கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற 02 விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதன் காரணமாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை முழுமையாக ஆராய்ந்து தீர்வுகளை முன்மொழிவதற்காக நாளை 29ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கூட்டமொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இவ்விசேட கூட்டத்தை கூட்டுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கோவிட் 19 தொற்றுக்காலத்தில் நாடு மூடப்பட்டிருந்த போது கட்டுநாயக்கா நெடுஞ்சாலையில் 250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய செப்புக் கம்பியிலான கட்டமைப்பின் கம்பிகளை திருடர்கள் வெட்டிச் சென்றதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செப்புக் கம்பிகளுக்கு பதிலாக அலுமினியக் கம்பிகளை பயன்படுத்தி மீண்டும் கெரவலப்பிட்டியிலிருந்து மின்சாரத்தை விநியோகிக்கும் செயல்முறையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.