சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகுமென்பதுடன், சுதந்திரத்தை பாதுகாக்க நிபந்தனையற்ற அர்ப்பணிப்பை வழங்குவதும் ஆட்சியாளர்களினதும் பொறுப்பாகுமென, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். போர்த்துகேயராலும் ஒல்லாந்தராலும் பின்னர் 1815 முதல் 1948வரை ஆங்கிலேயராலும் முழுமையாக காலனித்துவப்படுத்தப்பட்டிருந்த நாம், 1948 பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரத்தை பெற்றுக்கொண்டோம். அவ்வாறு சுதந்திமடைந்து இவ்வருடம் பெப்ரவரி 4ஆம் திகதியுடன் 76 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
உயரிய சுதந்திரத்துக்காக நாடு எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள, கடந்தகாலம் தொட்டு இன்றுவரை உயிர்த்தியாகம் செய்த அனைத்து தேசப்பற்றாளர்களுக்கும் தேசத்தின் மரியாதையும் அஞ்சலியும் செலுத்தப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பெற்ற சுதந்திரத்தை தேசிய, சமூக, கல்வி, மத ரீதியிலாக அர்த்தமுள்ளதாக்க நாம் தவறிவிட்டோம். 1948 இலிருந்து 76 வருடங்களாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை பொருளாதார மற்றும் சமூக சுதந்திரமாக மாற்றும் பொறுப்பு எமக்குள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக குறுகிய பேதங்கள் போலவே, இனவாத மற்றும் மதவாத உணர்வுகளுடன் அரசியல் களம் மிகவும் அழுக்கடைந்து போயுள்ளமையால், நாம் ஒரு நாடாக பிரிந்து பல துரதிஷ்டவசமான அவலங்களை எதிர்கொண்டோம்.
ஒரு நாடாக அடைந்த சாதனைகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகளை கடந்த 76 ஆண்டுகளில் நமக்கு நல்ல பாடங்களை போதித்திருக்கின்றன.
மக்களின் சுதந்திரத்துக்கு தடை விதிக்கும் சட்டங்களை நிறைவேற்றி, தற்போதைய ஆட்சியாளர்கள் நடந்துகொள்ளும் விதம், நாம் பெற்றுள்ள சுதந்திரத்தினுள் உரிமையாக்கிக் கொண்ட ஜனநாயக ஆட்சியை சர்வாதிகாரமாக மாற்றும் முயற்சியாகும்.
இந்த முயற்சியை முறியடிக்க நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டியது இந்த சுதந்திர தினத்தில் நமது அபிலாஷையாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன்” என்றார்.