‘நாட்டை பொருளாதார ரீதியில் மீட்பதற்காக தற்பொழுது அரசாங்கம் பயணம் செய்து வருகின்ற பாதைக்கு மாற்றுவழி எதுவுமே கிடையாது. இது கடினமான பாதையாக இருந்தாலும், அப்பாதையில் பயணித்தே ஆகவேண்டும்’ என்று துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து எமக்கு அமைச்சர் பேட்டி வழங்கினார்.
கே: வருவாய் ஈட்டும் விடயத்தில் துறைமுகம் எட்டியுள்ள அடைவுகள் குறித்து திருப்தியடைகின்றீர்களா?
பதில்: மிகவும் திருப்தியடைய முடியும். நல்ல வருமானம் ஈட்டி வருகின்றோம். நாட்டின் பொருளாதார மையமாக துறைமுகம் காணப்படுகிறது. நமது நாட்டில் கொள்கலன் மீள்ஏற்றுமதி நடவடிக்கைகள் 1981 இல் ஆரம்பமாகிய போதும், தற்போது எமது கொள்கலன் மீள்ஏற்றுமதி நடவடிக்கைகள் மிகவும் உச்சமட்டத்துக்குச் சென்றுள்ளன. ஆண்டுக்கு 8.5 மில்லியன் கொள்கலன்களை மீள்ஏற்றுமதி செய்து வருகிறோம். உலகின் சிறந்த கொள்கலன் மீள்ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய துறைமுகங்களில் இருந்து இந்த நாட்டுக்குக் கொண்டு வரப்படும் கொள்கலன்கள் பெரிய கப்பல்கள் மூலம் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், பெரிய கப்பல்கள் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்படும் கொள்கலன்கள் சிறிய கப்பல்கள் மூலம் சிட்டகாங் போன்ற துறைமுகங்களுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கே: துறைமுகத்தின் வளர்ச்சியை சுருக்கமாக விபரிக்க முடியுமா?
பதில்: எங்களிடம் ஜயா கொள்கலன் முனையம் மாத்திரமே இருந்தது. தற்போது துறைமுகத்தில் இரண்டு தனியார் முனையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், அதானிக்கு முனையொன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், 580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய முனையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு சுமார் 400 மில்லியன் டொலர் செலவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் பாரம்தூக்கிகளை அதன் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். இந்த ஆண்டு அதன் செயல்பாடுகளை தொடங்க முடியும் என எதிர்பார்க்கின்றோம். அதன் மூலம் இங்கு நடவடிக்கைகளுக்காக அதிக கப்பல்களை ஈர்க்க முடியும். அதன் மூலம், இந்த ஆண்டு 10 மில்லியன் கொள்கலன்களாகவும், பின்னர் 15 மில்லியனாகவும், பின்னர் 25 மில்லியனாகவும் வளர வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. கப்பல்கள் இங்கு கொள்கலன்களை விரைவாக இறக்கிவிட்டு புதிய கொள்கலன்களுடன் வெளியேற விரும்புகின்றன.
கே: துறைமுகத்தின் பணி மெதுவாக முன்னெடுக்கப்படுவது கப்பல்களின் வருகைக்கு இடையூறாக இருக்கின்றதல்லவா?
பதில்: ஆம், அதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம். குறிப்பாக, துறைமுக செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு இடத்தில் சுங்கம், இன்னொரு இடத்தில் துறைமுகப் பணிகள். இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வெவ்வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இறக்குமதியாளர்கள், கப்பல் நிறுவன முகவர்கள் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது. அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் இருந்து சாத்தியமாக்கும் வகையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும். அது மட்டும் அல்ல, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது 22 மாடிக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதன் மூலம் பல்வேறு இடங்களில் உள்ள துறைமுகத்தின் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இது நிர்வாக ரீதியாகவும் துறைமுகத்தின் வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் வசதியானது. அதுமட்டுமன்றி, துறைமுகத்துடன் இணைக்கப்பட்ட கோபுரங்களில் கட்டப்பட்டு வரும் விமான நெடுஞ்சாலையின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அதை இந்த ஆண்டு அப்பணிகளை பூர்த்திசெய்ய முடியும். அப்போது துறைமுகத்திற்கு வரும் போக்குவரத்து 90 வீதம் குறையும்.
கே: ஒலுவில் துறைமுகம் பாரிய செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகமாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்கள் தொடர்பில் கேள்வி உள்ளது அல்லவா?
பதில்: அந்தத் துறைமுகம் எங்களால் வெற்றிகரமான முடிவுகளைப் பெற முடியாத நிலையில் உள்ளது. எனவே, அந்தத் துறைமுகத்தை மீன்பிடி அமைச்சிடம் ஒப்படைத்தோம்.
கே: அரசாங்கம் பயணிக்கும் திசையை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்: பொருளாதாரத்தை மீட்டெடுப்பதோ அல்லது நாட்டை மீட்டெடுப்பதோ ரோஜா படுக்கையில் ஆற்றக்கூடிய விடயமல்ல. நிச்சயமாகக் கடினமான பாதையாக உள்ளது. நாமும் விருப்பத்துடன் செல்வதில்லை. அந்த வழியைத் தவிர வேறு வழியில்லை எமக்கு. பொருளாதார வேலைத்திட்டத்தை மேம்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கிறோம். ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மாத்திரமே உறுதுணையாக உள்ளது. மாற்றுவழி இல்லையென்பதால் கடினமான பயணத்தை நாம் நிச்சயமாகத் தொடர்ந்தே ஆகவேண்டிய கடப்பாடு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவர வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாங்கள் பதவிக்கு வந்த பிறகு நிலைமைகள் மாற்றப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். சர்வதேச நாணய நிதியம் என்பது அரசியல் கட்சிகளுக்கு ஏற்ப நிலைமைகள் மாற்றப்படும் இடம் அல்ல.
கே: நாட்டின் அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது அல்லவா?
பதில்: அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. எனினும் இதுவரை 250 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிராமத்தை நிர்மாணிப்பவர்களும் வெலிகொட பிரதேச மக்களும் வருமானம் ஈட்ட முடியும்.
கே: ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப சிரேஷ்ட அரசியல்வாதியாக இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: ஜனாதிபதியை நாட்டின் தலைவராக நாங்கள் மதிக்கிறோம். ஏனெனில் முன்னைய ஜனாதிபதியின் இராஜினாமாவுடன் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிய போதும் ஏனைய கட்சித் தலைவர்கள் அனைவரும் பயந்து பின்வாங்கினர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க முன்வந்து சவாலை ஏற்றுக்கொண்டார். அத்துடன், அன்றைய ஜனாதிபதி கோட்டாபயவின் இராஜினாமாவுடன் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று நாட்டுக்குத் தேவையான கடமைகளை நிறைவேற்றினார். திவாலான நாட்டை மீட்க அவர் எப்படி உழைத்தார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, நாட்டு மக்கள் சரியான நேரத்தில் சரியான பதிலை வழங்குவார்கள்.