சமூக வலைத்தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது நாட்டில் அனைவரதும் எதிர்பார்ப்பு என்பதுடன் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்தும் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. எனினும் எந்த வகையிலும் நாட்டு மக்களுக்கான தகவல் சுதந்திரத்தை அல்லது உண்மையை அறியும் சுதந்திரத்தை இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலமானது இல்லாது ஒழித்து விடக்கூடாது என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு.
இத்தகைய பின்னணியிலேயே அந்த சட்டமூலத்தை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் முழுமையாக அதில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதால் குறித்த சட்டமூலம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 46 மேலதிக வாக்குகளால் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 46 மேலதிக வாக்குகளால் சட்ட மூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது. வாக்களிப்பின்போது 54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் கடந்த செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்களாக சபையில் இடம்பெற்றது.
இரண்டாவது நாள் இடம்பெற்ற விவாதத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. வாக்கெடுப்பைக் கோரினார். அதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே 46 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் இரண்டாவது தின விவாதத்துக்குப் பின்னர் நிறைவடைந்ததுடன் அதனைத்தொடர்ந்து சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற ஆளும் கட்சி நடவடிக்கை எடுத்தது. அவ் வேளையில் சில திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவதாகவும், அரசாங்கம் முறைமைகளை மீறி அந்த திருத்தங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கோசமெழுப்பினர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அவ் வேளையில் தெளிவுபடுத்திய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, சட்ட மாஅதிபர் மற்றும் சட்ட வரைபாளர்களின் இணக்கப்பாடு மற்றும் அனுமதியுடனேயே இந்த திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தின்படியே இவை முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கே சட்ட மாஅதிபரும் இருக்கின்றார். அதற்கிணங்க இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை என்றார்.
எவ்வாறாயினும் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் செயற்பாட்டை கடுமையாக எதிர்த்து ஒழுங்குப் பிரச்சினைகளை முன்வைத்தனர். ஆனால் ஆளும் கட்சியினர் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டதால் அமளிதுமளி ஏற்பட்டது. இதன்போது படைக்கள சேவிதர்கள் உள்ளிட்டோர் செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்கினர்.
அதேவேளை சபை முதல்வர் திருத்தங்களை முன்வைக்க ஆளும் கட்சியின் எம்.பிக்கள் அவரை சூழ்ந்துகொண்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கி அவரைத் தொடர்ந்தும் திருத்தங்களை முன்வைக்க உதவினர். எனினும் சபையில் எதிர்க்கட்சியினர் சபைக்கு மத்தியில் வந்து தமது கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருத்தங்கள் முன் வைக்கப்பட்டு சட்ட மூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது
அமைச்சர் பந்துல குணவர்தன
குரோதம், வைராக்கியம் மற்றும் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது உண்மையை உரிய வகையில் முன்னெடுக்கும் சமூக ஊடக கலாசாரத்திற்கு இடமளிப்பது அவசியம் .
சமூக ஊடகத்தின் செயற்பாடுகள் முக்கியமானவை. எனினும் சமூகத்தில் இரு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பினர் மிகவும் சிறந்த முறையில் இந்த சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர். அவர்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் இந்த ஊடகங்களை உபயோகிக்கின்றனர். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் அவ்வாறான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. அந்த வகையில் சிறந்த வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்களுக்கு இடமளிப்பதுடன் குரோதம், வைராக்கியம் மற்றும் மத ரீதியான மோதல்களுக்கு வழிவகுக்கும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.
ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார:
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது அவசரமாக கொண்டு வரப்படும் ஒரு சட்டமூலம் அல்ல. கொண்டு வரப்படும் சட்டமூலத்தில் ஏதாவது குறைபாடுகள் காணப்பட்டால் திருத்தங்களை மேற்கொண்டு அதனை பின்னர் நிறைவேற்ற முடியும்.
இந்த சட்டமூலம் அரசாங்கத்தினால் அவசரமாக கொண்டு வரப்படும் சட்டமூலம் என தெரிவிப்பது தவறானது. இது அனைவரும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டிய விடயம்.
இந்த சட்ட மூலம் முதல் தடவையாக 2016ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே அதற்கான குழு அமைக்கப்பட்டது. அதற்கிணங்க 2021ஆம் ஆண்டு ஊடகத்துறை அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து அது தொடர்பில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது முக்கியமான சட்டமூலமொன்று. நாட்டில் எங்கும் வாழும் மக்கள் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா எனக் கேள்வி எழுப்புகின்றனர். அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் சட்டங்களை கொண்டு வரவில்லை என்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் கேள்வி கேட்கின்றனர். அந்த வகையில் இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் காணப்பட்டால் திருத்தங்களை மேற்கொண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும்.
ஸ்ரீதரன் எம்பி
கண்களை மூடிக்கொண்டு சட்டங்களை கொண்டு வர முயன்றால் அவ்வாறான செயற்பாடுகள் நாட்டை அதலபாதாளத்திற்கே கொண்டு செல்லும்.
1978ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதன் விளைவை சிங்கள மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதை சுட்டிகாட்டிய அவர், அரகலயவுக்கு பின்னர் தான் புதிய சட்டம் கொண்டு வர கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், பூனை கண்களை மூடிக் கொண்டு பால் குடிப்பதை போன்று கண்களை மூடிக் கொண்டு சட்டங்களை கொண்டு வந்தால் அது நாட்டை அதலபாதாளத்துக்கே கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பன பாரதூரமானவை என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சட்டங்களை கொண்டு வருவதற்கான காரணத்தை ஆழமாக ஆராய வேண்டும். கடந்த 80 வருடங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடிப் போயுள்ள தமிழ், – சிங்கள முரண்பாடு மற்றும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள பெரும்பான்மை தலைவர்கள் தவறியுள்ளார்கள் என்பதை வரலாற்றுச் சம்பவங்கள் சான்றுப்படுத்தியுள்ளன. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சந்தர்ப்பத்தை அரச தலைவர்கள் புறக்கணித்துள்ளார்கள். ஒருவரது ஆட்சியை பிற தரப்பு எதிர்ப்பதும், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த காலத்தை விமர்சிப்பதும் இந்த நாட்டில் பெரும் அநியாயமாக காணப்படுகிறது. ஆகவே இந்த உயரிய சபை பல மனிதர்களையும், எண்ணங்களையும், கண்டுள்ளது.
தமது கருத்தை பொது வெளியில் பதிவு செய்யும் உரிமை மக்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனி மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் இந்த சட்டமூலத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன,
ரவூப் ஹக்கீம் எம்பி
சமூக வலைத்தளங்கள் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களைத் தடுத்து அரசாங்கத்தின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான துரும்பாகவே நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை அரசாங்கம் பயன்படுத்த முயற்சிக்கின்றது. சமூக வலைத்தளங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையிலேயே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களை தடுப்பதற்கு இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் சட்டமூலத்தில் காணப்படும் 57 பிரிவுகளில் 2 பிரிவுகளில் மாத்திரமே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏனைய அனைத்து விடயங்களும் வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வலைத்தளங்கள் ஊடாக தகவல் பரிமாறிக்கொள்ளும் விடயங்கள் தொடர்பிலுமே காணப்படுகிறது. அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றதையும் குறிப்பிட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடியவகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். ஊடகங்களுக்கு முகாமைத்துவமும், ஊடக கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சட்டதிட்டங்கள் கடுமையானதாக இருந்தாலும் ஊடகங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகள் அவசியம்.
எனது மூத்த மகளின் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர். அரிசி, தேங்காய் போன்ற சமையறையில் இருந்த பொருட்களையே கொண்டு சென்றுள்ளனர். எனக்கு கட்டாரில் அரச தலைவருக்காக வழங்கப்பட்ட பரிசொன்றை பொலனறுவை நூதனசாலையில் வைத்துள்ளேன். ஆனால் ஊடகமொன்றில் காலையில் பத்திரிகை செய்தி வாசிக்கும் போது அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பரிசை தனது மகளின் வீட்டில் வைத்திருந்ததாக கூறியுள்ளார். அது பொய்யாகும். எனக்கு கிடைத்த பொருட்களை நான் நூதனசாலையிலேயே வைத்துள்ளேன். ஆனால் ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தவறானவையாக உள்ளன. இதனை மாற்ற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திகனவில் கலவரம் ஏற்பட்ட போது ஒருவாரத்துக்கு சமூக வலைத்தளங்களை முடக்கினேன். இல்லையென்றால் கலவரம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும். எவ்வாறாயினும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். ஊடக ஒழுங்குமுறை கட்டுப்பாடு அவசியமாகும். இல்லையென்றால் ஊடக உரிமையாளர்களே நாட்டை நிர்வாகம் செய்யும் நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அவசியமாகும் .
எனினும் அது தனி மனித சுதந்திரத்தையோ கருத்துச் சுதந்திரத்தையோ மக்கள் தகவல்களை சுதந்திரமாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையையோ இல்லாதொழித்து விடக்கூடாது. அந்த வகையில் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் மூலம் நடைமுறைக்கு வரும் போது, அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனமாக செயல்படுவது முக்கியம் என்பதே யதார்த்தமாகும்.