காஸா மீதான இஸ்ரேலின் யுத்தம் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. இந்த யுத்தம் ஆரம்பமானதும் ‘இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும், அதற்கு இறைமையுள்ள பலஸ்தீனத்தின் உருவாக்கமே சரியான தீர்வாக அமையும்’ என்ற கருத்தும், இதனை அடிப்படையாகக் கொண்ட வலியுறுத்தல்களும் உலகளாவிய ரீதியில் மேலெழுந்துள்ளன. இப்போர் ஆரம்பமாவதற்கு முன்னர் அவ்வப்போது வலியுறுத்தப்பட்ட இவ்விடயம் தற்போது தொடராக வலியுறுத்தப்படுகின்றது.
பலஸ்தீன பிரச்சினையானது நேற்று இன்று தோற்றம் பெற்றதல்ல. முதலாம் உலகப் போரின் ஊடாக பலஸ்தீன் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் வந்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் ஆதர் பல்போர் 1917 நவம்பர் 02 ஆம் திகதி யூத தலைவர்களுக்கு எழுத்துமூலம் அளித்த உறுதிமொழிப்படி பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகளிலுள்ள யூதர்கள் பலஸ்தீனுக்குள் குடியேறத் தொடங்கினர். அதற்கு 1948 வரையும் பிரித்தானியா போதிய வாய்ப்புகளை அளித்தது.
இதன் விளைவாக பலஸ்தீனியர்கள் கட்டம் கட்டாக இருப்பிடங்களை இழக்கத் தொடங்கினர். இதற்கு எதிராக 1929 முதல் பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். ஆனால் 1947 வரையும் இவை எதுவும் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் 1947 இல் பலஸ்தீன மக்கள் பாரியளவில் வெளியேற்றத்திற்கு உள்ளாகினர். அதுவே ‘நக்பா’ என நினைவு கூரப்படுகிறது. இருப்பிடங்களை இழந்து வந்த பலஸ்தீனியர்கள் அகதிமுகாம்களில் தங்கும் நிலைக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீன், இஸ்ரேல் பிரச்சினைக்கு இரண்டு தனித்தனி நாடுகளின் வடிவத்தில் முதலாவது தீர்வை 1947 இல் வழங்கியது. இஸ்ரேல் யூதர்களின் நாடாகவும், பலஸ்தீன் அரேபியர்களின் நாடாகவும் இருக்குமெனவும் கூறப்பட்டது. இந்த அடிப்படையில் 1948 மே 15 இல் இஸ்ரேலை ஐ.நா. தனிநாடாக அங்கீகரித்தது. ஆனால் பலஸ்தீன் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்நிலையில் முதலாவது அரபு_ -இஸ்ரேல் யுத்தம் 1948 இல் நடைபெற்றது. அதன் பின்னர் 1967 இல் ஆறு நாட்கள் அரபு_ இஸ்ரேல் யுத்தம் இடம்பெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் இரு நாடுகள் தீர்வு வலியுறுத்தப்பட்டது. வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு அப்பால் மேற்குக் கரை, காஸா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளைக் உள்ளடக்கி சுதந்திர பலஸ்தீன இராச்சியத்தை உருவாக்கும் திட்டமாக அது முன்வைக்கப்பட்டது.
அதேநேரம் 1973 இல் மூன்றாவது அரபு-_இஸ்ரேல் போர் நடந்தது. அதன் பிறகு, அரபு நாடுகளுடன் இஸ்ரேலுக்கு நேரடிப் போர் நடக்கவில்லை. ஆனால் பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடரவே செய்கிறது. இந்த எல்லாப் போர்களிலும் பலஸ்தீனியர்கள் தங்கள் வாழிடங்களை இழந்து நிர்க்கதி நிலைக்கு உள்ளாகினர்.
ஐ.நா.வின் தரவுகளின்படி 23 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட காஸாவில் 18 இலட்சம் பேர் பலஸ்தீன அகதிகளாவர். அவர்கள் 08 பாரிய முகாம்களில் தங்கியுள்ளனர். மேற்கு கரையிலுள்ள 23 அகதி முகாம்களில் 08 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களும், பலஸ்தீனுக்கு வெளியே சிரியாவிலுள்ள 12 முகாம்களில் 5 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களும் லெபனானிலுள்ள 12 முகாம்களில் சுமார் 5 இலட்சம் பேரும் ஜோர்தானிலுள்ள 13 அகதி முகாம்களில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் என்றவாறு பலஸ்தீனர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
பலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினைக்கு ‘இரு நாடுகள் தீர்வு’ பல தடவை பரிந்துரைக்கப்பட்ட போதிலும் 1993 இல்தான் பலஸ்தீனமும் இஸ்ரேலும் முதன்முதலாக சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற இந்த ஒப்பந்தமே ஒஸ்லோ ஒப்பந்தமாக விளங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியை ஆள்வதற்கு பலஸ்தீன அதிகாரசபை உருவாக்கப்பட்டது. என்றாலும் இஸ்ரேல்-பலஸ்தீன் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக இல்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2023) ஒக்டோபரில் காஸா மீதான யுத்தம் ஆரம்பமானது முதல் காஸா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, ஜெரூஸலம் ஆகியவற்றை உள்ளடக்கி இறைமையுள்ள பலஸ்தீன் அமைக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இவ்வாறான சூழலில் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், ‘பலஸ்தீன மக்களுக்கான நாடு அமைக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதனை நிராகரிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை உட்பட உலகின் பல நாடுகளும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிலைப்பாட்டிலேயே உள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும், அணி சேரா நாடுகள் அமைப்பும் கூட அதனையே வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்திவ் மில்லர், ‘பலஸ்தீன நாடு இல்லாமல் இஸ்ரேலின் நீண்ட மற்றும் குறுகிய கால சவால்களை தீர்க்க வழி இல்லை. காஸாவை மீண்டும் கட்டியெழுப்புதல், காஸாவில் ஆட்சியை நிறுவுதல், பலஸ்தீனிய அரசை நிறுவாமல் காஸாவிற்கு பாதுகாப்பை வழங்குதல் போன்ற குறுகிய கால சவால்களை தீர்க்க அவர்களது நீண்ட கால சவால்கள் தீர்க்கப்பட வேண்டும். அதனை விடுத்து பாதுகாப்புக்கான நீண்ட கால சவால்களை தீர்க்க முடியாது.
அதனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இஸ்ரேல் நிறுவப்பட்டதில் இருந்து முகம்கொடுக்கும் சவால்களை சமாளிக்க ஒரு வரலாற்று வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த வாய்ப்பை இஸ்ரேல் பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இறைமையுடன் கூடிய பலஸ்தீனை உருவாக்கும் திட்டத்தை நிராகரித்த பிரதமர் நெதன்யாகு, பலஸ்தீனியப் பிரதேசங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடு முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என்றுள்ளார்.
இதேவேளை காஸாவின் எல்லையில் இருந்து காஸாவின் உட்பகுதியாக அரை மைல் தூரத்திற்கு யுத்த சூன்ய பிரதேசமொன்றை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் கொண்டுள்ளது. அத்திட்டத்தை நிராகரித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பேச்சாளர் ஜோன் கிர்பி, காஸாவின் நிலப்பகுதியை எந்த வகையிலும் குறைக்க நாம் ஆதரிக்க மாட்டோம். காஸாவின் நிலப்பகுதி குறைக்கப்படுவதை பார்க்க நாம் விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அத்தோடு ‘இரு நாட்டு தீர்வு என்பது இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமல்ல, பலஸ்தீனிய மக்களுக்கும் நல்லது. ஜனாதிபதி பைடனின் விருப்பத்தில் எதுவும் மாறவில்லை. இது பிராந்தியத்தின் சிறந்த நலன். அந்த இலக்கை நோக்கி செயல்படுவதை அமெரிக்கா நிறுத்தாது. பலஸ்தீனியர்கள் சுதந்திரமான அரசில் அமைதி மற்றும் பாதுகாப்போடு வாழ அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளனர் என நாங்கள் நம்புகிறோம். பலஸ்தீன மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காஸாவின் ஆட்சியை நாங்கள் விரும்புகிறோம்’ என்றும் கூறியுள்ளார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பேச்சாளர்.
இருந்த போதிலும் இரு நாட்டு கொள்கையைக் கடுமையாக எதிர்த்துவரும் இஸ்ரேல், இப்போர் தொடங்கிய சொற்ப காலம் முதல் காஸா மக்களை வேறு நாடுகளுக்கு இடம் மாற்றும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு சில ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால் அந்த ஆபிரிக்க நாடுகள் அவ்வாறான எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை என மறுத்த அதேநேரம் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பின. அத்தோடு மௌனம் காத்த இஸ்ரேல், பலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினைக்கு தீர்வு யோசனையை ஐரோப்பிய ஒன்றியம் இருநாட்டு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேல், மத்திய தரைக்கடலில் செயற்கையாகத் தீவொன்றை அமைத்து அங்கு பலஸ்தீனர்களை குடியமர்த்துமாறு குறிப்பிட்டுள்ளது. இந்த யோசனைக்கும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
பலஸ்தீனில் இருந்து பலஸ்தீனியர்களை வெளியேற்றும் வகையில் இஸ்ரேல் முன்வைக்கும் அனைத்துத் திட்டங்களையும் பலஸ்தீன அதிகார சபை நிராகரித்துள்ளதோடு, பலஸ்தீன் நிலத்தின் சொந்தக்காரர்கள் நாமே. அதன் விடுதலைக்காகவே நாம் போராடுகிறோம்’ என்று ஹமாஸின் அரசியல் குழு உறுப்பினர் ஒஸமா ஹம்தான் குறிப்பிட்டுள்ளார்.
இறைமையுள்ள பலஸ்தீனை உருவாக்கும் திட்டத்தை இஸ்ரேல் எதிர்ப்பதை, பிரித்தானியா, ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றுள்ளது.
எனினும் இந்த யுத்தம் நிறுத்தப்பட்டு பல தசாப்தங்களாக நீடித்துவரும் பலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு இறைமையுள்ள பலஸ்தீன் உருவாக்கம் இன்றியமையாததாகும். மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.
மர்லின் மரிக்கார்