நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டுக்கொண்ட பெருமையை இந்த தினத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பெருமையுடன் நினைவு கூருகின்றனர்.
அந்த வகையில் எமது நாட்டுக்கு நீண்டதொரு வரலாறு காணப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான வரலாறு உண்டு.
இலங்கை ஒரு விவசாய நாடு என்ற வகையில் எமக்கான விவசாயத்துறை வரலாறு மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. நாட்டை ஆண்ட மன்னர்களாகட்டும் அதன் பின்னரான ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கங்களாகட்டும் விவசாயத்துறைக்கும் நீர்ப்பாசனத் துறைக்கும் கைத்தொழில் துறைக்கும் எல்லாக் காலங்களிலும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளது. உலகில் எந்த நாட்டிலும் தங்கியிருக்காமல் துறைமுகத்துக்கு கப்பல் வரும் வரை காத்திருக்காமல் எமக்கான உணவுத் தேவைகளை நாமே நிவர்த்தி செய்த பெருமைமிக்க நாடு இது. எனினும் இடைப்பட்ட காலங்களில் பல்வேறு விதத்திலும் நாடு எதிர்கொள்ள நேர்ந்த பாதிப்புகள் காரணமாக அந்த நிலை தற்போது மாற்றமடைந்துள்ளது.
அந்த வகையில் விவசாயத்துறை மற்றும் கைத்தொழில் துறை உட்பட அனைத்து துறைகளையும் மீளக் கட்டி யெழுப்புவதற்கான தூர தரிசன நோக்குடன் தற்போதைய அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மிக காத்திரமானதாக முன்னெடுக்கப்பட்டும் வரும் இத்தகைய சூழ்நிலையிலேயே நாம் நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுகின்றோம். கடந்த சில ஆண்டுகளாக நாடு முகம் கொடுத்த நெருக்கடி நிலைக்குப் பின்னர் இயல்பு நிலை திரும்பும் இந்த சந்தர்ப்பத்தில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுவது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.
நாட்டு மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வாழும் காலகட்டம் இது. அந்த வகையில் இம்முறை சுதந்திர தினம் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளமாக அமையும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நாட்டின் அனைத்து துறைகளுக்கும் நீண்ட சிறப்பான வரலாறு காணப்படுவது போன்றே இலங்கையின் பாராளுமன்றத்துக்கும் சிறப்பான வரலாறு உண்டு.
உலகின் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பின்பற்றி எமது பாராளுமன்றமும் உலகளவில் தனித்துவமான பெருமையை பறைசாற்றி வருகிறது.
அந்த வகையில் நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தில் எமது பாராளுமன்றத்தின் வரலாற்றையும் காலம் காலமாக ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் நாம் மீட்டிப் பார்ப்பது பொருத்தமானதாகும்.
பாராளுமன்ற கூட்டத்தொடர்
தற்போதைய பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம் மாதம் 26ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரையின்படி அவருக்குள்ள தத்துவங்களுக்கு அமைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அந்த வகையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் பெப்ரவரி 07 ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டமையைக் குறிப்பிட முடியும். இவ்வாறு பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரொன்றை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பில் வரலாற்று ரீதியான மற்றும் செயற்பாட்டு ரீதியான பின்னணிகள் காணப்படுகின்றன.
கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரம்
அரசியலமைப்பின் 70(1) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தை கூடுமாறு அழைத்தல், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் கலைப்பதற்கான பூரண அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.
புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் தினம்
அரசியலமைப்பின் 70(3) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத்திலேயே புதிய கூட்டத்தொடருக்கான திகதி நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த திகதி கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத ஒரு தினமாக இருக்க வேண்டும். எனினும், பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் ஆரம்பிக்கும் திகதியை பிரகடனப்படுத்தியிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு அழைப்பதற்கு அரசிலமைப்பின் 70(3)(i) உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, மீண்டும் பிரகடனம் ஒன்றின் மூலம் அவ்வாறு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு எதிர்பார்க்கும் தினத்தைப் பிரகடனப்படுத்துவதுடன் குறித்த பிரகடனத்தின் திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிந்திய ஒரு தினத்தில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது, அதன் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுவதாக பலர் கருதுகின்றனர்.
எனினும் அது அவ்வாறில்லை. கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது சபாநாயகர் தொடர்ந்தும் தனது பணிகளை மேற்கொள்வார். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர்களது உறுப்பினர் பதவிகள் அவ்வாறே இருக்கும். எனினும், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அதுவரை பாராளுமன்றத்தில் காணப்பட்ட அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்படுவதுடன் குற்றப்பிரேரணை (Impeachment) தவிர்ந்த அதுவரை சபையில் இடம்பெற்றுவந்த அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
எனினும், குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக சட்ட மூலமொன்றையோ, பிரேரணையொன்றையோ அல்லது கேள்வியொன்றையோ ஒரே கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக முன்வைக்க முடியாது. ஆனால், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் எதிர்வரும் கூட்டத்தொடருக்கு கொண்டுசெல்ல வாய்ப்பு உள்ளது. பாராளுமன்றத்தின் முன்னர் உரிய முறையில் கொண்டு வரப்பட்டுள்ளவையும் பாராளுமன்றத்தின் அமர்வு நிறுத்தப்பட்ட நேரத்தில் முடிவுசெய்யப்படாதிருந்தவையுமான எல்லா செயற்பாடுகளும் அடுத்த அமர்வின்போது, எங்கு நிறுத்தப்பட்டதோ அந்த நிலையிலிருந்து தொடர்ந்து கையாளப்படலாம் என அரசியலமைப்பின் 70(4) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இந்த ஏற்பாடுகளின் கீழ் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் இரத்துச் செய்யப்படுவதில்லை.
இதன்போது, பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே எதிர்வரும் அலுவல்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அரசாங்கத்தின் அலுவல்களை சபை முதல்வர் தீர்மானிப்பதுடன், தனியார் உறுப்பினர் சட்டமூலம் அல்லது பிரேரணை என்பவற்றை மீண்டும் புதிதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது ஒழுங்குப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சபை அலுவல்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமானால் அவற்றை மீண்டும் பட்டியலிடுவது அவசியமாகும். பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது பாராளுமன்ற குழுக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது கேள்வியாகும். இதில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 109, 111(2), 127(5), 128(1) என்பவற்றுக்கு அமைய முறையே பாராளுமன்ற விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் இணைப்புக் குழு தவிர்ந்த ஏனைய அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் போது மீண்டும் நியமிக்கப்படுகின்றன.
இங்கு நிலையியற் கட்டளை 128(2) க்கு அமைய இணைப்புக் குழுவுக்கு உறுப்பினர்கள் பதவியடிப்படையில் (சபாநாயகர், பிரதி சபாநாயகர் போன்ற பதவிகளின் அடிப்படையில்) நியமிக்கப்படுவதனால் அதில் மாற்றம் ஏற்படுவதில்லை.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 114 க்கு அமைய ஒவ்வோர் புதிய கூட்டத்தொடரின் போதும் தெரிவுக்குழு புதிதாக நியமிக்கப்படுகின்றது.
இதில் சிறப்பு நோக்கங்களுக்கான பின்வரும் அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது இரத்தாகின்றன.
- அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
- சட்டவாக்க நிலையியற் குழு
- பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
- நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
- சபைக் குழு
- ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
- அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
- அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
- அரசாங்க நிதி பற்றிய குழு
- வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு
- பொருளதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு
- வழிவகைகள் பற்றிய குழு
- பொது மனுக்கள் பற்றிய குழு
- பின்வரிசை குழு
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர்
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது வைபவ ரீதியாக அது ஆரம்பிக்கப்பட வேண்டுமானால் அது ஜனாதிபதியின் தலைமையிலேயே இடம்பெறும்.
பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரினதும் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதியினால் அவரது அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.
கடந்த காலத்தில் இது மகா தேசாதிபதியால் வழங்கப்படும் அக்கிராசன உரை என்று அறியப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் ஒவ்வோர் பாராளுமன்றத்திலும் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டத்தொடர்களின் எண்ணிக்கை 1947 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை சுமார் 50 தடவைகள் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதிவுகள் குறிப்பிடுகின்றன.
- 1978 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25க்கும் மேற்பட்ட பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு;
- 1978.09.07 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது பாராளுமன்றம் 1988.12.20 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் எட்டு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 1989.03.09 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது பாராளுமன்றம் 1994.06.24 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஐந்து கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 1994.08.25ஆம் திகதி ஆரம்பமான மூன்றாவது பாராளுமன்றம் 2000.08.18 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரை மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 2000.10.18ஆம் திகதி ஆரம்பமான நான்காவது பாராளுமன்றம் 2001.10.10 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 2001.12.19ஆம் திகதி ஆரம்பமான ஐந்தாவது பாராளுமன்றம் 2004.02.07 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரை இரண்டு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 2004.04.22 ஆம் திகதி ஆரம்பமான ஆறாவது பாராளுமன்றம் 2010.02.09 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரை நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 2010 மார்ச் 09 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது (அவசரகால நிலைமை பிரகடனம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு)]
- 2010.04.22 ஆம் திகதி ஆரம்பமான ஏழாவது பாராளுமன்றம் 2015.06.26 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரை ஒரு கூட்டத்தொடரை மாத்திரம் கொண்டிருந்தது.
- 2015.09.01 ஆம் திகதி ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றம் 2020.03.02 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரை நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 2020.08.20 ஆம் திகதி ஆரம்பமான ஒன்பதாவது பாராளுமன்றம் 2024.01.26 ஆம் திகதி வரை நான்கு கூட்டத்தொடர்களை கொண்டிருந்தது.
பாராளுமன்ற முறைமையின் வளர்ச்சி
காலனித்துவக் காலத்துக்கு முன்னர் இலங்கை ஒரு முடியாட்சி நாடாகவே திகழ்ந்தது. அதன் பின்னர் போர்த்துக்கேய, ஒல்லாந்த மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கீழ், நிர்வாக மற்றும் அரசாங்க மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
முதலில் கரையோர ஒல்லாந்தர் ஆட்புலங்களும் அதனைத் தொடர்ந்து கண்டி இராச்சியமும் 1815ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தது.
ஹோல்புறூக்- கெமரன் ஆணைக்குழுவின் விதப்புரைகளுக்கிணங்க நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும்- காலனித்துவ இலங்கையின் முதலாவது சட்டவாக்க சபைகள் – 1833ஆம் ஆண்டு ஆளுநர் சேர் றொபட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிறைவேற்றுப் பேரவை, சட்டவாக்கப் பேரவை என்பன காலிமுகத்திடலிலுள்ள பழைய பாராளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றப்படும் வரை கோடன் பூங்காவுக்கு எதிரேயுள்ள, தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு செயற்படும் கட்டிடத்திலே கூட்டப்பட்டன. அப்போதைய மகா தேசாதிபதி சேர் ஹேபட் ஸ்ரான்லி என்பவரால் 1930 ஜனவரி 29 ஆம் திகதி காலிமுகத்திடலில் அமைந்துள்ள பழைய பாராளுமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
சட்டமன்றம் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள புதிய பாராளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு மாற்றப்படும்வரை இக்கட்டிடத்திலேயே நடைபெற்றது. 1944ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழுவினரால் வெஸ்ற்மினிஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பாராளுமன்றம், மகாராணியையும் (மகா தேசாதிபதியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்) செனற், பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டு சபைகளையும் கொண்டிருந்தது. பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் இருந்தனர். செனற் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினரால் தெரிவுசெய்யப்பட, மற்றும் 15 பேர் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
1971 ஒக்டோபர் 2ஆம் திகதி செனற்சபை இல்லாமலாக்கப்பட்டது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் காரணமாக சட்டமன்றத்தின் பெயர் பலமுறை பின்வருமாறு மாற்றப்பட்டது.
- சட்டவாக்கப் பேரவை 1833-/1931 – (49 உறுப்பினர்கள்)
- ராஜ்ய சபை 1931/-1947 – (61 உறுப்பினர்கள்)
- பிரதிநிதிகள் சபை 1947-/1972 – (101 உறுப்பினர்களும் 1960 இன் பின்னர் 157 உறுப்பினர்களும்)
- தேசிய அரசுப் பேரவை 1972-/1978 – (168 உறுப்பினர்கள்)
- பாராளுமன்றம் 1978 – முதல் இற்றைவரை – (225 உறுப்பினர்கள்)
மூன்றாம் விக்கிரமபாகு மன்னனின் பிரதம அமைச்சரான நிஸ்ஸங்க அழகேஸ்வராவின் அரண்மனை அமைந்திருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் புதிய பாராளுமன்றத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டது.
ஜிஃப்ரி பாவா கட்டடக் கலைஞராக செயற்பட்டதுடன் புதிய கட்டிடத்தொகுதியின் நிர்மாணத்துக்காக ஜப்பானிய மிற்சுயி கம்பனிகள் இரண்டின் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இலங்கைப் பாராளுமன்றம் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். அது 6 ஆண்டுகால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார்.
நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அல்லது கலைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும் மேலும் 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
கோல்புறூக்- கெமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டமன்றம் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, மற்றும் இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833, மார்ச் 13 ஆம் திகதி நிறுவப்பட்டன.
1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரமடைய முன்னர், 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசாங்க சபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஈரவை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
வெஸ்ட் மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் அமைக்கப்பட்டன. கீழவைக்கான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் (1960 இல் 157 ஆக அதிகரிக்கப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்டனர். செனட் சபைக்கான 30 உறுப்பினர்களில் 15 பேரை பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுத்தது. ஏனைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமித்தார்.
1971 அக்டோபர் 2 இல் செனட் சபை கலைக்கப்பட்டது. 1972 மார்ச் 22 இல் இலங்கை குடியரசானது. பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரச பேரவை உருவாக்கப்பட்டது.
இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரச பேரவை கலைக்கப்பட்டு இலங்கை பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.
பிரித்தானிய குடியேற்ற அரசாங்கத்தின் கீழ், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது, இந்த அவைகள் கொழும்பில் உள்ள கோர்டன் கார்டன்சிற்கு எதிரில் உள்ள கட்டடம் ஒன்றில் கூடின. இக்கட்டடம் தற்போது “குடியரசுக் கட்டடம்” என அழைக்கப்படுகிறது. இங்கு இப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு அமைந்துள்ளது.
1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (1927–1931) காலிமுகத் திடலுக்கு எதிரே பாராளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இங்கு இலங்கை அரசாங்க சபை (1931/-1947), பிரதிநிதிகள் சபை (1947–1972), தேசிய அரசு பேரவை (1972–1977), இலங்கை நாடாளுமன்றம் (1977–1981) ஆகியவற்றின் அமர்வுகள் இடம்பெற்றன.
இன்று இக்கட்டடம் ஜனாதிபதியின் செயலகமாக இயங்குகிறது.
1979 ஜூலை 4 இல் அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாச கொழும்பிலிருந்து கிழக்கே கோட்டே நகரில் தியவன்னாவ பகுதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய பாராளுமன்றக் கட்டடம் அமைக்க பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றார்.
இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டது. 1982 ஏப்ரல் 29 ஆம் திகதி இந்த புதிய பாராளுமன்ற கட்டடத்தை அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன திறந்து வைத்தார்.