ஐக்கியத்தை விரும்பும் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தம்முடன் இணைந்து கைகோர்த்துப் பயணிக்க தாம் வரவேற்பதாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
“தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரனுக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வாழ்த்து தெரிவிக்கின்றது. தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு இராஜவரோதயம் இராசமாணிக்கம், வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரால் தலைமை தாங்கப்பட்டு, தமிழ் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.
தமிழரசுக் கட்சி தனித்துநின்று தனது கோரிக்கைகளை வெல்ல முடியவில்லையென்ற காரணத்தால் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியென்ற அமைப்பை உருவாக்கிய பாரம்பரியமும் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பதவியேற்ற பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தை பற்றி பிரஸ்தாபித்திருப்பதை நாம் வரவேற்பதுடன், இலங்கை தமிழரசுக் கட்சி எம்முடன் இணைந்து பயணிக்க முன்வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இந்நிலையில் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோரை ஒன்றிணைத்து 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் தீர்க்கமான சிந்தனையுடன் பயணிக்கின்றது. இதன் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு முன்னர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டு, அது இன்றுவரை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் புதிய புதிய அமைப்புகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து, ஏற்கெனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென்று விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.