பாசிக்குடா அமயா ஹோட்டல் ரிசோர்ட்டில், சர்வதேச அபிவிருத்திக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி (USAID) மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) என்பன இணைந்து நடத்திய Sustainable Niche Tourism Learning Expo ஐ சுற்றுலாத் துறையில் உள்ள சிறு வணிக நிறுவனங்களும் சுற்றுலாப் பங்குதாரர்களும் பாராட்டியுள்ளனர்.
“இது உண்மையிலேயே உத்வேகம் தரத்தக்க நிகழ்வு – கற்றல் அமர்வுகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன, சுற்றுலாத் துறையில் மதிப்புமிக்க திறன்கள் மற்றும் நுண்ணறிவுகளுடன் எங்களை இற்றைப்படுத்தியது”, என்று ஒரு பங்கேற்பாளர் கூறினார். “பூட்டான் மற்றும் மொங்கோலியா போன்ற நாடுகளின் அனுபவங்கள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ற தயாரிப்புகளை வெற்றிகரமாக தயாரிக்க ஊக்குவித்தமை என்பன எமக்கு உத்வேகமாக அமைந்தது, இலங்கைக்குள் சுற்றுலாவை எவ்வாறு திறம்பட மேம்படுத்துவது என்பது பற்றிய பயன்மிக்க ஆலோசனைகளை வழங்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலா சபை, சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனம், திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட ஹோட்டல் சங்கம், பாசிக்குடா ஹோம்ஸ்டே மாவட்ட சங்கம், கிழக்கு மாகாண சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வர்த்தக சம்மேளனம் உட்பட 100க்கும் மேற்பட்ட சிறு வர்த்தகர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.