ஒரு அங்குல நிலத்தையேனும் தங்களுக்குச் சொந்தமாக வைத்திருக்க அனைவரும் விரும்புகிறார்கள். ஏனென்றால், நிலம் முக்கிய உற்பத்திக் காரணியாகும்.
அந்த வகையில் அது ஒரு சொத்தாக மாறுகிறது. ஆனால் குறித்த நிலத்திற்கு முழு உரிமையுடன் கூடிய காணி உறுதிப்பத்திரம் இருந்தால் மாத்திரமே அதற்கு சொத்துக்கு அப்பாற்பட்ட பொருளாதார ரீதியான பெறுமதி கிடைக்கிறது. இல்லாவிட்டால் நிலத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஜய பூமி, ஸ்வர்ண பூமி போன்ற காணி பெற்றவர்கள் அதற்கு வாழும் சாட்சியாளர்களாக உள்ளனர். இதுவரை தெரியவந்துள்ளபடி, 20 இலட்சத்துக்கும் அதிகமானோர், நிலம் இருந்தும், உறுத்திப்பத்திரம் இல்லாததால், பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களையும் கணக்கிட்டால், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்பது இரகசியமல்ல. மறுபுறம், சுதந்திரத்தின் பின்னர், இந்த காணி அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் முறையான திட்டம் எதுவும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த வகையில், பல தசாப்தங்களாக காணி உரிமை கிடைக்காத மக்களுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக முன்வைத்த 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் ஒரு காணியின் சட்டபூர்வ உரிமையாளர் என்ற கனவு நனவாகியது.
வலுவான எதிர்காலத்திற்கான முன்னோடி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 08 ஆவது பிரேரணையானது,
1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் மற்றும் நிபந்தனையுடன் கூடிய மானியப் பத்திரங்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள, அரச காணிகளின் முழு உரிமையை விவசாயிகளுக்கு வழங்கும். “உறுமய” திட்டத்தின் ஊடாக அது மக்களுக்கு வழங்கப்படும்” என்று குறிப்பிடுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஊடக நிறுவனத் தலைவர்களின் மத்தியில் உரையாற்றிய போது, இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தனியார்மயமாக்கல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்படி 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் இருபது இலட்சம் குடும்பங்களுக்கு முழு உரிமையுடன் கூடிய காணி உறுதிப்பத்திரங்களை அடுத்த சில வருடங்களுக்குள் வழங்குவதற்காக இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டு அப்பாவி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதன் மூலம், குறித்த காணிகளின் மீதான முழு உரிமையும் காணி உரிமையாளர்களுக்கே கிடைக்கும் என்பதுடன், விசேட பணியாக இதனை குறிப்பிடுவது மிகையாகாது.
பிரபுக்களுக்கு மாத்திரம் சொந்தமான காணி உரிமை
சிங்கள மன்னர் காலத்தில், நாட்டின் நிலம் முழுவதும் மன்னருக்குச் சொந்தமானது. குறித்த நபரின் சேவையின் தன்மை மற்றும் சாதிய படிநிலை ஆகியவற்றின் அடிப்படையில் மன்னர் நிலத்தை அனுபவிக்க அனுமதி வழங்கியிருந்தார். அங்கு பிரபுக்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மாத்திரமே நிலத்தை அனுபவிக்கும் அடிப்படை உரிமை கிடைத்திருந்தது. சாமானியர்களுக்கு வாழ்வதற்கு நிலம் கிடைத்தாலும் மற்றும் அக்காலத்தில் மக்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களுக்கு நிலத்தின் மீது முழு உரிமை இருக்கவில்லை.
காலனித்துவ காலத்தில் இந்த நிலைமை மேலும் சிக்கலானது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள், பெருந்தோட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டப் பொருளாதாரத்தை உருவாக்கியது. 1833இல் அமுல்படுத்தப்பட்ட கோல்புரூக் சீர்திருத்தத்தின் மூலம் அடிமைத்தனத்தை ஒழித்தமை, இலங்கையில் நில உரிமையின் திசையை மாற்றியது.
ஆனால் அதற்குப் பிறகு, பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்குத் தேவையான விளை நிலங்களைக் கையகப்படுத்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த ‘வேஸ்ட்லேண்ட் சட்டம்’ முதலியவற்றால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்படி, நிலத்தின் உரிமையை எழுத்துபூர்வமாக நிரூபிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலைமையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய மலையக மக்களே.
விக்கிரமசிங்க குடும்பத்திலிருந்து வந்த உறுமய (மரபு)
காலனித்துவ காலத்திற்குப் பிறகு, 1933இல் அரசுக்குச் சொந்தமான நிலத்தின் உரிமையை மாற்றுவதற்கான முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போதைய விவசாய அமைச்சர் டி.எஸ். சேனாநாயக அரசாங்கத்தின் காணி உரிமையை மக்கள் மயப்படுத்தும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், 1934இல் மின்னேரியா விவசாய மக்கள் இயக்கச் செயற்பாடுகளை ஆரம்பித்தார். அதற்கேற்ப, மக்களுக்கான நிலப் பகிர்வு தொடங்கியது. அந்த அரசாங்கத்தின் காணி ஆணையராக இருந்தவர் சி.எல். விக்கிரமசிங்க.சி.எல். விக்கிரமசிங்க. ரஜரட்ட விவசாய மக்கள் இயக்கத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார், மேலும் அப்போதைய டி.எஸ். சேனாநாயக்கவுக்கும் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நாட்டின் முதல் சிங்கள மாவட்ட செயலாளராக சி.எல். விக்கிரமசிங்க சப்ரகமுவ மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார். மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளில் ஒருவர் எட்மண்ட் விக்கிரமசிங்க ஆவார். இவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையாவார். விக்கிரமசிங்க பரம்பரை ஊடாகக் கொண்டு வந்த மக்கள் சேவைகள் மற்றும் பூர்வீக நிலத்தின் மீதான உரிமையை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யதார்த்தமாக்குகிறார்.
மக்களின் நில உரிமைக்கான தொடர் போராட்டம்
சுதந்திரத்திற்குப் பிறகு, டி.எஸ். சேனாநாயக்க மக்களுக்கு காணி வழங்கியதும், பின்னர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, நாட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதன் காரணமாகவே மகாவலி திட்டத்தையும் ஆரம்பித்தார்.
அதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் தேவையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தது. பல ஆண்டுகளாக காணி உரிமை இல்லாத மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட “ நில சிறப்பு ஏற்பாடுகள் சட்ட வரைவு” மூலம் அமெரிக்காவுக்கு நிலம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அந்த வேலைத்திட்டத்தை நிறுத்தத் தயாராக இல்லாத அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதை எதிர்த்தவர்களுக்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கக் கூடத் தயாராக இருந்தார்.
2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் சட்டப்பூர்வ உரிமையை அவர்களுக்கு வழங்க திட்டமிட்டது. ஆட்சியில் இரண்டு ஆண்டுகளே இருந்ததால், அப்போதும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதன் பின்னர் 2015 இல் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ஆவதற்கு வலுவான பங்களிப்பை வழங்கினார். ஆனால் அப்போதும், நாட்டின் நிலம் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்ற பொய்யை நிலைநாட்டி எதிர்க்கட்சிகள் அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தன.
“உறுமய” என்றால் என்ன?
அதன்படி, பல தசாப்தங்களாக, இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு காணி உரிமைப் பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் இதனுடன் வளர்ந்தது. நிலமற்ற மக்களுக்கு விவசாயம் செய்ய அரச நிலங்கள் வழங்கப்பட்டாலும், அந்த நிலங்களின் முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஸ்வர்ண பூமி, ரன் பூமி என வெவ்வேறு பெயர்களில் நிலமாற்றுச் சான்றிதழ்கள் மூலம் நிலத்தை அனுபவிக்கும் உரிமை பெறப்பட்டாலும், அந்த உரிமை முழு உரிமையாக இல்லாததோடு, நிலத்தின் பூரண உரிமை அரசிடமே இருந்தது.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் அரச காணிகளை அனுபவிக்கும் மக்களுக்கு அதன் பூரண உரிமை வழங்கும் வேலைத்திட்டம் “உறுமய” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சுமார் 20 இலட்சம் விவசாய குடும்பங்களை உத்தேச பயனாளிகளாக அவர்கள் அனுபவிக்கும் அரச காணிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதே உறுமய வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ், விவசாய தொழில் மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக நிலமற்ற விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 17 இலட்சம் உரிமங்களும் 12 இலட்சம் கொடுப்பனவுப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.
தற்போது, அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்கள் அவை வழங்கப்பட்ட நோக்கங்களுக்காக சரியாகப் பயன்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால், சுய விருப்பப்படி காணியின் சட்டபூர்வ அனுமதிப் பத்திரங்கள் அல்லது கொடுப்பனவுப் பத்திரங்களை அரசாங்கத்திடம் தாங்களாகவே ஒப்படைத்த பிறகு, “உறுமய” திட்டத்தின் கீழ் காணிக்கான முழு உரிமையுடைய உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, உறுமய திட்டத்தின் கீழ், காணியின் முழு உரிமைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 பிரதான கட்டங்களின் கீழ் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கு உரிய நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் “உறுமய” செயற்பாட்டு செயலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
“உறுமய” முதற்கட்டமாக 10,000 காணி உறுதிப் பத்திரங்கள்!
உறுமய வேலைத்திட்டம் 76 ஆவது சுதந்திர தின விழாவுடன் இணைந்த வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் உறுதிப் பத்திரங்கள் வழங்கும் தேசிய நிகழ்வு நாளை பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இது மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதன் அடையாளமாகும். ஜனாதிபதி எதிர்பார்த்தபடி, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகள் நிறைவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ், அரசாங்கம் வழங்கியுள்ள உரிமங்களை எந்தவித பிரச்சினையுமின்றி பேணிவரும் விவசாயிகளுக்கு உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும். பிரச்சினைகள் உள்ள அதாவது, குழந்தைகளுக்கு இடையில் பிரிக்க முடியாத, தகராறுகள் உள்ள, பெற்றோர்கள் மரணித்தல் போன்ற பிரச்சினைகள், குறைபாடுள்ள காணிகள் தொடர்பில் கிராம அளவிலான குழுக்கள் நியமிக்கப்பட்டு குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்ட பின், மூன்றாம் கட்ட உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் இறுதியாக உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
கண்ணீருக்கு முடிவு!
சுமார், நூறு வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் காணி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக உறுமய வேலைத்திட்டத்தை குறிப்பிடலாம். பல்வேறு உரிம முறைகளின் கீழ் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்ட போதிலும், மக்கள் தமக்கு முழு உரிமைகள் இல்லாத காரணத்தினால் காணி தொடர்பான விடயத்தில் மீற முடியாத பல நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டியிருந்தது. சில சமயம் நிலத்தை அடகு வைத்தும் வங்கிக் கடன் கிடைக்கவில்லை. அத்துடன் காணி தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு கிராம உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர் அல்லது பிரதேச செயலாளர் போன்ற அரச உத்தியோகத்தர்களின் பின்னாலேயே செல்ல வேண்டியிருந்தது.
உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக மக்கள் இந்த அடக்குமுறையில் இருந்து விடுபடுவதுடன், தமக்கு முழு உரிமை உள்ள காணி தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றனர்.
பொருளாதாரத்திற்காக செய்யப்படும் முதலீடு
நிலம் உற்பத்தியின் முக்கிய காரணியாகும். எனவே மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது நாட்டின் பொருளாதாரத்திற்கான முதலீடாக அமைவதுடன் மக்கள் சுதந்திரமான பொருளாதார செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாகவும் அமைகின்றது.
எனவே, நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையில் உள்ள வேளையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்களின் பங்களிப்பை உள்வாங்குவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதலாம். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கும் பாரிய வேலைத்திட்டத்தில் மக்களும் தங்களால் இயன்றளவில் பங்களிக்க முடியும்.
மேலும், நிலத்தை முறையற்ற முறையில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பதும், அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அந்த தவறை திருத்த ரணில் விக்கிரமசிங்க பணியாற்றியுள்ளார். எதிர்காலப் பொருளாதாரத்திற்கான மிக முக்கியமான ஜனநாயக முதலீடாக இதைக் குறிப்பிடலாம்.
அதன்படி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றிய மீட்பாளராக மட்டுமன்றி மக்களுக்கு பூர்வீக நிலத்தின் முழு உரிமையடைய காணி உறுதிப் பத்திரங்களை வழங்கிய தலைவராகவும் நவீன வரலாறு எழுதப்படவுள்ளது.
பாத்திமா சிஹானா