விளையாட்டாய் தொடங்கி
விபரீதமாய் ஆகிடும்
வினைகளின் மொத்தமாய்
வில்லங்கம் எகிறிடும்
நிந்தனைகளின் நெருக்குதலால்
சிந்தனைகள் சீரழிந்திடும்
வந்தனங்களின் வலுவிழப்பால்
வரலாறும் மாறிடும்
நிர்க்கதிகள் நிலையாகி
துர்க்குணங்கள் தொடராகிடும்
நற்குணங்கள் நலமிழந்து
நற்பெயரும் புதைந்திடும்
நிதானங்கள் நிர்மூலமாகி
அவதானங்கள் அல்லலாகிடும்
அவதாரம் அர்த்தமற்று
அழிவுகள் அண்மித்திடும்
செய்கையில் சீற்றமும்
பொய்யில் துர்நாற்றமும்
தோன்றிடும்
வாய்மையில் கேலியும்
வாழ்க்கையில் தோல்வியும் ஏறிடும்
வெட்கம் கேள்வியாகி
தர்க்கம் தழைத்திடும்
சொர்க்கம் இதிலென்ற
சொப்பனமும் பிழைத்திடும்
ஏளனங்கள் சூழ்ந்து
ஏகாந்தநிலை முகாமிடும்
வாழணும் எனும் நிலைமாறி
வாழ்வும் சரிந்திடும்
தொட்டிலில் மகிழ்ந்தது – பாடை
கட்டிலில் விழுந்திடும்
விட்டில் பூச்சியாய் வாழ்க்கை
விரைந்தே முடிந்திடும்.