“உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் என்பவற்றை நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் நாம் அந்த கடினமான தடைகளை தாண்டியிருக்கிறோம்” என, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தன சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். எமது முன்னோர்கள் கீர்த்திமிக்கதொரு வரலாற்றை எம்மிடம் கையளித்துச் சென்றனர். அவர்களது வழிவந்த நாம், அந்த கீர்த்திமிக்க வரலாற்றை எமது அடுத்த தலைமுறைக்கு அர்த்தமிக்க வகையில் கையளிக்க வேண்டியது எமது பொறுப்பாகுமென்றும், பிரதமர் தெரிவித்தார்.
காலம்காலமாக அந்நிய, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு முகங்கொடுத்து, யுத்தத்தாலும், இரத்தம் மற்றும் வியர்வை சிந்தியும், பல்வேறு போராட்டங்களாலும், அறிவு ஞானத்தாலும் போஷிக்கப்பட்ட சுதந்திரத்தின் 76ஆவது ஆண்டை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
1818 மற்றும் 1848ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் முதல் 1948ஆம் ஆண்டுவரை சமய மற்றும் சமூக தேசியத் தலைவர்கள் மேற்கொண்ட சிந்தனை மற்றும் புரட்சிப் போராட்டங்களின் விளைவாக நாம் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றோம். இந்தத் தருணத்தில் நாம் அவர்களை பெருமையுடன் நினைவுகூர்வோம்.
அந்த சுதந்திரத்தின் பின்னரும் கூட, 1956ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி, 1972ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பின் மூலம் கிடைத்த முழுமையான சுதந்திரம், மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தம் இன்னுயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை இந்தத் தருணத்தில் நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
எமது நாடு பாரியதொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்து, மெல்ல மெல்ல சரியான இலக்கை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்திலேயே இவ்வருட சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.
இந்தச் சவால்களை வெற்றிகொண்டு சுபீட்சமானதொரு தேசத்தை கட்டியெழுப்பும் உறுதியுடன், இந்த 76ஆவது தேசிய சுதந்திர தினம் நாட்டின் பொருளாதாரத்தில் புதியதோர் திருப்புமுனையாக அமையவுள்ளது.
அந்தப் போராட்டங்களின் அடிப்படையில் சுதந்திரத்தை பாதுகாத்து, நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.