இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்களின் தியாகங்களை புதிய இளம் தலைமுறையினருக்கு அறிவூட்டுதல் வேண்டும். அதேவேளையில் எமது சமூக மேம்பாட்டுக்காக பங்காற்றிய எமது அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீசும் நினைவு கூரப்பட வேண்டியவர் என்று அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தெரிவித்தார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தபோது
இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முஸ்லிம்களுக்கும் பாரிய பங்குண்டு. முஸ்லிம்களின் தேசிய வீரர்களை முஸ்லிம்கள்தான் நினைவு கூர வேண்டும். இது எங்களின் கட்டாயக் கடமையாகும். வரலாற்றை மறந்து வாழும் சமூகம் இன்னொரு சமூகத்தினால் கட்டியாளப்படும் என்பது வரலாற்றில் எழுதப்பட்ட உண்மையாகும்
04.02.1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. அந்நியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய, குரல் கொடுத்த, சகல இனத்தையும் சேர்ந்தவர்களையும் தேச பிதாக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம். இலங்கையின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்களும் போராடினார்கள், குரல் கொடுத்தார்கள், ஆதரவு வழங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகளுக்குள் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முஸ்லிம் தேசிய வீரர்களின் பெயர்கள் இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த முஸ்லிம் தேச பக்தர்கள், சேகு டி. டி. (தோப்பூர்), முகம்மது, சலாம் பட்டி உடையார் (குச்சவெளி), அபூபக்கர் ஈஸா (முகாந்திரம் சம்மாந்துறை), மீரா குசைன் காரியப்பர் (சம்மாந்துறை), உசன் லெப்பை உதுமாலெப்பை (சம்மாந்துறை), அனீஸ் லெப்பை (மருதமுனை), ஆகிய வீரத் தியாகிகள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
இலங்கையின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த தேசிய வீரர்கள் என்ற வகையில் சட்ட வல்லுனர் அறிஞர் முகம்மது காசிம் சித்தி லெப்பை, சட்ட வல்லுனர் I.L.M அப்துல் அஸீஸ், 1924இல் நடை பெற்ற சட்ட சபை தேர்தலில் வெற்றியீட்டி சட்டசபை உறுப்பினர்களான, சேர் மாக்கான் மாக்கார், N.H.M. அப்துல் காதர், கலாநிதி துவான் புர்கானுதீன் ஜாயா ஆகியோரைக் குறிப்பிடலாம். முஸ்லிம் அரசியல் மாநாட்டில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார். 1945.11.09 இல் டொமினியன் அந்தஸ்து வழங்கும் சட்டமூலத்திற்கான வாக்களிப்பில் சேர் ராசீக் பரீட், டொக்டர். M.C.M. கலீல், டி. பி. ஜாயா போன்றவர்கள் தமது ஆதரவை வழங்கி வாக்களித்தனர்.
இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு M.C..சித்தி லெப்பை, T.B ஜாய ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன. முஸ்லிம் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களை, தெரிந்து கொள்வதில் ஆர்வமின்மை காரணமாக அதுபற்றித் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது சுதந்திரத்துக்காக உயிர்நீத்த,போராடிய முஸ்லிம் தலைவர்களுக்கு நாம் செய்து வரும் வரலாற்றுத் துரோகமாகும். தேசிய தினம் இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்றாகும்
ஒரு நாட்டின் சனத்தொகையில் மூன்றாவது ஸ்தானத்திலிருந்த ஒரு சிறுபான்மை சமூகத்தினர், தமது எண்ணிக்கையின் பலவீனத்தை நீக்கி ஒரு பலமுள்ள, சக்திவாய்ந்த, அரசியல் அந்தஸ்துள்ள ஒரு சமூகமாக மாறினர் என்பதே இலங்கை முஸ்லிம்களின் வரலாறாகும்.
இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் செயற்பட்ட முக்கிய அமைப்பாக இலங்கை தேசிய காங்கிரசைக் குறிப்பிடலாம். இலங்கை தேசிய காங்கிரசானது இலங்கை மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரித்தானிய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செயற்பட்ட இலங்கையிலுள்ள அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஓர் இயக்கமாகும். இந்த இயக்கம் ஆரம்பம் முதலே இலங்கையர்களுக்குத் தேவையான அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களை, குறிப்பாக அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாகவும், கோரிக்கையாகவும் முன்வைத்து வந்தது.
ஆனால் காலம் செல்லச் செல்ல இந்திய தேசிய காங்கிரஸின் செல்வாக்குக் காரணமாக பிரித்தானிய அரசுக்கு எதிராக சில கிளர்ச்சிகளையும், பூரண சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கை தேசிய காங்கிரஸ் முன்வைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து பூரண விடுதலையை இறுதி வரை கோரி நின்ற அனைத்து இயக்கங்களையும் உள்ளடக்கிய ஓர் இயக்கமாக இலங்கை தேசிய காங்கிரஸ் அமைந்திருந்தது.
இலங்கை தேசிய காங்கிரசின் செயற்பாடுகளுக்கு பெரும்பான்மை சமூகத்தைப் போன்று சிறுபான்மை சமூகங்களினதும் பங்களிப்பு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். தேசிய காங்கிரசின் முதலாவது தலைவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் அருணாச்சலம் ஆவார். அதுபோலவே முஸ்லிம் தலைவர்கள் பலரும் இலங்கை தேசிய காங்கிரசின் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பாடுபட்டுள்ளனர். முஸ்லிம்கள் தேசிய காங்கிரசின் வேலைத்திட்டங்களை முழுமையாக ஆதரித்தனர். முஸ்லிம் சமூகத்தின் அப்போதைய பிரபல்யமான தலைவர்களான டீ. பி. ஜாயா, எஸ், எல். நைனா மரிக்கார், எம். காசிம் இஸ்மாயில் டீ. பி. சாபார், எம். கே. சல்டீன் போன்றவர்கள் தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர்.
இலங்கை முஸ்லிம்களின் அப்போதைய அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களில் தனது முழுமையான பங்களிப்பைச் செய்து வந்த சங்கமாக இலங்கை முஸ்லிம் சங்கம் காணப்பட்டது. இச்சங்கம் இலங்கை தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது அதனுடன் இணைந்து கொண்டது. அக்காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட எல்லா இயக்கங்களிலும் கல்வி கற்ற, சொத்துடைய, உயர் அந்தஸ்துடைய குடும்பங்களின் அங்கத்தவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். முஸ்லிம் சங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல.
1919 – 1930 காலப்பகுதியில் குறிப்பிட்ட சில முஸ்லிம்களே தேசிய காங்கிரஸின் பிரதான பதவிகளில் இருந்தனர். இவர்களுள் டீ. பி. ஜாயா குறிப்பிடத்தக்கவர். 1925ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி டீ. பி. ஜாயா இலங்கை தேசிய காங்கிரசின் உப தலைவராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். அதே போல் மற்றுமொரு முஸ்லிம் தலைவரான ரியால் முகம்மத் தேசிய காங்கிரசின் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அளவுக்கு காங்கிரசில் செல்வாக்குப் பெற்றிருந்தார். மேலும் காசிம் இஸ்மாயில், நைனா மரிக்கார் போன்றவர்களும் தேசிய காங்கிரசின் பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான செயற்பாடுகளில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இலங்கை தேசிய காங்கிரஸ் காலத்துக்குக் காலம் பிரித்தானிய அரசு வழங்கிய அரசியல் யாப்பு சீர்திருத்தங்களில் திருப்தி கொள்ளாது கிளர்ச்சி செய்த போதெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் அவர்களோடு இணைந்து செயற்பட்டனர்.
டீ. பி ஜாயா இலங்கை தேசிய காங்கிரசில் பிரபலமான தலைவராக இருந்தார். காங்கிரசின் தீர்மானங்களை சட்ட சபையில் பேசக் கூடியவராக அவர் இருந்தார். 1926ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி தேசிய காங்கிரசின் தலைமைப் பதவிக்காக ஜாயாவின் பெயர் முன்மொழியப்படும் அளவுக்கு ஜாயா காங்கிரசில் செல்வாக்குப் பெற்றிருந்தார். முஸ்லிம்களுக்கும், இலங்கை தேசிய காங்கிரசுக்கும் இறுதிவரை மிக நெருக்கமான உறவு இருந்து வந்தது. அக்காலத்தில் இருந்த முஸ்லிம்களின் பிரதான அரசியல் இயக்கங்களான முஸ்லிம் லீக் மற்றும் இலங்கை சோனகர் சங்கம் என்பன தேசிய காங்கிரசுடன் இணைந்து தமது பங்களிப்பை வழங்கி வந்தன.
1919 – 1930 காலப்பகுதியில் இலங்கை தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம்கள் காங்கிரசின் கோரிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இனவாரிப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் முஸ்லிம்கள் அதிகமாக சட்ட நிரூபண சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர். இக்காலத்தில் மாக்கான் மாக்கார், டீ. பி. ஜாயா, அப்துல் காதர் போன்றவர்கள் முஸ்லிம்கள் சார்பாக சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்தனர். டொனமூர் ஆணைக்குழுவினர் இலங்கைக்கு வந்த போது இலங்கையின் பிரதான தலைவர்கள் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தனர். சிங்களத் தலைவர்கள் ஆணைக்குழுவிடம் இனவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கோரினர். ஆனால் முஸ்லிம் தலைவர்கள், இனவாரிப் பிரதிநிதித்துவத்தையே விரும்பினர்.
இவ்வகையில் சுதந்திரத்துக்கு அண்மித்த காலப் பகுதியில் அதாவது 1942இல் தேசியவாதம் தொடர்பில் முஸ்லிம்களின் மனோபாவம் மாறத் தொடங்கியது. இவ்வாண்டு ஏ.ஈ. குணசிங்கவின் பதவியிறக்கத்தின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்காக நடத்தப்பட்ட உப தேர்தலில் சிறு எண்ணிக்கை வித்தியாசத்தில் டாக்டர் எம்.சி.எம். கலீல் மத்திய கொழும்பு ஆசனத்திற்கு தெரிவானமை அரச சபையில் முஸ்லிம்களின் பலத்தை அதிகரித்தது. அதுவரை நிறைவேற்று அங்கத்தவராக இருந்த சேர். ராஸிக் பரீத் கல்வி தொடர்பான செயற்குழுவிற்கு 1942இல் மாறினார். அத்துடன் ஏற்கனவே அந்த செயற்குழுவில் இருந்த ஜாயாவுடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டாகியது. முஸ்லிம்கள் தேசிய காங்கிரசுடன் இணைந்திருந்தாலும் அவர்களை பாதித்த சில தீர்மானங்களை எதிர்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
காலனித்துவத்திலிருந்து இந்நாடு விடுதலை பெறுவதற்காக முஸ்லிம் தலைவர்கள் அயராது உழைத்துள்ளனர். உதாரணமாக 1944ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சோல்பரி ஆணைக்குழுவின் வெள்ளை அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது “இந்நாட்டின் சுதந்திரம் தொடர்பாக முஸ்லிம்கள் இனவேறுபாடுகள் இன்றி மிகவும் கரிசனையுடன் இருந்திருக்கின்றார்கள். அதுதான் முஸ்லிம்களின் கடமையாகவும் உள்ளது. நாட்டு நலனே முன்னிலை பெற வேண்டும்” என்று ஜாயா குறிப்பிட்டார். சோல்பரி ஆணைக்குழுவின் அரசியல் திட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் மக்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைத்த போது முஸ்லிம்களும் அதிகமாக அது தொடர்பான கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களுடைய அபிப்பிராயங்களை முன்வைத்தனர். 1946ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் சோல்பரி அரசியல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு டி. எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியாக மாற்றமடைந்தது. முஸ்லிம்களும் இக்கட்சியில் இணைந்து இந்நாட்டின் விடுதலைக்காக உழைத்தனர். இது தொடர்பாக டி.பி. ஜாயா உரையாற்றும் போது,“முஸ்லிம்கள் இலங்கையின் அரசியல் சுதந்திரத்தை மட்டுமே கருதிச் செயற்பட்டனர். இதனால் இந்நாட்டில் ஏற்படவுள்ள சாதகமான விளைவுகளுக்காக அவர்கள் தம்மை தியாகம் செய்கின்றனர். இதுவே அவர்களது பணியாகும். இந்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடும் எந்த இயக்கத்துடனும் அவர்கள் சேர்ந்து செயற்படுவது அவர்களது பொறுப்பாகும். இந்நாட்டின் பெரும்பான்மைத் தலைவர்கள் அரசியல் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் சுதந்திரத்தின் அர்த்தத்தில் நாங்களும் கவனம் செலுத்துகிறோம்” என்றார். இவ்வாறு முஸ்லிம்கள் இலங்கையின் சுதந்திரத்துக்காக போராடிய தேசிய காங்கிரசுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கினர். 1947 இல் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றது. இதில் முஸ்லிம் தலைவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
1945ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் திகதி ‘ஸ்ரீ லங்கா மசோதா’ சபையில் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட சமயம், ஒரேயொரு காரணத்துக்காகத்தான் இம்மசோதாவை ஆதரிப்பதென சபையிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் முடிவெடுத்தனர். இம்மசோதாவுக்கு சபையில் 26 பேர் சார்பாகவும் 3 பேர் எதிர்த்தும் இன்னும் 6 பேர் வாக்களிக்க மறுத்ததோடு மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது. அனைத்து முஸ்லிம் அங்கத்தவரும் அதனை ஆதரித்தனர். வரலாற்று முக்கியத்துவமிக்க சோல்பரி ஆணைக்குழுவினரின் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பின் டி.பி. ஜாயா, சேர் ராஸிக் பரீத் இருவருமே சார்பாக பேசினர். டி.பி. ஜாயா தனதுரையில் ‘ஆரம்பத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று குதூகலிக்கவோ, ஆர்ப்பரிக்கவோ, ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டவோ உரிய நேரமல்ல. சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்பட்ட அநீதியையோ அல்லது பெரும்பான்மையின சமூகத்தின் வெற்றியைப் பற்றியோ நான் கூறவில்லை”. அவர் தனக்கு கிடைத்த முஸ்லிம் லீக்கின் ஆதரவு பற்றி குறிப்பிட்டு சோல்பரி ஆணைக்குழுவின் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார். இலங்கைக்கு முழுமையான டொமீனியன் அந்தஸ்து கிடைப்பதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்வது பற்றியும் குறிப்பிட்டார்.
மேலும், அவர் பேசுகையில் ‘என்னைப் பொறுத்தவரை நான் முஸ்லிம் இன அங்கத்தவர்களின் முழுமையான ஆதரவுடனேயே பேசுகிறேன். இந்த முக்கியமான விவாதத்தைப் பற்றி இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் வாழும் முஸ்லிம்களினதும் கருத்துக்களை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முஸ்லிம் லீக் பெற்றுக்கொள்ளச் செய்திருக்கிறேன். அதனால் இந்த சபையில் உள்ள முஸ்லிம் அங்கத்தவர்களுக்கு இந்நாட்டின் முஸ்லிம் மக்கள் அனைவரினதும் ஆதரவு இருப்பதை தெரிவிக்கக் கூடிய நிலையில் நான் இருக்கிறேன்”
‘ஸ்ரீ லங்கா மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த சபையின் முஸ்லிம் அங்கத்தவர்கள் ஒரே முடிவை எடுக்கத் தீர்மானித்தது ஒரேயொரு காரணத்துக்காக மட்டுமே, அதாவது இந்த நாட்டின் அரசியல் சுதந்திரத்தை கருத்திற் கொண்டேயாகும். இந்த சுதந்திரத்தை அடைவதற்காக எமது சமூகத்துக்கு கிடைக்க இருக்கும் அனுகூலங்களையும், நன்மைகளையும் நாம் தியாகம் செய்யத் தயாராய் இருக்கின்றோம் என்பதாகும்.
காலஞ்சென்ற பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்க இலங்கை சுதந்திரம் அடைவதற்கு டி.பி. ஜாயா ஆற்றிய பங்களிப்பை பின்வருமாறு சட்டசபையில் பாராட்டினார்.
“இந்நாட்டு மக்களில் பலதரப்பட்டோரிடையே தாராள நோக்கின் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர அங்கத்தவர் எவராலாவது முடிந்ததென்றால், அதுவும் தன் இனத்தவர் இழப்பிற்கு ஆளாகுவர் எனும் நிலையிலும் அவ்வாறு செய்வதென்றால், அதற்கான புகழ் எம் எல்லோரையும் விட எம்மிடையே உள்ள ஜாயாவையே சென்றடைய வேண்டும். அவர் இன்று சட்டசபையில் ஆற்றிய உரை இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும், சுதந்திரப் போராட்டத்துக்கு வலுவான தன்மையையும் கொண்டு வருவதில் பாரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.” எனப் புகழ்ந்து கூறினார்.
டி.பி. ஜாயாவுக்கு பிறகு பேசிய சேர் ராஸிக் பரீத் தேசிய விடுதலைக்கான தனது ஆதரவை மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அவர் தனது உரையில் “இந்த நாட்டில் வாழும் ஐந்து லட்சம் சோனகர்கள் , ஐம்பது கிளைகளாகக் கொண்ட அகில இலங்கை சோனக சங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் இன்று இந்த சபைத் தலைவரால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
அதனையும் சபைத் தலைவரின் பிரேரணைக்கான எனது முழு மனதுடனான ஆதரவையும் தெரிவிப்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தர முடியாது. நானும் எனது சமூகமும் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறோம். வெற்றி பெறும் இத்தருணத்தில் அவரோடு கை கோர்த்துக் கொண்டு டொமீனியன் அந்தஸ்தை நோக்கி நாம் முன்னேறத் தயார் என்பதைக் கூற விரும்புகிறேன்.” மேலும், அவர் பேசுகையில் முஸ்லிம்களின் வரலாற்றைக் கூறி விட்டு பின்வருமாறு கூறினார்.
‘சிங்கள சகோதர சகோதரிகளைப் போல, இலங்கை சோனகரும் இலங்கை தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர்கள் ஆவர். இத் திருநாட்டில், கடந்த பல நூற்றாண்டுகளாக சிங்கள மக்களும், சோனகரும் ஒற்றுமையுடனும், பரஸ்பர அன்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் பல தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். நான் அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை. இன்றைய அறிவு யுகத்தில் எந்தப் பிரச்சினையையும் நல்லெண்ணத்துடனும், ஒற்றுமையுடனும் நாம் அணுகினால் அதைத் தீர்க்க முடியும்.
எனவே எம்முடைய சினேகக் கரங்களை எம்முடைய சிங்கள சகோதரர்களுக்கு நீட்டுகிறோம். அத்துடன் தமிழ் இனத்தவரும், நாம் இவ்விடயத்தில் சிங்கள இனத்தவருடன் இணைந்து உறுதியாக நின்றது சரியான செயலே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. டொமீனியன் அந்தஸ்தை வேண்டி நிற்கும் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு நாம் பக்கபலமாக இருக்கிறோம். எனவே, சிங்கள, தமிழ், சோனகர் ஆகிய நாம் எல்லோரும் டொமீனியன் அந்தஸ்தை நோக்கி முன்னேறி ‘பிரித்தானிய கொமன் வெல்த்’ நாடுகளின் சங்கத்தில் ஓர் அங்கத்தவராக, எமது தாய்த்திரு நாடாம் இலங்கையைப் பெருமையுடன் வீற்றிருக்கச் செய்வோமாக” என்று கூறி சேர் ராஸிக் பரீத் தனது உரையை முடித்தார்.
இலங்கை தேசிய சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது சில முஸ்லிம் தலைவர்கள் அதில் இணைந்து கொள்வதை தவிர்த்தனர். ஆனால் பிற்காலத்தில் நாட்டின் நலன் கருதி இணைந்து கொண்டனர். 1945ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழுவின் முன்மொழிவை அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 1945 ஆம் ஆண்டு டீ. எஸ் சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியை ஆரம்பித்த போது, தேசிய சங்கத்தில் இருந்து பல உறுப்பினர்கள் அக்கட்சியில் இணைந்து கொண்டனர். அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைவரும், இலங்கை முஸ்லிம் சங்கத்தின் தலைவருமான டீ. பி. ஜாயாவும் இணைந்து கொண்டார். மேலும் இலங்கை சோனகர் சங்கத் தலைவரான ஏ. ஆர். ராசிக்கும் தேசிய தலைவர்களுடன் இணைந்து கொண்டனர்.
எனவே, சுதந்திரப் போராட்ட காலப் பகுதியில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேசிய நீரோட்டததில் இணைந்து செயலாற்றினர் என்றே கூறலாம். 1919 முதல் 1947 வரையிலான காலப்பகுதியில் ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கியமான முஸ்லிம் தலைவர்கள், இலங்கை தேசிய சங்கத்தில் இணைந்து பணியாற்றினர். முஸ்லிம்கள் எப்போதும் சமாதானத்தை, அமைதியை விரும்பிய ஒரு சமூகமாகவே இருந்து வந்துள்ளனர்.
இக்பால் அலி