2008 ஆம் ஆண்டில், நாட்டின் மிகவும் நெரிசலான நகரங்கள் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் குழு நடத்திய ஆய்வில் கண்டி மிகவும் நெரிசலான நகரம் என்பது தெரியவந்தது. மாலையில் ஊருக்குள் நுழைந்து வெளியேற ஒரு மணி நேரத்திற்கும் மேல் செலவாகின்றது எனத் தெரியவந்தது.
ஆனால் அப்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் காரணமாக அது தொடர்பில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் மீண்டும் 2011இல், மொரட்டுவைப் பல்கலைக்கழகமும் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில், கண்டியில் சராசரியாக ஒரு வார நாளில் சுமார் 365,000 பேர் (ரயில்கள் தவிர்த்து) நகருக்குள் நுழைந்து வெளியேறுவதோடு, அதில் 58 வீதத்துக்கு அதிகமானோர்கள் பயன்படுத்துவது பொதுப் போக்குவரத்து சேவை என்பது அறியப்பட்டது.
மேலும், 5000க்கும் மேற்பட்ட பஸ்வண்டிகள் நகருக்குள் நுழைவதும், அதே எண்ணிக்கையிலான பஸ்வண்டிகள் அங்கிருந்து புறப்படுவதும் அடையாளம் காணப்பட்டது.
கண்டி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க குட்ஷெட், போகம்பர, மணிக்கூண்டு கோபுரம் என பல இடங்களில் இருந்து தொடங்கும் அனைத்து பஸ் நிலையங்களையும் ஒருங்கிணைத்து புதிய பஸ்வண்டிகள் முனையத்தை அமைக்க வேண்டுமென, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன உலகிற்கு ஏற்ற பல்வகை போக்குவரத்து முனையமாக இது இருக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டது.
அத்திட்டத்தின் அடிப்படை திட்டமிடல் பணிகள் மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு ஆரம்பமானதுடன் பின்னர் 2016 ஆம் ஆண்டு மீண்டும் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையால் இது கண்டி பல்வகைமை போக்குவரத்து முனையம் (Kandy Multimodel Transport Terminal -KMTT) என்று அழைக்கப்பட்டு வேறான திட்டமாக திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் இலக்கை அடைய முடியாமையினாலும் கொவிட் தொற்று காரணமாகவும் நடவடிக்கை பாதிப்படைந்தது. எவ்வாறாயினும் நடவடிக்கைகளை மேலும் விரைவாக செயல்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் 2022 ஆம் ஆண்டு இந்நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டது.
அது கண்டி பல்வகைமை போக்குவரத்து முனைய அபிவிருத்தி திட்டத்தின் (KMTTDP) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி திட்ட மதிப்பீட்டின்படி அபிவிருத்தி திட்டத்திற்கு 3000 கோடி ரூபா கடன் உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் படி இத்திட்டத்தின் முகாமைத்து நடவடிக்கைகள் அனைத்தும் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ பிரிவால் மேற்கொள்ளப்படுகின்றது .
வீதி அபிவிருத்தி அதிகார சபையால் திட்டத்தின் அனைத்து நிதிச் செயற்பாடுகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு நிர்மாண பணிகளை மேற்கொள்வதற்காக(MAGA) கட்டட ஒப்பந்த நிறுவனதுக்கு 25,000 மில்லியன் ரூபா ஒப்பந்தப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் ஆலோசனை நிறுவனமாக RoughtonMG Consultant மற்றும் ECL ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.
திட்டத்தின் ஆரம்பமாக 2024 ஜனவரி பரிந்துரைக்கப்பட்டதோடு அதனை பூர்த்தி செய்யும் காலம் 2026 டிசம்பர் மாதம் ஆகும்.
அதன்படி, பணிகள் ஜனவரி 27, சனிக்கிழமை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய பயிற்சி முகாமையாளர் பெய் டெங், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், ரஞ்சித் ரூபசிங்க மற்றும் பல அதிகாரிகள் பலரின் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த போக்குவரத்து முனைய திட்டத்தை நிறுவுவதன் மூலம், ஒரு நாளைக்கு கண்டிநகருக்கு வருகை தரும் 5000 வாகனங்களுக்கும் அதிகமான மற்றும் 365,000 அதிகமான பயணிகளின் பிரச்சினைக்கும் தீர்வு கிட்டுமா?
இது தொடர்பில் கண்டி பல்வகைமை போக்குவரத்து முனைய அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் ஆர். எம். எஸ். ஜே. பி. ரத்னாயக்கவிடம் வினவிய போது,
“கண்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. குறிப்பாக நகரின் மையப்பகுதியில் உள்ள ரயில் நிலையம், பிரதான பஸ் நிலையம், முக்கிய நெடுஞ்சாலைகள் என பல இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும்போது நாளுக்கு நாள் இந்த நிலை மோசமாகி வருகிறது. – பாடசாலைகளுக்கு வரும் பாடசாலை வேன்கள் காலை 7:00 மணியளவில் வந்து பாடசாலைக்கு அருகாமையில் வந்தும் குழந்தைகளை 7:30 மணிக்குப் பிறகு பாடசாலையில் சேர்க்கின்றன.
எனவே, ரயில் நிலையம் அருகே உள்ள குட் ஷெட் பஸ் நிலையம் தற்போது தற்காலிகமாக அகற்றப்பட்டு, அந்தப் பகுதி முழுமையாக இந்தத் திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திட்டமாக 9 நிலையங்களை பஸ் நிலையங்களாக அறிமுகப்படுத்தியுள்ளோம். கண்டி பல்வகைமை பஸ் முனையமாக குட் ஷெட் பஸ் நிலையம் முதலில் அமைக்கப்படும். கண்டியில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்வண்டிகளும் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே புறப்படும். அது மட்டுமல்ல. ரயில் நிலையம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல், குறிப்பாக கெப் வண்டிச் சேவைகள், முச்சக்கரவண்டிச் சேவைகள் அல்லது பிற போக்குவரத்துத் தேவைகளை வழங்குதல் இதன் நோக்கமாகும்
பஸ்களை ஒரே இடத்திற்கு கொண்டு வந்தால், போக்குவரத்து நெரிசல் தீருமா?
இது தொடர்பாக போக்குவரத்து துறை நிபுணர் சம்பத் சந்திரசேன அளித்த பதில்,
நகரில் அதிக வாகனங்கள் காரணமாகவே சன நெரிசல் ஏற்படுகின்றது. ஏனெனில் வாகனங்கள் குறிப்பாக பஸ் வண்டிகள் தேவையில்லாமல் நிறுத்தப்படுகின்றன. இந்த நிலைமைகளுக்கு ஒரு தீர்வாக, அனைத்து பஸ் பயணங்களையும் ஒரே இடத்தில் இருந்து தொடங்குவது ஒரு தீர்வாகும்.
அதன்படி, எந்தப் பஸ்ஸையும் முனையத்தின் தொடக்க இடத்தில் (Bus Bay) 10 நிமிடங்கள் மட்டுமே நிறுத்த முடியும். தொலைதூர பயண சேவைகளுக்கு இடையேயும் எந்த வித்தியாசமும் இல்லை. 10 நிமிடங்களுக்குள், எந்தப் பஸ்வண்டியும் பயண முனைய தொடங்கும் இடத்திலிருந்து புறப்பட வேண்டும். முனையத்திற்கு வரும் ஒரு பஸ் வண்டி திரும்பும் பயணத்தை ஒரு மணித்தியாலத்துக்குள் தொடங்கினால் மட்டுமே நிறுத்த முடியும். பஸ் வண்டி ஒரு மணி நேரம் திரும்பிப் பயணிக்க வேண்டியிருந்தால், பஸ் வண்டி முனையத்திலிருந்து வெளி நிலையத்திற்குச் செல்லும். பஸ் வண்டி ஒரு மணி நேரம் இருக்கும் போதுதான் மீண்டும் பஸ் வண்டி முனையத்திற்கு வரவழைக்கப்படும். நெரிசலைக் குறைக்க இதுவும் ஒரு வழியாகும். மற்ற முறை டச் அண்ட் கோ என அறியப்படுகிறது. அதன்படி, கண்டிக்கு வரும் பல பஸ் வண்டிகளை கண்டிக்கு வெளியில் உள்ள 3 இடங்களுக்கு திருப்பி விடுகிறோம். இதன்படி, கெட்டம்பே, கட்டுகஸ்தோட்டை மற்றும் திகன வரை இந்த சேவைகள் நீடிக்கப்படவுள்ளன. பின்னர் அந்த பஸ்களில் இருந்து வந்து கண்டிக்கு அப்பால் பயணிக்கும் பயணிகளும் முன்னோக்கி பயணிக்க அதே பஸ்கள் பயன்படுத்தப்படும். இதனால் வாகன நெரிசல் குறையும்
மேலும், சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தையை இணைக்கும் வகையில் புதிய 200 மீட்டர் நீளமான வான் பாலம்(SKY BRIDGE) அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நெடுஞ்சாலை வழியாக இடமாற்றம் செய்வதை தவிர்க்கவும், மக்கள் விரைவாக செல்லவும் முடியும். கண்டி பொது வைத்தியசாலை மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அந்த மேம்பாலத்தில் இருந்து மிகக் குறுகிய காலத்தில் இலகுவாக பயணிக்கும் வகையில் அணுகு வீதிகள் அமைக்கப்படும்.
மேலும், குட்ஷெட் பஸ் நிலையத்தின் வழியாக செல்லும் முனைய உள் அணுகல் சாலை அமைப்பு மற்றும் நடுக் கால்வாய் ஆகியவையும் இந்த அபிவிருத்தியின் மூலம் புதுப்பிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட சக்கர நாற்காலிகளில் பயணிக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்படும்.”
இத்திட்டத்தை செயல்படுத்தும் போது ஐந்து காரணிகளின் ஊடாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் கீழ் பிரதானமானது மூன்று மாடி KMTT பிரதான கட்டடமாகும். பஸ் வண்டிகளை நிறுத்தும் கட்டடம். மேலும், ARCADE கட்டடம் முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான முகாமைத்துவ அமைப்பும் நாட்டு மக்களுக்கு வசதியாக இங்கு நிறுவப்பட்டுள்ளது.
மேலும், 150க்கும் மேற்பட்ட பஸ்வண்டிகளை நிறுத்துதல் – பஸ்வண்டிகள் மற்றும் பஸ்வண்டி பணியாளர்களுக்கு தேவையான சேவைகள், நிறுத்துமிட வசதிகள், இளைப்பாறும் இடங்கள், பெண்களுக்கான சிறப்பு பாதுகாப்பு வலயம், ஏனைய நிறுவனங்களின் போக்குவரத்து தேவைக்கான வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும்.
மேலும் இங்கு பயணிகள் நவீன பஸ்வண்டிகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், ரயில் தொடர்பான தகவல்கள் பல்வகைமை போக்குவரத்து முனையங்களில் இருந்து கிடைக்கும். அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம் ஆகியவை முனையத்திற்கு வரும் பஸ் வண்டிகளுக்கு நவீன தகவல் தொழில்நுட்பத்தையும், தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதனால் இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாரியளவிலான காணிகள் பாதிக்கப்படுவதுடன் புகையிரத ஊழியர்களின் குடியிருப்புகளும் இடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தற்காலிக இடவசதியும், நிரந்தரமாக குடியமர்த்த 7 மாடி கட்டடமும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த போக்குவரத்து முனையத்தின் நிர்மாணத்தின் பின்னர், பொது போக்குவரத்து மூலம் கண்டிக்கு வரும் பயணிகளின் சதவீதம் 60% ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டி நகருக்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதைக் காணமுடிகிறது. மேலும், தலதா மாளிகைக்கு முன்புறம் உள்ள சாலையின் ஒருபுறம் ஏரியும், மறுபுறம் குயின்ஸ் ஹோட்டலும் இருப்பதால் சாலையை எந்த வகையிலும் விரிவாக்கம் செய்ய முடியாது. புதிய பல்வடிவ போக்குவரத்து முனையத்தின் கட்டுமானத்தில் இந்த காரணிகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கு மேலதிகமாக கண்டி நகரின் மையப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஆரம்பத்தில் காணப்பட்ட போதும் தற்போது சுரங்கப்பாதைக்கு பதிலாக வான்வழிப்பாதை அமைக்க வேண்டுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரயில் பாதையை இரட்டை ரயில்பாதையாக உருவாக்கினால், அதிகரிக்கும் ரயில் சேவைகளுக்கு அமைய பல்வகைமை போக்குவரத்து முனையத்திற்கு வரும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கை நகரின் ரயில் கடவையில் நீண்ட நேரம் நிறுத்த வேண்டி நேரிடும். அதனால் பயன்கள் குறையலாம். அது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், அது இந்த திட்டத்திற்கு புறம்பாக இதற்கு இணைந்ததாக மேற்கொள்ளப்படும்.
தாரக விக்கிரமசேகர தமிழில் வீ.ஆர்.வயலட்