எமது தாயகத்தின் 76 ஆவது சுதந்திரதினத்தை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அந்நிய ஆட்சியாளரான ஆங்கிலேயரிடமிருந்து எமது இலங்கைத் தேசம் விடுதலை பெற்று 76 வருடங்கள் உருண்டோடி விட்டன.
ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய மூன்று நாட்டவர்களிடம் தொடர்ச்சியாக சுமார் நான்கரை நூற்றாண்டு காலம் எமது தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இம்மூன்று நாட்டவர்களும் இலங்கையின் வளங்களை இங்கிருந்து அள்ளிச் செல்வதற்காக எமது தேசத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இறுதி ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் 1948 ஆம் ஆண்டில் எமது நாட்டுக்கு சுதந்திரத்தை வழங்கினர். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்ட ஏனைய பல நாடுகள் பொருளாதாரரீதியில் பெரிதும் முன்னேற்றமடைந்து விட்டன. எமது தேசம் இன்னுமே பொருளாதார முன்னேற்றம் பெறவில்லை; இனஐக்கியம் மிகுந்த தேசமாகி விடவுமில்லை.
பொருளாதார பலம்மிக்க தேசமாக மாறுவதற்கு இன்னும்தான் நாம் போராடி வருகின்றோம். இனஐக்கியம் என்பது இன்னும் எட்டாத தொலைவிலேயே உள்ளது. இனஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு எமது நாட்டின் கடந்தகால ஆட்சியாளர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அம்முயற்சி கைகூடவில்லை.
இனஐக்கியம் நிலைபெறுவதானால் இதயபூர்வமான முயற்சிகள் அவசியம். அத்துடன் ஏனைய அரசியல் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால் கடந்த சுமார் ஏழு தசாப்த காலமாக நாம் ஐக்கியப்படாத சமூகங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலகின் பார்வையில் எமது தாயகம் இனமுரண்பாடுகள் மிகுந்த தேசமாகவே இன்றும் நோக்கப்படுகின்றது.
எமது அரசியல்வாதிகளில் பலர் இனமுரண்பாடுகளை தமக்கு சாதமாக வைத்தே தங்களது அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களிடையேயான முரண்பாடுகளுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளே காரணமாக அமைந்துள்ளதால், அப்பேதங்களை அரசியல்வாதிகள் பலர் கெட்டியாகப் பற்றிப்பிடித்தவாறு சுயநல அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி, தங்களது மதமே உயர்வானதென்ற சிந்தனை கொண்ட பலர் நம்மத்தியில் உள்ளனர். மற்றைய மதங்களை சமூக ஊடகங்கள் ஊடாக கேவலப்படுத்துகின்ற இழிவான குணமும் அவர்களிடம் காணப்படுகின்றது. சமூகங்கள் மதரீதியில் தங்களை தனித்துவமாக்கிக் கொள்ள முற்படுவதே இனரீதியான பிளவுக்குக் காரமாக அமைகின்றது.
எமது இலங்கைத் தாயகம் அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் சென்ற போதிலும் ஐக்கியம் இன்னுமே தோன்றவில்லை. உண்மையான சுதந்திரம் என்பது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தங்கியுள்ளது. பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கைத் தேசமானது நம் அனைவருக்கும் சொந்தமான தாயகநாடு என்ற சிந்தனையுடன் இனஒற்றுமையைக் கட்டியெழுப்ப இன்றைய நாளில் மக்கள் அனைவரும் திடசங்கற்பம் கொள்வார்களாக!