ஆடவர் கிரிக்கெட்டை விடவும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் பலமானது. அதனை சாய்ப்பது எதிரணிகளுக்கு சவாலானது. என்றாலும் இலங்கை மகளிர் அணி அத்தனை வலுவான அணியாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் சமரி அத்தபத்து என்ற ஒரே ஒருவர் ஒட்டுமொத்த இலங்கை அணியையும் வலுவான அணியாக மாற்றிய கதை உலகறிந்தது.
கடந்த 2023 ஜூன், ஜூலை மாதங்களில் இலங்கை வந்த நியூசிலாந்து மகளிர் அணி ஆடிய ஒருநாள் தொடரில் சமரி அத்தப்பத்துவை சமளிப்பது பெரும்பாடாகிப் போனது.
முதல் ஒருநாள் போட்டி மழையால் 28 ஓவர்களுக்கு மட்டுப்பட நியூசிலாந்து 172 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ஆரம்ப வீராங்கனையாக வந்த சமரி பந்தை பெளண்டரிகள், சிக்ஸர்கள் விளாச 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணியால் வெல்ல முடிந்தது. அத்தபத்து 83 பந்துகளில் 10 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை விளாசினார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் சமரியை பூஜ்யத்திற்கு வெளியேற்றிய நியூசிலாந்து அந்தப் போட்டியில் வெற்றியீட்டியது. ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 29 ஓவர்களில் 196 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை வீராங்கனைகள் 6 ஓட்டங்களுக்கே முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தனர். ஆனால் ஒரு முனையில் இருந்த சமரி ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பினார். ஆட்டமிழக்காது 80 பந்துகளில் 13 பெளண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 140 ஓட்டங்களை விளாசினார்.
இதனால் இலங்கை மகளிர் அணி அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மாத்திரமல்ல வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
உண்மையில் கடந்த அரைத் தசாப்தத்திற்கு மேலாக இலங்கை மகளிர் கிரிக்கெட் என்பது சமரி அத்தப்பத்துவை சுற்றியே இயங்கி வருகிறது. அவரது திறமை ஏனைய வீராங்கனைகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது, விதிவிலக்கானது.
இடது கை வீராங்கனையான அவரது துடுப்பாட்டம் மிக நேர்த்தியானது. எந்த பிசகும் இல்லாமல் பந்தை பெளண்டரிக்கு செலுத்தக் கூடியவர். லாவகமாக சிக்ஸர் அடிப்பார்.
அவர் இதுவரை படைத்திருக்கும் சாதனைகள் இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் வேறு எவரும் தொடாதது. ஒருநாள் துடுப்பாட்டத்தில் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீராங்கனை வரிசையில் முதல் 10 இடங்களிலுமே சமரி அத்தபத்துதான் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டிலும் இதே கதைதான்.
33 வயதான சமரி இதுவரை 98 ஒருநாள் போட்டிகளில் 3255 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு இதிலே எட்டு சதங்கள் மற்றும் 15 அரைச்சதங்கள் அடங்கும். ஓட்ட சராசரி கூட 34.26 என சிறப்பாக உள்ளது. மகளிர் டி20 சர்வதேச போட்டியில் இதுவரை 122 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 2651 ஓட்டங்களை பெற்றிருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் 8 அரைச்சதங்கள் அடங்கும்.
இப்போது சர்வதேச மட்டத்தில் லீக் டி20 தொடர்களிலும் சமரியின் கிராக்கி அதிகரி த்திருக்கிறது. கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த மகளிர் பிக் பாஷ் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் அவரால் இரண்டாவது இடத்தை பிடிக்க முடிந்தது. பின்னர் நியூசிலாந்தின் மகளிர் சுப்பர் ஸ்மாஷ் தொடரிலும் சோபித்தார்.
இந்தியாவின் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்ற அவர் விலைபோகாதது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இப்போது அவர் மாற்று வீராங்கனையாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
யுபி வொரியர்ஸ் அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த வெளிநாட்டு வீராங்கனை லோரன் பெல் விலகியதால் அந்த இடத்தில் அவரது அடிப்படை விலையான இந்திய நாணயத்தில் 30 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது எல்லாவற்றுக்கும் உச்சமாக சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் அவரை ஐ.சி.சி சிறந்த ஒருநாள் வீரங்கனையாக அறிவிக்கப்பட்ட சமரி, ஐ.சி.சி. ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைவியாகவும் பெயரிடப்பட்டார்.
சமரி அத்தபத்து என்பவர் இப்போது சர்வதேச தரம் வாய்ந்த வீராங்கனை. மகளிர் கிரிக்கெட்டில் அவர் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. அவரது திறமை என்பது இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் திருப்பமாக மாறினால், மாற்றிக் கொண்டாலே உச்சம் பெறும். அதனை புரிந்து அவரை பயன்படுத்திக் கொள்வது அவசியம்.