணர்வும்..!