(கடந்தவாரத் தொடர் )
1951-/2022 காலத்தில் 15 நிரந்தரமானதும் வலிமையானதுமான எல்நினோ நிகழ்வுகள் ஏற்பட்டன என்பதை வரலாற்று ரீதியான பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வருடங்களில் இந்திய மொன்சூன் 8 வருடங்களில் பற்றாக்குறையாகவும், 3 வருடங்கள் மொன்சூன் மழைவீழ்ச்சி வழமைக்கு மாறாகக் குறைவாகவும், இருந்தது 2015 இல் நிகழ்ந்த எல்நினோ நிகழ்வில் இந்திய மொன்சூன் மழைவீழ்ச்சி 13 வீதம் குறைவாக இருந்தது. அத்துடன் விவசாய இழப்புக்களுடன் இணைந்த முறையில் வெப்பத்தாக்கத்தினால் 1500 பேர் இறந்தனர். இதே போன்று 1877 இல் மிக மோசமான மொன்சூன் பாதிப்பினையும் மழைவீழ்ச்சிக் குறைவினையும் இந்தியா எதிர்நோக்கியது. வரட்சியின் காரணமாக உருவாகிய பட்டினியினால் இந்தியாவின் பல பகுதிகளிலும் தலைவிரித்தாடிய பஞ்சத்தினால் 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். இந்தியாவில் இடம் பெற்ற மொத்த வரட்சிகளில் 50 சதவீதம் எல்நினோவுடன் தொடர்புபட்டதாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. NOAA வின் காலநிலை எதிர்வுகூறல்; மையத்தின் பிந்திய எதிர்வுகூறலின் படி 2024 இல் தீவிரமான எல்நினோ ஒன்று இப்பிராந்தியத்தில் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அம்சங்களை ஆராயும் போது தென்னாசியாவில் குறிப்பாக வங்காள விரிகுடாப் பகுதிகளில் வரட்சியும் மழையும் தவிர்க்க முடியாததாக உள்ளது. பிலிப்பைன்ஸ், கம்போடியா, ஊடாக ஊடறுக்கும் கீழலைகளின் தாக்கம் அராபியன் கடல் வரை ஏற்படுகின்றது. வட கீழ் மொன்சூன் காலம் இடிமின்னல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள காயல்பட்டினத்தில் டிசம்பரில் 24 மணித்தியாலத்தில் 95 சென்ரிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது. திருநெல்வேலி மாவட்டம் அதன் வழமையான சராசரி மொன்சூன் மழைவீழ்ச்சியை விட ஒக்டோபரில் இருந்து 135 சதவீதம் அதிகமான மழைவீழ்ச்சியைப் பெற்றது. தமிழ்நாட்டில் வருடாந்தம் பதிவு செய்யப்படும் மழைச்சியில் ஏறக்குறைய 48 சதவீதம் ஒக்டோபர் – டிசம்பர் காலத்தில் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டிசம்பர் இறுதியில் இடம் பெற்றது போன்று ஜனவரி முதல் வாரத்திலும் மழைவீழ்ச்சிக்கான வாய்ப்புக் காணப்பட்டது. டிசம்பர் இறுதியில் அவுஸ்திரேலியாவிலும் கடும்மழைவீழ்ச்சி எல்நினோவின் தாக்கத்தினால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பொங்கலுக்கு முன்னர் இடம்பெற்ற தாழமுக்க நகர்வுகள் தென்சீனக் கடலின் ஊடாகவே வந்துள்ளதைக் காணமுடிகின்றது. 2023 டிசம்பர் 4 இல் ஏற்பட்ட புயலின் மிகக் கடுமையான பாதிப்பினை ஒளிப்படம் காட்டுகின்றது.
மாடன் – யூலியன் ஊசலி (MJO – Maddan Julian Oscillation) என்பது 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டது. வாராந்த அல்லது மாதரீதியிலான அளவுதிட்டங்களில் அயன வானிலையில் காணப்படும் பிரதான தளம்பல்களை இது குறிக்கும். மத்தியகோட்டுப் பகுதியில் கிழக்கு நோக்கி நகரும் மழைவீழ்ச்சி மற்றும் முகில் துடிப்புக்களைக் கொண்டிருப்பதுடன் ஒவ்வொரு 30 தொடக்கம் 60 நாட்களுக்கு ஒரு முறை இடம்பெறும். மொன்சூன் பருவக்காற்றில் இடம்பெறும் 38 தொடக்கம் 80 வீதம் வரையான மழைவீழ்ச்சி மாறுதன்மை இந்த மாடன் – யூலியன் ஊசலியுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்காக 60 நாள் சுழற்சியைக் கொண்ட பருவகால மழைவீழ்ச்சிக்கு முக்கியம் பெற்ற இந்த மாடர்ன் – யூலியன் ஊசலி அதன் இரண்டாவது கட்டத்தில் இந்தியக் கடலுக்கு நகர்ந்தமை காரணமாகவே மழைவீழ்ச்சி பெரு நிகழ்வாக மாறியது. அதனுடன் றொஸ்பி அலைகளின் தாக்கமும் காணப்பட்டதனால் ஜனவரி பொங்கல் வரையும் இந்தியாவின் டெல்டா மாவட்டங்களுக்கு மழை தொடர்ந்து காணப்பட்டது.
புவியின் வெப்பநிலை அதிகரிப்பதனால் 2023 அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகக் கருதப்பட்டது. பூகோள வெப்பநிலை 1.50 C ஆக உயர்வடையும். இதற்கு காபனீரொட்சைட்டு 440 ppm ஆக உயர்ந்து காணப்படுவதே காரணமாகும் என அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் கூரியன் என்பவர் குறிப்பிட்டார். காயல்பட்டினத்தில் ஒரு வருடம் இடம்பெறும் மழை ஒரு நாளிலேயே கிடைத்துள்ளது. புவி வெப்பத்தினைக் குறைக்காவிட்டால் இத்தகைய கடுமையான மழைவீழ்ச்சி மட்டுமின்றி வரட்சியும் ஏற்படும். காலநிலை மாற்றத்தின் காரணமாக பசுபிக் பெருங்கடலில் வலிமைமிக்க எல்நினோ நீடித்திருப்பதுடன் மேற்காவுகை சுமாத்திராப் பகுதி காற்றுச் சுழற்சியாக நகர்ந்து இந்தியப் பெருங்கடலிலுள்ள காற்றுச் சுழற்சியுடன் இணைந்து மழைப்பொழிவைக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தாக்கத்தினால் சனவரி 20ஆம் திகதி வரை நிலவக்கூடிய பருவமழையின் தாக்கத்துடன் வடகிழக்கிலிருந்து வரும் குளிரலையின் தாக்கமும்; ஒருங்கிணைந்து காணப்படும்.
எல்நினோ நிகழும் காலங்களில் மொன்சூன் மீது இந்து சமுத்திர இருமுனைவு (IOD) தாக்கத்தின் செல்வாக்கு காணப்படும். இத்தாக்கம் எதிர்க்கணிய மட்டத்தினைக் கொண்டிருக்கும் போது இந்திய உப கண்டத்தின் மேலாக மொன்சூன் தாழியின் உருவாக்கத்தினை அது தடை செய்து விடுவதுடன் மழைவீழ்ச்சியையும் குறைந்துவிடும். இருமுனைவுத் தாக்கம் நேர்க்கணியமாக இருக்கும்போது அதிக மழைப்பொழிவு காணப்படும். இது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அதி தீவிர மழைவீழ்ச்சி நிகழ்வுகளை அதிகரிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. எல்நினோ என்பது சாதாரண நிலைமைகளில் காணப்படும் ஈரப்பதன் நிரம்பலில் இடையூறுகளை ஏற்படுத்தி விடுவதுடன் சில இடங்களில் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்குகளுக்கும் காரணமாக அமைகின்றதுடன் சில பகுதிகளில் மோசமான வறட்சியையும் ஏற்படுத்தி விடுகின்றது. எதியோப்பியா, குவாட்டமாலா, சோமாலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏற்படும் வரட்சியின் பாதிப்புகள், வெள்ளப்பெருக்கு, புயல்கள் மற்றும் தீயினால் ஏற்படும் இத்தகைய வானிலை மாற்றங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
டிசம்பர் 3 இல் 48 மணித்தியாலத்தில் 46 சென்ரி மீற்றர் மழை சென்னையில் இடம்பெற்றது. வெள்ள நீரினைக் கொண்டு செல்வதற்கு மூன்று ஆறுகளும், பக்கிங்காம் கால்வாயும் இருந்தபோதும் பெரும் வெள்ளப்பெருக்கு சென்னையில் ஏற்பட்டது. 1960 களிலிருந்து விரைவான நகராக்கம் மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சி காரணமாக நீர்நிலைப் பகுதிகளில் பேரழிவு இடம் பெற்றது. 1989 – -– 2016 காலத்துக்கு இடையில் சென்னை மாநகர அபிவிருத்தி அதிகாரசபை 175 ஹெக்டயர் பரப்பளவு கொண்ட 195 குடியிருப்புகளை 54 நீர்நிலைப் பகுதிகளில் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. பொருத்தமான கண்காணிப்புப் பொறிமுறை இல்லாத காரணத்தினால் இதன் தொகை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
சென்னையின் பெருந்துயரம் என்னவென்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அண்மையில் ‘ரம்சார்’ பகுதியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 5500 ஹெக்டயர் பரப்புக் கொண்ட இப்பகுதி அதன் மொத்த அளவில் இன்று 10 சதவீதத்தையே கொண்டுள்ளது. இதன் அழிவுக்கு OMR இல் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப இடைநிலமே (IT Corridor) காரணமாக இருந்தது. சதுப்பு நிலம் என்பது நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. ஆனால் அத்துமிறல்கள் மற்றும் சாக்கடைகளின் உட்பாச்சல் காரணமாக அதன் இயல்பு மாறிவிட்டது. அரசாங்கமும் குப்பைகளைக் கொட்டும் இடமாக 81 ஹெட்டேயர் நிலப் பகுதியை மாற்றிவிட்டது. வேளாச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி, பேரம்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற வாழிடக் குடியிருப்புக்கள் இந்தச் சதுப்பு நிலப் பகுதிகளிலும் அதனையடுத்த பகுதிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மொன்சூனுக்கு முன் பக்கிங்காம் கால்வாய் ஆழமாக்கப்பட்டிருந்தால் வெள்ள நீரின் கொண்டுசெல்லும் திறன் அதிகரித்திருக்கும். இக்கால்வாய் அமைக்கப்பட்ட போது அது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 அடி ஆழமாக இருந்தது. இன்று மணல் தடைகள் காரணமாக 3 அடி ஆழமாகவே காணப்படுகிறது. நீர் நிலைகள் காணப்படும் பகுதிகளில் சேரிகளின் எண்ணிக்கை 2014 இல் 235 ஆக இருந்தது. 2018 இல் 451 ஆக அதிகரித்தது. இதற்கு அரசின் மோசமான வீடமைப்புக் கொள்கையே காரணமாக இருந்தது.
நாசாவின் சூரிய இயக்கவிசையியல் ஆய்வு கூடம் (NASA’S Solar Dynamics Observation) தொடர்ச்சியாக சூரியனில் இடம்பெறும் நிகழ்வுகளை அவதானித்து அவற்றினைப் படிமமாக எடுத்து வருகின்றது. 2023 மார்ச் 28 இல் சூரிய சக்தியில் ஏற்பட்ட ஆற்றல் மிக்க வெடிப்பு ஒன்றினால் சூரியனிலிருந்து மிக வலிமையான நெருப்புச் சுவாலையொன்று வெளியே வீசப்பட்டது. அண்மைக்காலமாக சூரியனின் செயற்பாடுகளில் உறுதியான அதிகரிப்பு ஏற்பட்டு வருவதுடன் சூரிய வட்டம் 25 என்று கூறப்படும் நிலையை நோக்கி நகர்ந்து வருவதையும் அவதானிக்கலாம். ஏறக்குறைய 115 சூரியப் புள்ளிகளைக் கொண்ட சூரிய சக்தியின் உச்ச அளவு 2025 ஜுலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. சூரியனில் ஏற்படும் மின்காந்தப் புயலினால் ஞாயிற்று கதிர்வீசலில் மாற்றம் ஏற்படுவதுடன் மின்னல் தாக்குவது போன்று புவியை தாக்கும் என நாசாவின் பௌதிகவியல் விஞ்ஞானியான ரிச்சாட் பிஷ்சர் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயற்பாடுகளின் காரணமாக வளி வெப்பநிலை அதிகரிக்கும். எல்நினோவின் தாக்கங்கள் செறிவடையும். 2023 ஏற்பட்ட எல்நினோவின் தாக்கத்தினால் நீரியல் வட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் இடம்பெற்று வரும் வரட்சியினால் 21 மில்லியன் மக்கள்; உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். கொங்கோ ஆறு, நைல் நதியின் நீரேந்து பகுதி முழுவதிலும் நீரின் வெளியேற்றம் குறைந்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளின் காரணமாக உலக நீர் மட்டமானது பாதிக்கப்பட்டு வருகின்றது. இலட்சக்கணக்கான மக்களின் நீர்ப்பாதுகாப்பினைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்கான அச்சுறுத்தலாக இது அமையப் போகின்றது. புவி – வளிமண்டலத் தொகுதியில்; நீரின் சுற்றோட்டமானது காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளினால் குறிப்பிடத்தக்களவு தாக்கத்துக்கு உட்படும் என உலக வளிமண்டலவியல் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய நீரியல் வட்டப் பாதிப்பானது வரட்சிகளையும் அதிகளவு மழைவீழ்ச்சி நிகழ்வுகளையும் ஏற்படுத்துவதுடன் நீர் வட்டங்களின் ஒரு ஒழுங்கின்மைகளினால் வாழ்க்கைச் சுமை மற்றும் பொருளாதாரங்களில் பரந்தளவான குழப்பங்களைக் கட்டவிழ்த்து விடும். தற்பொழுது இடம்பெற்று வரும் பனியுருகலினால் அதி தீவிர வானிலை நிகழ்வுகள் குறிப்பாக வெள்ளப்பெருக்குகள் தூண்டப்படும். இவை இலட்சக்கணக்கான மக்களின் நீர்ப் பாதுகாப்பில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆட்டிக், அந்தாட்டிக் பிரதேசங்களைத் தவிர்த்து உலகின் பனிக்கட்டி மற்றும் மழைப்பனியின் தேக்கமாகக் கருதப்படும் ஆசியாவின் பனியுருகல் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகின்றது.
இதனால் இந்துஸ், அமுதாரியா, யாங்சி மற்றும் மஞ்சள் ஆறு போன்ற பிரதான ஆறுகளில் இடம்பெறும் இயற்கையான கீழ்நோக்கிய பாய்ச்சல் மாற்றத்துக்கு உட்படுகின்றது. ஆசியாவின் நீர்க் கோபுரம் என அழைக்கப்படும் இப்பகுதி தீபெத் பீடபூமி, இமயமலைப் பகுதி, காரக்கோரம், இந்துக்கூஸ், பமீர் மற்றும் ரியான்சன் மலைத்தொடர் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாவது முனைவுப் பகுதி எனக் கூறப்படுகின்றது. இப்பகுதியில் ஏற்பட்டு வரும் பனிக்கட்டியாற்று உருகலின் அதிகரிப்பினால் இரண்டு மில்லியன் மக்களுக்கு நம்பிக்கையாக நீர் வழங்கலை மேற்கொள்கின்றது. பிரதேச நீர் வழங்கலின் மீது காலநிலை மாற்றத்தின் செல்வாக்கு அதிகளவில் இடம்பெறுகின்றது. வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்புக் காரணமாக பனிக்கட்டியாறுகளும் பனிப்போர்வையும் பின்வாங்குவதன் காரணமாக நீர் வட்டம் பாதிக்கப்படுகிறது.
பனிக்கட்டியாற்று நிகழ்வுகள் தொடர்பான இடர்கள் இந்தியாவில் நன்கு தெளிவாகக் காணப்படுகின்றது. வடக்கு சிக்கிம் பகுதியில் 2023 ஒக்டோபர் 4ஆம் திகதி தென் லோனாக் ஏரியில் ஏற்பட்ட உடைப்பின் பின்னர் அழிவு தரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2000 -/ 2018 காலத்தில் இப்பகுதியிலுள்ள பனிக்கட்டி திணிவு முழுவதிலும் ஏறக்குறைய 4.3 வீதம் குறைவடைந்துள்ளது. இதனால் பனிப்போர்வையில் குறைவு ஏற்பட்டுள்ளதுடன் பனியுருகல் பருவமும் சுருங்கியுள்ளது. பனிக்கட்டி ஏரிகளின் எண்ணிக்கை, மொத்த பரப்பு, அவற்றின் கொள்வனவு என்பன அதிகரித்துள்ளதுடன் ஏரிகளின் மொத்தக் கொள்ளவும் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023 இல் அல்ப்ஸ் மலையில் பனிப் போர்வை கடந்த 30 வருட சராசியிலும் பார்க்கக் குறைவடைந்துள்ளது. போ நதியின் நீர்மட்டம் வழக்கத்துக்கு மாறாக ஏழு அடி குறைந்து உள்ளது. 2022 இல் இத்தாலியில் உள்ள 5 பிரதேசங்கள் மிக உயர்வான வரட்சித் தன்மை கொண்டனவாக மாறியுள்ளது. 2022 இல் பூகோள நீரேந்து பிரதேசங்களில் காணப்படும் நதி நீரின் வெளியேற்ற நிலைமைகளில் விலகல்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலுள்ள ஆறுகளில் கோடை காலப் பாய்ச்சல்களில் வெப்ப அலைகள், வரட்சி மற்றும் லா நினா காரணமாக வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. 2023 இல் எல்நினோ காரணமாக நீரியல் வட்டத்தில் தாக்கங்கள் ஏற்படும் நிலைமைகள் உருவாகியுள்ளன.
வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதனைக் கொண்டிருக்கும். இதனால் மிகக் கடுமையான மழை வீழ்ச்சியும், வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுகின்றன. வழக்கமாக இடம்பெற்று வரும் பருவகாலப் போக்குகளில் வளிமண்டல வெப்பநிலையின் அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். மின்னேற்றப்பட்ட துணிக்கைகளைக் கொண்ட ஓட்டங்களாக வரும் சூரியக் காற்று சூரியனின் வெடிப்பு ஏற்படும் பொழுது தீப்பிழம்பாக உருவாகும் மின்காந்த அலைகள் வெளியேறிச் செல்லும் பாதை பூமியை நோக்கியதாக இருந்தால் மட்டுமே பூமிக்கு பாதிப்பு ஏற்படும். பூமியை வந்தடையும் போது புவிக்காந்தப் புயலை உருவாக்கும்.
2012 ஜூலையில் இது போன்ற மோசமான சூரிய புயல் ஏற்பட்டு பெரும் அழிவை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக சூரியனின் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் இலங்கையில் உள்ள மக்கள் வெப்பத்தின் அதிகரிப்பை உணர்கின்றனர். முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கின்றது. 2023 மார்ச் 28 இல் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக பெரும் திணிவான நெருப்புப் பிழம்பு சூரியனிலிருந்து வெளியே வீசப்பட்டது. இதன் தாக்கம் காரணமாகவே வெப்பநிலை உயர்வு ஏற்பட்டு மக்களுக்குப் பாரிய பிரச்சினைகளைக் கொடுக்கின்றது. அது மட்டுமன்றி 2023 டிசம்பரில் இருந்து ஏற்பட்டு வரும் மோசமான வானிலை நிகழ்வுகளுக்கும் இவ்வளி வெப்பநிலையே காரணமாகும்.
கடந்த காலங்களைப் போலன்றி அதிக வெப்பத்தின் காரணமாக தாழமுக்க சுழற்சிகளும் மேற்காவுகை நிகழ்வுகளும் கீழ் அலைகளின் தாக்கமும் ஒன்று சேர்ந்து ஒரு சிக்கலான பொறிமுறையைத் தோற்றுவித்துள்ளது. பசுபிக்கின் மத்திய கோட்டுப் பகுதியில் உருவாகும் மாற்றங்கள் மேற்கு நோக்கி தாழமுக்க சுழற்சியாக நகர்த்தப்படுவதனால் அடிக்கடி இலங்கை மற்றும் தென்னிந்தியப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகள் பற்றி இலங்கை வளிமண்டலத் திணைக்களம் துல்லியமான எதிர்வுகூறலை மக்களுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையிலுள்ள 19 வானிலை எதிர்வுகூறல் முகவரகங்களில் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பிரதேச வளிமண்டலவியல் அலுவலகமும் ஒன்றாகும். இந்நிலையத்தினால் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை வளி வெப்பநிலை, அமுக்கம், ஈரப்பதன, படிவுவீழ்ச்சி காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை ஆகிய வானிலைத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இடர்மிக்க வானிலை நிலைமைகளைப் பொது மக்களுக்கு வழங்கும் பொறுப்பினையும் இந்நிலையம் கொண்டிருக்கின்றது. இலங்கைக்கான வானிலைத் தரவுகள் INSAT-3 D மற்றும் METEOSAT – 8 மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு நிபுணத்துவம் மிக்கவர்களினால் பகுப்பாய்வு செய்யப்படுவதனாலேயே வானிலை எதிர்கூறல் மிகத் துல்லியமாக இருக்கின்றது.
கலாநிதி எஸ். அன்ரனி நோர்பேட் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகம்